ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 120வது ஆண்டு: நச்சென இருக்கும் ஸ்டைல்.. புதிய மாடல்கள்!
புதிய ஜெனரேஷன் `கிளாசிக் 350’ மாடலைச் சமீபத்தில் வெளியிட்ட ராயல் என்பீல்டு நிறுவனம் மேலும் சில புதிய மாடல்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தவுள்ளது. அவை குறித்த அறிமுகத்தை இங்கு பார்ப்போம்..
இந்தியாவின் பண்டிகைக் காலம் நெருங்கி வருவதால் பல்வேறு மோட்டார் சைக்கிள் நிறுவனங்களும் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இருக்கின்றன. புதிய ஜெனரேஷன் `கிளாசிக் 350’ மாடலைச் சமீபத்தில் வெளியிட்ட ராயல் என்பீல்டு நிறுவனம் மேலும் சில புதிய மாடல்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தவுள்ளது. அவை குறித்த அறிமுகத்தை இங்கு பார்ப்போம்..
Scram 411:
ராயல் என்பீல்ட் ஹிமாலயன் மாடல் வாகனத்தைச் சிறிய மாற்றங்களைச் செய்து இந்த மாடல் உருவாகி வருகிறது. இந்திய சாலைகளில் இந்த `ஸ்க்ரேம் 411’ மாடல் இந்திய சாலைகளில் சமீபத்தில் பல இடங்களில் பரிசோதனை செய்யப்பட்டதாகக் கண்டறியப்பட்டது. மேலும், இந்த மாடல் இந்தியாவில் அடுத்தடுத்த வாரங்களில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கின் வெளித்தோற்றம் குறித்த புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகின.
இதில் ஹிமாலயன் மாடல் பைக்கில் இருக்கும் அதே என்ஜின், சேஸிஸ் ஆகியவை சேர்க்கப்பட்டிருந்தாலும், வீல்கள் மாற்றப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த மாடல் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த மாடலின் விலை சுமார் 1.9 லட்சம் முதல் 2.04 லட்சம் ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
650 Twins Anniversary Edition:
2021ஆம் ஆண்டு, ராயல் என்பீல்டு நிறுவனம் தொடங்கப்பட்டு, 120வது ஆண்டுகள் ஆனதைக் குறிக்கிறது, அதனைக் கொண்டாடும் விதமாக, Interceptor 650, Continental GT 650 ஆகிய மாடல் பைக்குகளின் ஸ்பெஷல் எடிஷன் வடிவம் பிரத்யேக கலர்களுடன் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த இரு 650cc பைக்குகளும் `Twins Anniversary Edition’ என்ற பெயரில், வழக்கத்தை விட கூடுதலான விலைக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. Canyon Red, Ventura Blue, Downtown Drag, Sunset Strip in dual-tone, Mark 2 Chrome, Orange Crush, dual-tone Baker Express ஆகிய நிறங்களில் Interceptor 650 ஸ்பெஷல் மாடல் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. Rocker Red, British Racing Green, Dux Deluxe and Ventura Storm in dual-tone, Mister Clean chrome ஆகிய வண்ணங்களில் Continental GT 650 அறிமுகப்படுத்தப்படும்.
Royal Enfield Cruiser 650 (Shotgun):
இந்திய சாலைகளில் தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டு வந்த க்ரூய்ஸர் மாடல் ராயல் என்பீல்டு வாகனம் விரைவில் வெளியிடப்படவுள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் `ஷாட் கன்’ என்ற பெயரைப் பதிவு செய்திருப்பதால் இந்த மாடலுக்கு இந்தப் பெயர் சூட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. Kawasaki Vulcan S மாடலுக்குப் போட்டியாக இந்த மாடல் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.