ADAS Tech Car: பாதுகாப்பை உறுதி செய்யும் ADAS தொழில்நுட்பம்.. டாப் 5 கார்களின் பட்டியல் இதோ..!
ஓட்டுனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ADAS தொழில்நுட்பத்துடன் மலிவு விலையில், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டாப் - 5 கார்களின் விவரங்களை இங்கு அறியலாம்.
ஓட்டுனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ADAS தொழில்நுட்பத்துடன் மலிவு விலையில், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டாப் - 5 கார்களின் விவரங்களை இங்கு அறியலாம்.
ADAS தொழில்நுட்பம்:
முன்பெல்லாம் கார் வாங்க முயலும்போது, சொகுசாக நீண்ட தூரம் பயணிக்க ஏதுவான வசதிகளை கொண்டுள்ளதா என்பன போன்ற அடிப்படையாக ஆராயப்பட்டன. ஆனால், தற்போது கார் வாங்கும்போது முக்கிய கவனம் பெறுவது அதில் இடம்பெற்றுள்ள பாதுகாப்பு அம்சங்களே. அந்த வகையில் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் அறிமுகப்பட்டது தான் ADAS தொழில்நுட்பம். advanced driver-assistance system என்பதே ADAS தொழில்நுட்பத்தின் விரிவாக்கம். வாகனம் ஓட்டுதல் மற்றும் பார்க்கிங் செயல்பாடுகளில் ஓட்டுனர்களுக்கு உதவும் மின்னணு தொழில்நுட்பங்களின் தொகுப்பு தான் இது. இதன் மூலம், கார் பார்க்கிங் மற்றும் சாலை பயணத்தின் போது பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தொழில்நுட்பத்துடன் மலிவு விலையில் இந்திய சந்தையில் விற்பனையாகும் 5 கார்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஹோண்டா சிட்டி:
ஹோண்டா நிறுவனம் தனது சிட்டி கார் மாடலின் 5வது தலைமுறையை மேம்படுத்தும்போது அதில் ADAS தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. இதனால், அந்த தொழில்நுட்பத்துடன் இந்திய சந்தையில் மலிவு விலையில் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் ஹோண்டா சிட்டி கார் முதலிடத்தை வகிக்கிறது. ஹோண்டா சிட்டி காரின் அடிப்படை விலை ரூ.11.57 லட்சம். ஆனால், ஹோண்டா சிட்டியின் V வேரியண்டில் இருந்து தான் ADAS தொழில்நுட்ப அம்சம் இடம்பெறுகிறது. இதன் விலை ரூ.12.45 லட்சம் ஆகும்.
ஹுண்டாய் வெர்னா:
ஹுண்டாய் நிறுவனம் அண்மையில் தான் தனது புதிய தலைமுறை வெர்னா கார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. செடான் வகையிலான இந்த காரின் உட்புற மற்றும் வெளிப்புற அமைப்புகள் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்த கார் மாடலில் SX(O) வேரியண்டில் இருந்து தான் ADAS தொழில்நுட்ப அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.14.66 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
MG Astor:
எம்ஜி நிறுவனத்தின் ZS மின்சார வாகனத்தில் இண்டர்னல் கம்பஸ்டன் இன்ஜினை கொண்ட கார் மாடல் தான் ஏஸ்டர். இதன் தொடக்க விலை ரூ.10.82 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், ADAS தொழில்நுட்ப அம்சம் அடங்கிய வேரியண்டின் விலை ரூ.17 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
Honda City e: HEV
ஹோண்டா சிட்டி மட்டுமே இந்திய சந்தையில் ஹைபிரிட் பவர்டிரெயினுடன் விற்பனை செய்யப்படும் ஒரே செடான் மாடல் கார். இந்த கார் இரண்டு வேரியண்ட்களில் இந்திய சந்தையில் கிடைக்கும் நிலையில், சிட்டி ஹைப்ரிட் மாடலில் ADAS தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. இதன் விலை ரூ.18.89 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கியா செல்டோஸ்:
அண்மையில் மேம்படுத்தப்பட்ட செல்டோஸ் கார் மாடலில், X லைனில் வரும் வேரியண்ட்களில் தான் கியா நிறுவனம் ADAS தொழில்நுட்ப அம்சத்தை வழங்கியுள்ளது. இதன் விலை ரூ.20 லட்சத்தில் இருந்து தான் தொடங்குகிறது.