பெட்ரோல் செலவ மிச்சப்படுத்துங்க; நாட்டின் டாப் 5 CNG SUV கார்கள்- இதோ லிஸ்ட்!
நாட்டின் டாப் 5 CNG SUV கார்கள் என்னென்ன? அவற்றின் ரேஞ்ச், வடிவமைப்பு மற்றும் விலை விவரங்கள் இதோ!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தொடர்ச்சியான பெட்ரோல் விலை ஏற்ற இறக்கங்களால், நடுத்தர வர்க்க வாடிக்கையாளர்கள் அதிக மைலேஜ் தரும் சிஎன்ஜி கார்களை நோக்கித் திரும்பியுள்ளனர்.
அதிலும் குறிப்பாக சிறப்பான இடவசதி மற்றும் பாதுகாப்பு நிறைந்த எஸ்யூவி ரக சிஎன்ஜி கார்களுக்கு தற்போது மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. சந்தையில் விற்பனையாகும் டாப் 5 சிஎன்ஜி எஸ்யூவி கார்களின் வடிவமைப்பு, ரேஞ்ச் மற்றும் விலை விவரங்கள் இதோ.
1. மாருதி ஃபிராங்க்ஸ் சிஎன்ஜி:
கூபே எஸ்யூவி வடிவமைப்பில் ஸ்போர்ட்டியான தோற்றத்தைக் கொண்டுள்ள இந்த கார், பிரம்மாண்ட முன்பக்க கிரில் மற்றும் கனெக்டட் எல்இடி டெயில் லேம்ப்களுடன் கவர்ச்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. 1.2 லிட்டர் இன்ஜின் கொண்ட இது ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 28.51 கி.மீ மைலேஜ் தருகிறது. இதன் ஆரம்ப எக்ஸ் ஷோரூம் விலை ரூ.8.46 லட்சமாகும்.
2. மாருதி பிரெஸ்ஸா சிஎன்ஜி:
உறுதியான பாக்ஸி தோற்றம், 16 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் டூயல் எல்இடி ஹெட்லேம்ப்களுடன், சிறப்பான இடவசதியை இந்த கார் கொண்டுள்ளது. 1.5 லிட்டர் இன்ஜின் கொண்ட பிரெஸ்ஸா சிஎன்ஜி மாடல் ஒரு கிலோவிற்கு 25.51 கி.மீ ரேஞ்ச் வழங்குகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.29 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
3. டாடா நெக்ஸான் சிஎன்ஜி:
நவீன எல்இடி டிஆர்எல்கள் மற்றும் பிரீமியம் தோற்றத்துடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் டர்போ-பெட்ரோல் சிஎன்ஜி காரான இதில், பூட் ஸ்பேஸை மிச்சப்படுத்தும் அதிநவீன 'ட்வின் சிலிண்டர்' தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது.
இது தோராயமாக 24 கி.மீ மைலேஜ் வழங்கும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.99 லட்சத்தில் தொடங்குகிறது.
4. டாடா பஞ்ச் சிஎன்ஜி:
மைக்ரோ எஸ்யூவி வடிவமைப்பில் கம்பீரமான முன்புறத் தோற்றம், 90 டிகிரி திறக்கும் கதவுகள் என ஈர்க்கும் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதிலும் ட்வின் சிலிண்டர் தொழில்நுட்பம் உள்ளது.
பஞ்ச் சிஎன்ஜி ஒரு கிலோவிற்கு 26.99 கி.மீ ரேஞ்ச் சிறப்பாக வழங்குகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.23 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5. ஹூண்டாய் எக்ஸ்டர் சிஎன்ஜி:
'H' வடிவ எல்இடி டிஆர்எல்கள் மற்றும் ஸ்போர்ட்டியான மைக்ரோ எஸ்யூவி வடிவமைப்பைக் கொண்டுள்ள இந்த காரில் தற்போது டூயல் சிலிண்டர் வசதி புதிதாக வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு கிலோவிற்கு 27.1 கி.மீ என்ற ரேஞ்சை அளிக்கிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.43 லட்சத்தில் தொடங்குகிறது.
பாதுகாப்பு, நவீன டிஜிட்டல் இன்டீரியர், குறைவான பராமரிப்பு செலவில் அதிக ரேஞ்ச் மற்றும் சிறந்த வடிவமைப்பை விரும்புவோருக்கு இந்த 5 சிஎன்ஜி கார்களும் மிகச்சிறந்த தேர்வாக அமைந்து, இந்திய விற்பனை சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்























