EV Car Sale: இன்ஜின் கார்னா தான் மாருதி, மின்சார எடிஷன்னு வந்துட்டா நாங்க தான் கெத்து - மிரட்டலான விற்பனை
EV Car Sale: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஜுலை மாதத்தில் அதிக மின்சார கார்களை விற்பனை செய்த நிறுவனங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

EV Car Sale: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஜுலை மாதத்தில் அதிக மின்சார கார்களை விற்பனை செய்த நிறுவனங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
மின்சார கார் விற்பனை:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் ஜுலை மாத கார் விற்பனையில், வழக்கம்போல மாருதி சுசூகி நிறுவனம் முதலிடம் பிடித்து அசத்தியது. அதேநேரம், மின்சார கார்கள் பிரிவை மட்டும் கருத்தில் கொண்டால் இந்த புள்ளி விவரங்கள் தலைகீழாக மாறுகின்றன. கடந்த ஆண்டின் ஜுலை மாதத்தில் விற்பனையானதை காட்டிலும், 91 சதவிகிதம் அதிகரித்து கடந்த ஜுலை மாதத்தில் 15 ஆயிரத்து 300 மின்சார கார்கள் விற்பனையாகியுள்ளன. ஜுன் மாதத்தை காட்டிலும் 10 சதவிகித கூடுதல் விற்பனை பதிவாகியுள்ளது. ஜுலை மாதத்தில் அதிக மின்சார வாகனங்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில், டாடா நிறுவனம் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.
EV விற்பனையில் அசத்தும் டாடா:
டாடா நிறுவனம் கடந்த மாதத்தில் 6 ஆயிரத்து 19 மின்சார கார்களை விற்பனை செய்து, அந்த பிரிவில் 40 சதவிகித பங்களிப்பை உறுதி செய்துள்ளது. இந்திய சந்தையில் ஒரு மாதத்தில் விற்பனையான அதிகபட்ச மின்சார வாகனங்களின் எண்ணிக்கை இதுவாகும். நிறுவனத்தின் புதிய ஹாரியர் மின்சார எடிஷனின் அறிமுகமும் இந்த விற்பனை மேம்பட முக்கிய பங்கு வகித்துள்ளது. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான மின்சார கார்கள்அடங்கிய போர்ட்ஃபோலியோவை பெற்றுள்ள நிறுவனமாகவும் டாடா திகழ்வது குறிப்பிடத்தக்கது.
மாஸ் காட்டும் எம்ஜி
அதேநேரம், MG நிறுவனம் கடுமையாக போட்டியளித்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 5 ஆயிரத்து 13 யூனிட்களை விற்பனை செய்து, சந்தை பங்களிப்பில் 33 சதவிகிதத்தை வசப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் விண்ட்சர் மற்றும் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ப்ரீமியம் கார் மாடல்களான M9 மற்றும் சைபர்ஸ்டர் ஆகியவை விற்பனை மேம்பட உதவியுள்ளன. நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் அதிகம் விற்பனையான மின்சார கார் மாடலாக, விண்ட்சர் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி, 19 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.
மஹிந்திராவின் செயல்பாடு எப்படி?
மஹிந்திரா நிறுவனமும் இந்த பிரிவில் தொடர்ந்து சீரான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது.
புதிய மின்சார வாகனங்களின் வருகையால், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான 2,789 யூனிட்களை காட்டிலும், இந்த பிராண்ட் வியக்கத்தக்க வகையில் நடப்பாண்டில் 435 சதவிகிதம் அதிகரிப்பைக் கண்டுள்ளது. இருப்பினும், ஜூன் மாத எண்ணிக்கையிலிருந்து 13 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. மாதாந்திர போக்கு வரிசையில் சில திருத்தங்களைக் கொண்டு வந்தது. நடப்பாண்டில் ஜுலை மாதம் வரையிலான மின்சார கார் விற்பனையில் மஹிந்திரா நிறுவனம் 21.6 சதவிகித சந்தை பங்களிப்பை கொண்டுள்ளது.
டாடா மற்றும் JSW MG நிறுவனக்கள் மின்சார வாகன பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், XUV400 உடன் மஹிந்திராவின் ஆக்ரோஷமான முன்னேற்றம், XEV 9e மற்றும் BE6 கார்களின் நிறுவனத்தின் விற்பனையை அதிகரித்து, பிரிவில் உள்ள முன்னணி நிறுவனங்களுக்கு கடும் சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின்சார கார் விற்பனை விவரம்:
- டாடா மோட்டார்ஸ் - 6,019 யூனிட்கள்
- எம்ஜி மோட்டார் - 5,061 யூனிட்கள்
- மஹிந்திரா - 2,810 யூனிட்கள்
- ஹுண்டாய் - 610 யூனிட்கள்
- பிஒய்டி இந்தியா - 457 யூனிட்கள்
- கியா - 57 யூனிட்கள்
- சிட்ரோயன் - 41 யூனிட்கள்
ப்ரீமியம் மின்சார கார் விற்பனை விவரம்:
- பிஎம்டபள்யூ - 233 யூனிட்கள்
- மெர்சிடஸ் பென்ஸ் - 85 யூனிட்கள்
- வால்வோ - 41 யூனிட்கள்
- போர்ஷே - 6 யூனிட்கள்
- ரோல்ஸ் ராய்ஸ் - 2 யூனிட்கள்
- ஹவுடி - 1 யூனிட்





















