Fortuner Price Hike: நல்லா தானே போய்ட்டு இருந்துச்சு.. எகிறிய ஃபார்ட்சுனரின் விலை, எவ்வளவு தெரியுமா? என்ன காரணம்?
Toyota Fortuner SUV Price Hike: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஃபார்ட்சுனர் எஸ்யுவியின் சில வேரியண்ட்களுக்கான விலையை உயர்த்தி, டொயோட்டா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Toyota Fortuner SUV Price Hike: ஃபார்ட்சுனர் எஸ்யுவியின் எந்தெந்த வேரியண்ட்களுக்கான விலை எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
ஃபார்ட்சுனர் விலையை உயர்த்திய டொயோட்டா
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டொயோட்டா நிறுவனம் தனது ஃபார்ட்சுனர் கார் மாடலின் குறிப்பிட்ட சில வேரியண்ட்களின் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது. ரூ.44.47 லட்சம் மதிப்பிலான மைல்ட் ஹைப்ரிட் ஃபார்ட்சுனர் ரேஞ்ச் எடிஷன் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, இந்த விலை உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 3 வரிசை இருக்கை அமைப்பை கொண்ட காரின் விலை தற்போது அதிகபட்சமாக ரூ.68 ஆயிரம் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட விலை உயர்வானது, எஸ்யுவியின் ஸ்டேண்டர்ட் எடிஷன் மற்றும் ஃபார்ட்சுனர் லெஜண்டர் ரேஞ்சிற்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபார்ட்சுனர் விலை - எவ்வளவு உயர்வு?
ஃபார்ட்சுனரின் 4X2 பெட்ரோல் ஆட்டோமேடிக் வேரியண்டானது 68 ஆயிரம் ரூபாய் விலை உயர்வை எதிர்கொண்டுள்ளது. இந்த விலை உயர்வு நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள அதிகபட்ச ஏற்றம் இதுவாகும். இதுபோக 4X2 டீசல் மேனுவல், 4X2 டீசல் டீசல் ஆட்டோமேடிக், 4X4 டீசல் மேனுவல், GR-S, 4X4 டீசல் மேனுவல் லெஜண்டர் மற்றும் 4X4 டீசல் ஆட்டோமேடிக் லெஜண்டர் கார் மாடல்களின் விலை ரூ.40 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட நடவடிக்கைக்குப் பிறகு, ஃபார்ட்சுனர் எஸ்யுவி கார் மாடலின் விலை வரம்பு, ரூ.36.05 லட்சத்தில் தொடங்கி ரூ.52.34 லட்சம் வரை நீள்கிறது.
ஃபார்ட்சுனர் - இன்ஜின் விவரங்கள்
ஃபார்ட்சுனர் எஸ்யுவி கார் மாடலானது 2.7 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. சிக்ஸ் ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் கியராக்ஸ் ஆப்ஷன்களும் உள்ளன. டொயோட்டோவின் 4X4 ட்ரைவ் ட்ரெயின் மற்றும் லெஜண்டர் வேரியண்ட்கள் டீசல் இன்ஜினில் மட்டுமே வழங்கப்படுகின்றன. ஃபார்ட்சுனர் கார் மாடல் ஒட்டுமொத்தமாக, லிட்டருக்கு சுமார் 11 முதல் 14 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக வாடிக்கையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
விலை உயர்வு ஏன்?
விலை உயர்வுக்கான காரணம் எதையும் டொயோட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. ஆனால், புதிய 48-வோல்ட் மைல்ட் ஹைப்ரிட் வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. புதிய நியோ டிரைவ் டீசல் வகைகள் பெல்ட்- இண்டகிரேடட் ஸ்டார்டர் ஜெனரேட்டர், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் மற்றும் ஐடில் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளன. இது வெறும் மெக்கானிக்கல் மேம்பாடுகள் மட்டுமல்ல. அவை 360 டிகிரி கேமரா மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்களையும் புதியதாக பெறுகிறது. இது உற்பத்தி மற்றும் உதிரி பாகங்களுக்கான விலை உயர்வுக்கு வழிவகுக்கின்றன. அதன் விளைவை பயன்ர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதிகப்படியான பணவீக்க அழுத்தங்கள் மற்றும் உள்ளீட்டு செலவுகளும் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.
மைல்ட் ஹைப்ரிட்டில் ஃபார்ட்சுனர்:
ஃபார்ட்சுனர் எஸ்யுவியில் அண்மையில் தான் டொயோட்டா நிறுவனம், 48V ஹைப்ரிட் பவர்ட்ரெயின் ஆப்ஷனை அறிமுகப்படுத்தியது. லேடர் ஃப்ரேம் அடிப்படையிலான தனது வாகனங்களை மின்மயமாக்குவதற்கான முதல் நடவடிக்கையாக ஃபார்ட்சுனர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இனி வரும் காலத்தில் லேடர் ஃப்ரேம் கொண்ட நிறுவனத்தின் மற்ற வாகனங்களான இன்னோவா க்ரிஷ்டா மற்றும் ஹிலக்ஸ் ஆகியவையும் மைல்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பமானது ஹிலக்ஸ் பிக்-அப் வாகனத்தில் பொருத்தப்பட்டு, கடந்த ஆண்டு தென்னாப்ரிக்காவில் முதல்முறையாக காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.





















