Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Nissan Compact MPV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நிசானின் புதிய பெரிய எம்பிவி காரானது, வரும் டிசம்பர் 18ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Nissan Compact MPV: நிசானின் புதிய பெரிய எம்பிவி காரில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
நிசானின் காம்பேக்ட் எம்பிவி:
ஆண்டு இறுதியை எட்டிய பிறகும் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், புதிய கார்களின் அறிமுகத்திற்கு எந்தவித பஞ்சமும் இல்லாத சூழல் நிலவுகிறது. மஹிந்த்ராவின் XEV 9S, டாடா சியாரா மற்றும் முற்றிலும் புதிய கியா செல்டோஸ் தொடங்கி அடுத்த வாரம் அறிமுகமாக உள்ள எம்ஜி ஹெக்டேர் என புதிய ப்ரீமியம் எஸ்யுவி மாடல்களின் பட்டியல் நீண்டுகொண்டே உள்ளது. அந்த வகையில் இந்த டிசம்பரில் புதிய பட்ஜெட் எம்பிவி ஒன்றும் அறிமுகமாக உள்ளது. அதாவது இந்தியாவை மையாக கொண்ட புதிய எம்பிவியை டிசம்பர் 18ம் தேதி வெளியிட உள்ளதாக நிசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரெனால்ட் ட்ரைபரின் காபியா?
புதிய காருக்கான சில புகைப்படங்களை கடந்த மார்ச் மாதத்திலேயே நிறுவனம் பகிர்ந்து இருந்தது. அதன் பிறகு பல தகவல்களும் வெளியான வண்ணம் இருந்தன. இந்த காருக்கான பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், டீசர் புகைப்படங்கள் மற்றும் சாலை பரிசோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் அடிப்படையில், புதிய காரானது ரெனால்ட் ட்ரைபரின் நிசான் எடிஷனாக இருக்கும் என கருதப்படுகிறது. பட்ஜெட் மாடலாக அறிமுகப்படுத்த முடிவு செய்து இருப்பதால், ரெனால்டின் டிசைனை அதிகளவில் நிசான் அப்படியே பயன்படுத்து என எதிர்பார்க்கப்படுகிறது.
நிசானின் காம்பேக்ட் எம்பிவி - வெளிப்புற டிசைன்
நிசானின் புதிய காம்பேக்ட் எம்பிவியின் வெளிப்புற தோற்றமானது, ரெனால்ட் ட்ரைபரை முழுவதுமாக பின் தொடர்வதோடு, பெரும்பாலான மிருதுவான ப்ளாஸ்டிக் பாகங்களும் அப்படியே தொடரக்கூடும். தனித்துவமான ரேடியேட்டர் க்ரில், வித்தியாசமான ஃப்ரண்ட் பம்பர், திருத்தப்பட்ட முகப்பு விளக்கு மற்றும் டெயில் லேம்ப் க்ராஃபிக்ஸ் ஆகியவை ட்ரைபரிலிருந்து வேறுபடலாம். புதிய 15 இன்ச் அலாய் வீல் மற்றும் சில கூடுதலாக வண்ண விருப்பங்களும் இதில் எதிர்பார்க்கப்படுகின்றன.
நிசானின் காம்பேக்ட் எம்பிவி - உட்புற விவரங்கள்
நிசான் தனது புதிய எம்பிவியின் உட்புற அம்சங்கள் தொடர்பான எந்தவொரு தகவலையும் தற்போது வரை வெளியிடவில்லை. ஆனால், இதன் கேபினானது பெரிய அளவில் ரெனால்ட் ட்ரைபரை அப்படியே பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உட்புறத்தில் இரண்டு கார்களுக்கான வித்தியாசங்கள் அதிகளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் என்பது குறைவாகவே உள்ளது. அதேநேரம், ரெனால்ட் ட்ரைபர் புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்ட, நன்கு பொருத்தப்பட்ட தளத்தை வழங்குகிறது.
நிசானின் காம்பேக்ட் எம்பிவி - 7 சீட்டர்:
2+3+2 இருக்கை அமைப்பு நிலையானதாக இருக்கக் கூடும். ஸ்லைட்/ரிக்ளைன்/ஃபோல்ட் மற்றும் டம்பிள் இரண்டாவது வரிசை இருக்கைகள் மற்றும் ஐந்து அல்லது அதற்கும் குறைவான பயணிகளுடன் பயணிக்கும்போது பூட் இடத்தை அதிகரிக்க உதவும் நீக்கக்கூடிய மூன்றாவது வரிசை இருக்கைகள் ஆகிய வசதிகள் இடம்பெற்றுள்ளன. வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7-இன்ச் ட்ரைவர் இன்ஃபர்மேஷன் டிஸ்பிளே மற்றும் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் ஆகியவை முக்கிய உட்புற அம்சங்களில் அடங்கும்.
நிசானின் காம்பேக்ட் எம்பிவி - பாதுகாப்பு, இன்ஜின், விலை:
பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டால், நிசான் புதிய MPV-யில் முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள், ஒரு ரிவர்ஸ் கேமரா, ஆறு ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் TCS போன்ற அம்சங்கள் இடம்பெறலாம். 71 hp மற்றும் 96 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 1.0 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் மூன்று சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களாக இடம்பெறலாம். இதன் விலை 6 லட்சம் முதல் 9 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.





















