Maruti 7 Seater: 32KM மைலேஜில் புது 7 சீட்டரை களமிறக்கும் மாருதி? பட்ஜெட்டில் குடும்பங்களுக்கான கார் - முழு விவரம்
Maruti 7 Seater MPV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் லிட்டருக்கு 32 கிலோ மீட்டர் மைலேஜ் தரக்கூடிய 7 சீட்டர் எம்பிவியை அறிமுகப்படுத்த மாருதி சுசூகி பரிசீலித்து வருகிறதாம்.

Maruti 7 Seater MPV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நிசான் மற்றும் ரெனால்ட் நிறுவன 7 சீட்டர்களுக்கு போட்டியாக, புதிய எம்பிவியை அறிமுகப்படுத்த மாருதி சுசூகி திட்டமிட்டுள்ளதாம்.
மாருதி சுசூகியின் புதிய 7 சீட்டர் எம்பிவி?
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மிகவும் விரிவான கார் லைன் - அப்களை கொண்ட நிறுவனமாக மாருதி சுசூகி திகழ்கிறது. இதனால் தான் மாதாந்திர விற்பனையிலும் பல தசாப்தங்களாக தொடர்ந்து கோலோச்சி வருகிறது. ஆனால், உற்றுநோக்கினால் சஒ-4 மீட்டர் காம்பேக்ட் 7 சீட்டர் பிரிவில், இந்நிறுவனத்திற்கு ஒரு கார் மாடலும் இல்லை என்பதை உணர முடியும்.ரெனால்ட் ட்ரைபர் மற்றும் நிசான் க்ராவைட் ஆகிய மாடல்கள் தற்போது இந்த பிரிவில் இடம்பெற்றுள்ளன. இந்த சூழல் விரைவில் மாறுமா? இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். அதேநேரம், ரெனால்ட் மற்றும் நிசான் நிறுவனங்களுக்கு போட்டியாக புதிய மாடலை களமிறக்க மாருதி பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இது சர்வதேச சந்தையில் 5 சீட்டர் எடிஷனில் விற்பனையில் உள்ள சோலியோ மாடலின் தாக்கத்திலோ அல்லது அடிப்படையிலோ, 7 சீட்டர் ஹைப்ரிட் எடிஷனாக இந்தியாவிற்கு கொண்டுவரப்பட வாய்ப்புள்ளதாம். இந்த மாடல் தொடர்பாக இதுவரை கிடைத்துள்ள தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
மாருதியின் புதிய 7 சீட்டர் எம்பிவி - டிசைன் விவரங்கள்
சுசூகி சோலியோவை, வேகன்ஆரின் மேம்படுத்தப்பட்ட எடிஷன் என்று குறிப்பிடலாம். அதன் ஒட்டுமொத்த வடிவமும் தோற்றமும் மாருதியின் ஹேட்ச்பேக் காரை மிகவும் சார்ந்து இருக்கிறது. 3.8 மீட்டர் நீளமுள்ள சோலியோ, வேகன்ஆரை விட சுமார் 155 மிமீ மட்டுமே நீளமானது. இருப்பினும், அதன் சதுர வடிவ அமைப்பு MPV-க்கு நிகரான ஒரு கேபினை வழங்குகிறது. இந்தியாவிற்கான இந்த ஏழு இருக்கைகள் கொண்ட காரை உருவாக்குவதில், மாருதி கவனம் செலுத்தும் முக்கிய பகுதிகளில் ஒன்றாக இந்த அம்சம் இருக்கலாம்.
சோலியோ ஒரு ஐந்து இருக்கைகள் கொண்ட காராக இருந்தாலும், அதன் உயரமான தோற்றமும் வடிவமைப்பும் கூடுதலாக ஒரு வரிசை இருக்கைகளைச் சேர்ப்பதற்கான சாத்தியத்தை வழங்குகிறது. இதன் மொத்த நீளத்தை நான்கு மீட்டருக்கும் குறைவாகவே வைத்திருக்க முடியும் என்பதால், அதை அதிகரிப்பதற்கும் வாய்ப்புள்ளது. சோலியோவில் பவர்-ஸ்லைடிங் பின்புறக் கதவுகளும் உள்ளன. இந்தியாவில், செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருக்க வழக்கமான கதவுகளாக மாற்றப்படலாம். ஒருவேளை ஸ்லைடிங் கதவுகளே இருந்தாலும் இது MPV-யின் மிகப்பெரிய ஈர்ப்புகளில் ஒன்றாக மாறக்கூடும்.
மாருதியின் புதிய 7 சீட்டர் எம்பிவி - இன்ஜின் விவரங்கள்
”YVF” என்ற கோட் நேமை கொண்ட மாருதியின் 7 சீட்டர், இந்தியாவில் ஹைப்ரிட் பவர்டிரெய்னைப் பெறும் முதல் 4 மீட்டருக்கும் குறைவான காம்பாக்ட் MPV ஆக இருக்கலாம். சோலியோ, உலகச் சந்தைகளில் சுசூகியின் 1.2-லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட், மூன்று சிலிண்டர் பெட்ரோல் (Z12E) ஹைப்ரிட் பவர்டிரெய்ன் மற்றும் eCVT கியர்பாக்ஸுடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த Z12E இன்ஜின் ஏற்கனவே இந்தியாவில் ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்களில் பயன்படுத்தப்படுகிறது. சோலியோவில் ஆல்-வீல் டிரைவ் வசதி இருந்தாலும், இந்தியாவில் இந்த செக்மென்ட்டிற்கு அந்த வசதி தேவைப்படுவதில்லை.
இந்த MPV-யின் தற்போதைய தலைமுறை எடிஷன், ஒரு லிட்டருக்கு 22 கிலோ மீட்டர் (WLTC புள்ளிவிவரப்படி) மைலேஜ் தருவதாகக் கூறப்படுகிறது. முந்தைய தலைமுறை மாடல்கள் ஒரு லிட்டருக்கு 32 கிலோ மீட்ட வரை மைலேஜ் தரும் திறன் கொண்டவையாக இருந்தன. ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் வரும் இந்திய மாடல், இந்த எரிபொருள் சிக்கன புள்ளிவிவரங்களுக்கு ஈடுகொடுக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
மாருதியின் புதிய 7 சீட்டர் எம்பிவ - வெளியீடு?
மாருதி இந்த எம்பிவி-யை இந்தியாவில் உள்நாட்டு விற்பனை மற்றும் சர்வதேச ஏற்றுமதிக்காக உள்நாட்டில் உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்தியாவிற்கான மாடலின் அறிமுகம் இன்னும் வெகு தொலைவில் உள்ளது. வெளியாகியுள்ள தகவல்களின்படி, இந்த எம்பிவி 2028 அல்லது 2029-ல் வரக்கூடும் என தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அறிமுகப்படுத்தப்பட்டவுடன், இந்த மாடல் மாருதி சுசூகியின் வேகன்ஆர் மற்றும் எர்டிகா மாடல்களுக்கு இடையே நிலைநிறுத்தப்படும்.
ட்ரெண்டிங் செய்திகள்























