மாருதி சுசுகி நிறுவனத்துக்கு ரூ.200 கோடி அபராதம்; 60 நாட்கள் கெடு...ஏன்? எதற்கு?
சிசிஐக்கு வந்த மாருதி அதிகாரிகளுக்கும் டீலர்களுக்கும் இடையேயான பல்வேறு மின்னஞ்சல்களும் டீலர்களுக்கு மிகக் கடுமையான தள்ளுபடி கட்டுப்பாட்டுக் கொள்கையை அந்நிறுவனம் நிர்பந்தித்ததை உறுதிப்படுத்தியது.
இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா லிமிடெட்டுக்கு (எம்எஸ்ஐஎல்) , இந்தியப் போட்டி ஆணையம் (Competition Commission of India (CCI) 200 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. இந்த அபராதத் தொகையை 60 நாட்களுக்குள் டெபாசிட் செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
காரணம் என்ன?
இந்தியப் போட்டி ஆணையத்துக்கு (Competition Commission of India (CCI) கடந்த 2019 ஆம் ஆண்டு தொட்டே தொடர்ச்சியாகப் புகார்கள் வந்தன. அந்தப் புகார்களில், மாருதி சுசுகி நிறுவனம் அதன் டீலர்களிடம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சலுகைகளை நிறுத்திக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியதாகக் கூறப்பட்டது. டீலர்களுக்கான இந்தக் கட்டுப்பாட்டால் வாடிக்கையாளர்கள் விலையில் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அனுபவிக்க முடியாமல் போனதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது.
மாருதி சுசுகி நிறுவனம் அதன் டீலர்களுக்கு 'தள்ளுபடி கட்டுப்பாட்டுக் கொள்கையை' (Discount Control Policy) வைத்திருந்துள்ளது. இதனால், டீலர்கள் எம்எஸ்ஐஎல் அனுமதித்ததைத் தாண்டி நுகர்வோருக்கு கூடுதல் தள்ளுபடிகள், இலவசங்கள் போன்றவற்றை வழங்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
மாருதி கார் நிறுவனம் தான் இந்தியாவில் அதிகமான கார்களை உற்பத்தி செய்யும் நிறுவனம். நாட்டில் விற்பனையாகும் 2 கார்களில் ஒன்று மாருதி சுசுகி நிறுவனத்துடையதாக உள்ளது.
இந்நிலையில் இந்த நிறுவனத்தின் மீதான புகாரை சிசிஐ விசாரித்தது. விசாரணையின் போது மாருதி நிறுவனம் தாங்கள் எந்த ஒரு தள்ளுபடி கட்டுப்பாட்டுக் கொள்கையையும் பின்பற்றவில்லை என்று கூறியது. டீலர்கள் அவர்கள் விரும்பும் வண்ணம் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடிகளை வழங்க சுதந்திரம் வழங்கியிருந்ததாகவும் கூறியது.
ஆனால், சிசிஐக்கு வந்த மாருதி அதிகாரிகளுக்கும் டீலர்களுக்கும் இடையேயான பல்வேறு மின்னஞ்சல்களும் டீலர்களுக்கு மிகக் கடுமையான தள்ளுபடி கட்டுப்பாட்டுக் கொள்கையை அந்நிறுவனம் நிர்பந்தித்ததை உறுதிப்படுத்தியது.
இந்த ஆதாரங்கள் மாருதி சுசுகி நிறுவனம் டீலர்கள் மத்தியில் ஆரோக்கியமான போட்டியை தடுத்து, அவர்களை சுதந்திரமாக செயல்பட விடப்படவில்லை என்ற குற்றச்சாட்டும், குறைந்த விலையில் பயனடையக்கூடிய நுகர்வோருக்கு தீங்கு விளைவிப்பதாகவும் உறுதி செய்வதாக சிசிஐ கருதியது.
எந்த ஒரு நகரத்தில் 5க்கும் மேற்பட்ட ஷோரும் உள்ளதோ அங்கெல்லாம் இதுபோன்ற தள்ளுபடி கட்டுப்பாட்டுக் கொள்கையை மாருதி நிறுவனம் கையாண்டதையும் சிசிஐ உறுதி செய்துள்ளது.
அதுமட்டுமல்லாது, தள்ளுபடி கட்டுப்பாட்டுக் கொள்கையைக் கடைபிடிக்காத டீலர்கள், நேரடி விற்பனை நிர்வாகிகள், பிராந்திய மேலாளர்கள், ஷோரூம் மேலாளர்கள், டீம் லீடர் என அனைவருக்கும் பல்வேறு நெருக்கடியைக் கொடுத்ததும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதனால், கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய சரிவிலிருந்து மீண்டும் வரும் ஆட்டோமொபைல் துறையின் நிலவரத்தைக் கணக்கில் கொண்டு மாருதி சுசுகி நிறுவனத்துக்கு சிசிஐ ரூ.200 கோடி அபராதம் விதித்துள்ளது. இதை டெபாசிட் செய்ய 6 மாத கால கெடுவும் விதித்துள்ளது.