Royal Enfield E- Bikes: மின்சார பைக் ஒரு பக்கம்.. ஹைப்ரிட் பைக் மறுபக்கம்.. ராயல் என்ஃபீல்டின் மஜா பிளான், 4 வண்டி
Royal Enfield E- Bikes: ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் மின்சார பைக்குகளுடன் ஹைப்ரிட் பைக்குகளையும் அடுத்தடுத்து இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

Royal Enfield E- Bikes: ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் மின்சார பைக்குகளுடன் ஹைப்ரிட் பைக்குகளையும் 2025-26 நிதியாண்டில் சந்தைப்படுத்த முடிவு செய்துள்ளது.
ராயல் என்ஃபீல்ட் மின்சார & ஹைப்ரிட் பைக்குகள்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மின்சார மற்றும் ஹைப்ரிட் இருசக்கர வாகனம் தொடர்பான பணிகளை தொடங்கிய பிரதான நிறுவனங்களில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனமும் ஒன்று. இதுவரை, ஃப்ளையிங் ஃப்ளீ என்ற பெயரில் C6 மற்றும் S6 என்ற இரண்டு மின்சார இருசக்கர வாகனங்களை காட்சிப்படுத்தியுள்ள நிறுவனம், 250சிசி ஹைப்ரிட் மோட்டார்சைக்கிளையும் சந்தைப்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. சென்னையை அடிப்படையாக கொண்ட இந்த உற்பத்தி நிறுவனம், தனது ஹிமாலயன் மோட்டார்சைக்கிளின் மின்சார எடிஷனை HIM - E என்ற பெயரில் அறிமுகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாம். அந்த வகையில், 2026-26 ஆண்டுகளில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் சந்தைப்படுத்த வாய்ப்புள்ள மின்சார மற்றும் ஹைப்ரிட் மோட்டார்சைக்கிள்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
1. ஃப்ளையிங் ஃப்ளீ C6
ஃப்ளையிங் ஃப்ளீ C6 எடிஷனின் கான்செப்டானது கடந்த ஆண்டு இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. அதைதொடர்ந்து நடப்பாண்டில் மும்பை, டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களிலும் இந்த வாகனம் காட்சிப்படுத்தப்பட்டது. ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் முதல் மின்சார மோட்டர்சைக்கிளான C6, லடாக்கிலும் குளிர் சூழலில் செயல்பாடு தொடர்பான சோதனையில் ஈடுபடுத்தப்பட்டது. இதையடுத்து, நடப்பாண்டு இறுதியில் நடைபெற உள்ள EICMA நிகழ்ச்சியில் C6 மோட்டார் சைக்கிளின் உற்பத்திக்கு தயாரான மாடல் காட்சிப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. தொடர்ந்து அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்த மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.
L பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட உள்ள இந்த பைக்கானது, நியோ ரெட்ரோ லுக்கை பெற்றுள்ளது. அலாய் வீல்களை கொண்டு சாலையில் பரிசோதிக்கப்பட்டதை புகைப்படங்கள் உறுதி செய்கின்றன. இதை குறைந்த எடைகொண்ட வாகனமாக உருவாக்குவதற்காக, அதிகளவில் அலுமினியத்தை பயன்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃப்ரண்ட் சஸ்பென்ஷனில் ஃபோர்ஜ்ட் அலுமினியம் கிர்டர் இடம்பெற்று இருப்பது, 1940களில் வெளியான உண்மையான ஃப்ளையிங் ஃப்ளீ மாடலை நினைவூட்டுகிறது.
2. ஃப்ளையிங் ஃப்ளீ S6
கடந்த ஆண்டு மிலனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் C6 மோட்டார்சைக்கிள் கான்செப்டுடன் சேர்த்து, காட்சிப்படுத்தப்பட்ட ராயல் என்ஃபீல்டின் மற்றொரு மின்சார இருசக்கர வாகனம் தான் ஃப்ளையிங் ஃப்ளீ S6. ஸ்போக் வீல்களை கொண்ட, ஆஃப் ரோட் டயர்களுடன் இந்த வாகனமும் லடாக்கில் சோதனை செய்யப்பட்டுள்ளது. S6 ஆனது ஸ்க்ராம்ப்ளர் மாடல் மோட்டார்சைக்கிளாகும். அதற்காக இந்த பைக்கில் ஃப்ரண்ட் ஃபெண்டர், ஹேண்டில்பார் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் ஆகியவை இடம்பெற உள்ளன. இதுவும் அதே L ப்ளாட்ஃபார்மில் தான் உருவாக்கப்பட உள்ளது.
தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லாவிட்டாலும், ஃப்ளையிங் ஃப்ளீ S6 மோட்டார்சைக்கிளானது வேகமாக சார்ஜ் செய்யக்கூடிய திறன் கொண்ட நிரந்தரமான பேட்டரியை பெறும் என ராயல் என்ஃபீல்ட் உறுதி செய்துள்ளது.ரேஞ்ச் மற்றும் செயல்திறன் தொடர்பான தகவல்கள் ரகசியமாக இருந்தாலும், 350சிசி இன்ஜின் மாடலுக்கு நிகராக செயல்பட்டு 150 முதல் 200 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது.
3. ராயல் என்ஃபீல்ட் 250சிசி ஹைப்ரிட் மோட்டார்சைக்கிள்
ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் 250சிசி ஹைப்ரிட் இன்ஜின் மோட்டார் சைக்கிளில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இது 50 கிலோ மீட்டருக்கும் அதிகமாக மைலேஜ் வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. V என்ற கோட்நேமில் நிறுவனம் புதிய 250சிசி ப்ளாட்ஃபார்மை உருவாக்கி வருவதாக தெரிகிறது. சர்வதேச சந்தைக்கு மிட்சைஸ் இன்ஜின்களை வழங்கி வரும், சீனாவின் CFMoto நிறுவனத்தை புதிய ஹைப்ரிட் இன்ஜின் வழங்கும்படி ராயல் என்ஃபீல்ட் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. புதிய இன்ஜின் ஆனது BS 6 இரண்டாம் கட்ட விதிமுறைகளுக்கு ஏற்றபடி வடிவமைக்கப்படும் என கூறப்படுகிறது. எண்ட்ரி லெவல் மாடலாக அறிமுகமாக உள்ள இந்த மோட்டார்சைக்கிளின் விலை சுமார் 1.3 லட்சம் என தொடங்கும் என கூறப்படுகிறது. இது 2026ம் ஆண்டின் இறுதியில் சந்தைப்படுத்தப்படலாம்.
4. ராயல் என்ஃபீல்ட் E - ஹிமாலயன்
HIM -E என குறிப்பிடப்படும் ஹிமாலயனின் மின்சார எடிஷனானது, ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் சார்பில் சந்தைப்படுத்தப்பட உள்ள மிக வலுவான மின்சார மோட்டார்சைக்கிளாக கருதப்படுகிறது. வெளியாகியுள்ள தகவல்களின்படி, 100bhp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 14KWh என்ற பெரிய பேட்டரி ஆப்ஷன் வழங்கப்பட உள்ளதாம். இதன் உற்பத்திக்கு தயாரான எடிஷனானது அண்மையில் லடாக்கில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லாவிட்டாலும், 2026ம் ஆண்டின் நடுவில் இந்த மோட்டார்சைக்கிள் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















