Tata Petrol Cars: 4 புதிய பெட்ரோல் கார்களுக்கு அடிபோட்ட டாடா.. காம்பேக்ட் தொடங்கி பெரிய சைஸ் எஸ்யுவி வரை
Tata Petrol SUV Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நடப்பு நிதியாண்டிற்குள் நான்கு பெட்ரோல் கார்களை சந்தைப்படுத்த டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Tata Petrol SUV Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நடப்பு நிதியாண்டிற்குள் டாடா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள 4 பெட்ரோல் கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
டாடாவின் பெட்ரோல் கார்கள்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நடப்பு நிதியாண்டிற்குள் நான்கு புதிய பெட்ரோல் கார்களை அறிமுகப்படுத்த டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பட்ஜெட் தொடங்கி ப்ரீமியம் கார் மாடல்கள் வரையிலான தனது போர்ட்ஃபோலியோவில், வாடிக்கையாளர்களுக்கான அணுகலை எளிதாக்கும் விதமாக இந்த கார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன. குறிப்பாக டாடா நிறுவனத்தின் முதன்மையான கார் மாடல்களையும் அணுகக் கூடியதாக மாற்ற உள்ளன.
1. டாடா பஞ்ச் ஃபேஸ்லிப்ஃட்
காம்பேக்ட் எஸ்யுவி ஆன பஞ்ச், டாடா நிறுவனம் சார்பில் அதிகளவில் விற்பனையாகும் கார் மாடலாக உள்ளது. இது ஏற்கனவே பெட்ரோல் எடிஷனில் கிடைக்கப்பெறுகிறது. இந்நிலையில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களை கொண்ட ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட பஞ்ச் காரானது, அக்டோபர் வாக்கில் சந்தைப்படுத்தப்பட உள்ளது. அதில் வெளிப்புறத்தில் புதிய வடிவமைப்பை பெற்ற பம்பர்கள், க்ரில்கள், 16 இன்ச் அலாய் வீல்கள் ஆகியவை வழங்கப்பட உள்ளன. உட்புறத்தில் தொழில்நுட்பம் சார்ந்த பயணத்தை விரும்பும் ஓட்டுனர்களுக்காக, புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் வழங்கப்பட உள்ளது. மேலும் ஒரு அப்க்ரேடாக ஒளிரக்கூடிய ப்ராண்டின் லோகோவை கொண்ட 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல் வழங்கப்பட உள்ளது.
இன்ஜின் அடிப்படையில் மாற்றமின்றி மிகவும் பிரபலமான 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை பெற உள்ளது. இது சிஎன்ஜி எரிபொருளிலும் செயல்படும் திறனை கொண்டுள்ளது.இதில் 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன் பொதுவாக வழங்கப்படுகிறது. பெட்ரோல் எடிஷனுக்கு மட்டும் பிரத்யேகமாக 5 ஸ்பீட் ஆட்டோமேடட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன் கிடைக்கிறது.
2. டாடா சியாரா:
டாடா நிறுவனத்தின் புதிய சியாரா கார் மாடல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்தைப்படுத்தப்பட உள்ளது. இந்த காரை ஒன்று அல்ல இரண்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களில் சந்தைப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. டாடா வேறு எந்த கார் மாடலிலும் இந்த அம்சத்தை வழங்கியதே இல்லை. அதன்படி, 1.5 லிட்டர் டர்போசார்ஜ்ட் டைரக்ட் இன்ஜெக்ஷன் பெட்ரோல் இன்ஜின் ஆனது 168hp மற்றும் 280Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது. இது செயல்திறன் மிகுந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.
இரண்டாவதாக 1.5 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் இன்ஜின் திட்டமிட்டுள்ளது. எரிபொருள் செயல்திறன் மற்றும் மலிவு விலையை விரும்பும் பயனர்களுக்காக இந்த ஆப்ஷன் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு இன்ஜினிலும் 6 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் வழங்கப்படும் என்றும், டர்போசார்ஜ்ட் ஆப்ஷனில் மட்டும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது.
3. டாடா ஹாரியர்
டாடா ஹாரியரும் 168hp மற்றும் 280Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட, 1.5 லிட்டர் டர்போசார்ஜ்ட் டைரக்ட் இன்ஜெக்ஷன் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை பெற உள்ளது. இது ஜனவரி மாதத்தில் சந்தைப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இந்த ஆப்ஷனுக்கு 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் என இரண்டு ட்ரான்ஸ்மிஷன்களும் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. இதன் மூலம் டாடா ஹாரியர் கார் மாடலானது, குறைந்த விலை கொண்டதாக மட்டுமின்றி குறைந்த பராமரிப்பு தேவைப்படும் காராகவும் மாற உள்ளது. சிறிய பட்ஜெட் மற்றும் குறைந்த பட்ஜெட் என இரண்டு தரப்பு வாடிக்கையாளர்களுக்கும் டாடா ஹாரியர் அணுகக் கூடியதாக இருக்கும்.
4. டாடா சஃபாரி
மேற்குறிப்பிடப்பட்டபடி, 1.5 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் அதன் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் அப்படியே சஃபாரியிலும் வழங்கப்பட உள்ளது. வரும் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில், இந்த புதிய எடிஷன் சந்தைப்படுத்தப்படலாம். ஆறு மற்றும் 7 பேருக்கான இருக்கை வசதிகளை கொண்ட வடிவில் கிடைக்கும் இந்த காருக்கு கூடுதல் சக்தி வாய்ந்த இன்ஜின் நல்ல தேர்வாக இருக்கும்.




















