EVs Registered: மூன்றே மாதங்களில் 21.7 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனை.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சொன்ன தகவல்
நடப்பாண்டின் முதல் மூன்று மாதங்களிலேயே இந்தியாவில் 2.78 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
நடப்பாண்டின் முதல் மூன்று மாதங்களிலேயே இந்தியாவில் 2.78 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கடந்த 2021ல் இந்தியாவில் 3,29,808 மின்சார வாகங்கனங்கள் EV போர்ட்டலில் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆண்டில் அந்த எண்ணிக்கை 10,20,679 ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மின்சார வாகன பயன்பாடு:
தொடர்ந்து அதிகரித்து வரும் எரிபொருட்களின் விலை மற்றும் சுற்றுச்சூழல் மாசு காரணமாக, பொதுமக்களிடையே மின்சார வாகனங்களுக்கான பயன்பாடு அதிகரித்துள்ளது. அதை உணர்ந்து பல முன்னணி நிறுவனங்கள் மட்டுமின்றி, புதுப்புது ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் கூட மின்சார வாகனங்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றன. அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. இதனால், கடந்த சில வருடங்களாகவே இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்படு கணிசமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
2.78 லட்சம் மின்சார வாகனங்கள் பதிவு:
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் மின்சார வாகனங்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் “2023ஆம் ஆண்டில் இதுவரை 2.78 லட்சத்துக்கும் அதிகமான மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆந்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் வாகனப் போர்ட்டலுக்கு இடம்பெயர்வதற்கான செயல்பாட்டில் உள்ளன, எனவே மின்சார வாகனங்களில் பதிவு குறித்த அவற்றின் தரவு ஓரளவு சேர்க்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தெலுங்கானா மற்றும் லட்சத்தீவு தரவுகள் போர்ட்டலில் கிடைக்கவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
2022-ல் 10 லட்சம் வாகனங்கள் பதிவு:
அதன்படி, நடப்பாண்டில் இதுவரை ஒவ்வொரு மாதமும் சராசரியாக 90 ஆயிரம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேநிலை தொடர்ந்தால், கடந்தாண்டு 10 லட்சத்திற்கும் அதிமான மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்ட சாதனை, நடப்பாண்டில் எளிதில் முறியடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. EV போர்ட்டலில் உள்ள தரவுகளின்படி, இந்தியாவில் மின்சார வாகனங்களின் பதிவு 2021 இல் 3 லட்சத்து 29 ஆயிரத்து 808 ஆக இருந்த நிலையில், கடந்த ஆண்டில் 10 லட்சத்து 20 ஆயிரத்து 679 ஆக உயர்ந்துள்ளது.
21.70 லட்சம் வாகனங்கள் விற்பனை
அண்மையில் மின்சார வாகனங்கள் குறித்து பேசி இருந்த மத்திய கனரக தொழில்துறை இணையமைச்சர் கிரிஷன் பால் குர்ஜார், ”நடப்பாண்டில் கடந்த மார்ச் 15ம் தேதி வரையில் இந்தியாவில் 21.7 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. அதில், 4.65 லட்சம் மின்சார வாகனங்களுடன் உத்தரபிரதேசம் முதலிடத்தை பிடித்துள்ளது. மகாராஷ்டிரா 2.26 லட்சம் வாகனங்கள் மற்றும் டெல்லி சுமார் 2 லட்சம் வாகனங்களுடன் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
EV-யில் கோலோச்சும் நிறுவனங்கள்:
இந்தியாவில் மின்சார வாகனத்துறையில் நான்கு சக்கர வாகன பிரிவில், டாடா மோட்டர்ஸ் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நெக்ஸான் ஈவி, டைகோர் ஈவி, மற்றும் டியாகோ ஈவி போன்ற மாடல்களுடன் நாட்டின் 80 சதவிகித மின்சார கார்களின் சந்தையை டாடா நிறுவனம் தன்வசம் கொண்டுள்ளது. அதைதொடர்ந்து, இருசக்கர வாகனப்பிரிவில் ஹீரோ, ஓலா எலெக்ட்ரிக், ஏதர் எனர்ஜி, மற்றும் ஒகினாவா ஆட்டோடெக் போன்ற உற்பத்தியாளர்கள் முன்னிலையில் உள்ளனர்” என்றார்.