Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Putin Visit India: அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு மத்தியில் ரஷ்ய அதிபர் புதின், இன்று இந்தியா வரவிருக்கிறார்.

Putin Visit India: ரஷ்ய அதிபர் புதின் வருகையை ஒட்டி, டெல்லியில் போலீசார் மற்றும் ராணுவம் கொண்டு ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று இந்தியா வரும் புதின்:
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகிறார். டெல்லியில் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட இரவு விருந்து அளிக்க உள்ளார். உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதேநேரம், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக் ஐந்தியா மீதும் அமெரிக்க கூடுதல் வரிகளை விதித்துள்ளது. இந்த சூழலில் இருநாடுகளுக்கு இடையேயான 23வது ஆண்டு உச்சி மாநாடு நடைபெறுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பின்போது பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் எரிசக்தி கூட்டாண்மைகளை எவ்வாறு வழிநடத்துவது என்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளது. வருகைக்கு முன்னதாக, மாஸ்கோ ஒரு முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை அங்கீகரித்தது மற்றும் புதிய ராணுவ ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளை சுட்டிகாட்டியது குறிப்பிடத்தக்கது.
புதின்-மோடி உச்சிமாநாட்டு திட்டம்
இன்று மாலை 4:30 மணியளவில் புதின் டெல்லியில் தரையிறங்க உள்ளார். கடந்த ஆண்டு உக்ரைனில் போர் தொடங்கிய பிறகு புதின் முதன்முறையாக இந்தியா வருகை தருகிறார். இன்று பிரதமரின் தனிப்பட்ட விருந்து முடிவடைய, நாளை இந்தியா-ரஷ்யா ஆண்டு உச்சி மாநாடு நடைபெறும். முறையான பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பு ரஷ்ய அதிபருக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்படும். உச்சிமாநாடு நடைபெறும் ஐதராபாத் இல்லத்தில் புதின் மற்றும் அவரது குழுவினருக்கு, மோடியுடன் சேர்ந்து மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களின்படி, அமெரிக்கத் தடைகளிலிருந்து இந்தியா-ரஷ்யா வர்த்தகத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள், அணுசக்திக்கான சிறிய மட்டு உலைகள் மற்றும் ஆழமான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான சலுகை ஆகியவை இந்த உச்சிமாநாட்டில் இடம்பெற உள்ளது.
கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ரஷ்யா இந்தியாவிற்கு Su-57 போர் விமானங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விவாதங்கள் இடம்பெறலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியா தற்போது ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை வாங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்திய தொழிலாளர்களை ரஷ்யாவிற்கு அனுப்புவதை எளிதாக்குவது உள்ளிட்ட ஒப்பந்தங்களில் இரு தரப்பினரும் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் யூரேசிய பொருளாதார ஒன்றியத்துடன் டெல்லியால் முன்மொழியப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் விவாதிக்கலாம்.
வர்த்தகம், பாதுகாப்பு ஒப்பந்தங்கள்
உச்சிமாநாட்டிற்குப் பிறகு, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கும் அரசு விருந்தில் புதின் கலந்து கொள்வார் . ரஷ்யாவின் அரசு நடத்தும் ஒளிபரப்பாளரான ஆர்டியின் புதிய இந்தியா சேனலையும் அவர் தொடங்கி வைப்பார் என்று பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்யாவுடனான பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளை புத்துயிர் பெறுவதோடு, இந்தியா தனது மூலோபாய சுயாட்சியை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்பாக இந்த சந்திப்பு பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் கச்சா எண்ணெயை இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்வதால் ஏற்படும் விரிவடையும் வர்த்தக ஏற்றத்தாழ்வு குறித்து டெல்லி கவலைகளை எழுப்ப வாய்ப்புள்ளது. ரஷ்யாவின் எண்ணெய் கொள்முதல் மீதான அமெரிக்கத் தடைகளின் தாக்கம் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை மத்தியஸ்தம் செய்வதற்கான சமீபத்திய அமெரிக்க முயற்சிகள் குறித்து மோடியிடம் புதின் விளக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
புதினின் வருகையை ஒட்டி டெல்லியில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தகவல்களின்படி, தேசிய பாதுகாப்பு படையில் உள்ள திறன்பெற்ற கமாண்டோக்கள், புதிய பயணிக்கும் வழி நெடுகிலும் ஸ்நைப்பர்கள், ட்ரோன் கண்காணிப்பு, அனுமதி இல்லாத சிக்னல்களை தடுக்கும் விதமாக ஜாம்மர்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமான கண்காணிப்பு ஆகியவை இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதுபோக உயர்தொழில்நுட்ப முகத்தை அடையாளம் காணும் வசதியும் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட, ஏற்கனவே 40-க்கும் அதிகமான ரஷ்யாவின் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் டெல்லி வந்தடைந்துள்ளனர். வெளிப்புற பாதுகாப்பு பணிகளானது தேசிய பாதுகாப்பு படை மற்றும் டெல்லி போலீசாரால் மேற்கொள்ளப்படுகிறது. புதினின் நெருங்கிய வட்டார பாதுகாப்பு பணிகள் ரஷ்யா அதிகாரிகளால் கவனிக்கப்படுகிறது.
இந்த உயர் பாதுகாப்பு ஏற்பாட்டில் ஒரு தனித்துவமான அம்சமாக, ரஷ்ய அதிபருக்கான சொந்த அரசு காரான ஆரஸ் செனட் என்று அழைக்கப்படும் கனரக கவச லிமோசின் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த காரானது பல அடுக்கு பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





















