ஸ்கோடா நடத்திய டிசைன் போட்டியில் வென்று செக் செல்பவர் யார்?
ஸ்கோடா நிறுவனம் நடத்திய உருமறைப்பு டிசைன் போட்டியின் வெற்றியாளராக ஷ்ரேயாஸ் கரம்பேல்கர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதற்காக அவர் தற்போது செக் செல்கிறார்.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் உருமறைப்பு டிசைன் போட்டி ஒன்றை நடத்தியது. இதன் வெற்றியாளர் அக்டோபர் 11 அன்று அறிவிக்கப்பட்டார். மஹாராஷ்டிரா மாநிலம் பதல்பூர் பகுதியை சேர்ந்த ஸ்ரேயாஷ் கரம்பெல்கர் என்பவர் இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். இவர் செக் குடியரசில் உள்ள ப்ராக் நகருக்கு பயணம் செய்யவுள்ளார். அங்கு ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் டிசைன் பிரிவின் தலைவர் ஆலிவர் ஸ்டெபானியை அவர் சந்திக்கவுள்ளார். ஸ்லாவியா (Slavia) மிட்-சைஸ் செடான் கார் சாலை சோதனைகளில் ஈடுபடுத்தப்படும்போது, ஸ்ரேயாஷ் கரம்பெல்கர் உருவாக்கிய டிசைனால் உருமறைப்பு செய்யப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் ஸ்லாவியா என்ற புதிய மிட்-சைஸ் செடான் காரை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. விற்பனைக்கு கொண்டு வரப்படுவதற்கு முன்னதாக இந்த கார் சாலை சோதனைகளில் ஈடுபடுத்தப்படும். பொதுவாக கார் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை சாலை சோதனை செய்யும்போது உருவத்தை மறைத்திருக்கும். எனவே ஸ்லாவியா கார் சாலை சோதனையில் ஈடுபடுத்தப்படும்போது செய்யப்படும் உருமறைப்பிற்கான டிசைனை சமர்ப்பிக்கும்படி போட்டியாளர்கள் கேட்டு கொள்ளப்பட்டனர். இந்த போட்டி சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த போட்டியின் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்கோடா ஸ்லாவியா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது 5 சீட்டர் கார் ஆகும். இந்திய சந்தையில் ஸ்கோடா நிறுவனத்தின் செடான் லைன்-அப்பை ஸ்லாவியா வலுவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. MQB A0 IN பிளாட்பார்ம் அடிப்படையில் ஸ்கோடா ஸ்லாவியா கட்டமைக்கப்படவுள்ளது. தற்போது இந்த காருக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. புதிய ஸ்லேவியா மாடல் எம்.கியூ.பி. ஏ.ஒ. ஐ.என். பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இந்த காரின் பவர் டிரெயின் ஸ்கோடா குஷக் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என தெரிகிறது. அந்த வகையில் ஸ்கோடா ஸ்லேவியா மாடலில் 113 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் 1 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜின் அல்லது 150 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம். இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், 1.5 லிட்டர் என்ஜினுடன் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம். நடப்பு ஆண்டு இறுதிக்குள் ஸ்கோடா ஸ்லாவியா கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து இந்திய சந்தையில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை தற்போதே இந்த கார் எகிற செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.