Mahindra Thar 5 Door: அப்படிபோடு..! 5 கதவுகளுடன் அறிமுகமாகும் மஹிந்திரா தார் கார்.. சுதந்திர தினத்தில் வெளியீடு?
மஹிந்திரா நிறுவனம் தனது 5 கதவுகளுடன் கூடிய புதிய தார் மாடல் காரை, அறிமுகப்படுத்தும் தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
மஹிந்திரா நிறுவனம் தனது 5 கதவுகளுடன் கூடிய புதிய தார் மாடல் காரை, அறிமுகப்படுத்தும் தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
மஹிந்திராவின் தார் மாடல் கார்:
மஹிந்திரா நிறுவனம் தனது முதல் தார் மாடல் காரை கடந்த 2010ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அதன் கம்பீரமான வடிவமைப்பு, ஆஃப் ரோடிலும் அநாயசமாக செல்லும் திறன் ஆகியவற்றால், பயனாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைதொடர்ந்து, 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2020-ல் இரண்டாவது தலைமுறை தார் கார் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கடந்த ஜனவரி மாதம் Thar 2WD மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சியிலேயே விரைவில் 5 கதவுகளுடன் கூடிய தார் மாடல் கார் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
சுதந்திர தினத்தன்று வெளியீடு?
பயனாளர்களிடையே பெரும் எதிர்பார்பு எழுந்த நிலையில், புதிய தார் காரை ரோட் டெஸ்டிங் செய்யும்போது எடுக்கப்பட்ட பல்வேறு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அதோடு, தென்னாப்ரிக்காவில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில், புதிய தார் மாடல் அறிமுகம் செய்யப்படும் என பல்வேறு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. இந்நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மஹிந்திரா ஆட்டோமோடிவ் நிறுவனம், 5 கதவுகளுடன் கூடிய புதிய தார் மாடல் கார் நடப்பாண்டில் அறிமுகப்படுத்தப்படாது எனவும், அடுத்த ஆண்டு தான் அறிமுகப்படுத்தப்படும் என்றும் விளக்கமளித்துள்ளது.
தார் காரின் விவரங்கள்:
அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த புதிய எஸ்யூவி, இந்தியா மட்டுமின்றி மற்ற வெளிநாட்டு சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மஹிந்திரா நிறுவனத்திற்கு வணிக ரீதியில் இது முக்கியமான புதிய காராக கருதப்படுகிறது. எனவே, 3 கதவுகளை கொண்ட தார் மாடலில் இருந்து வேறுபட, தார் மாடலின் பிராண்டிங்கை பயன்படுத்தாமல் புதிய பெயரை மஹிந்திரா நிறுவனம் பயன்படுத்தும் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
காரின் சிறம்
5 கதவுகளை கொண்ட புதிய தார் பழைய மாடலை விட அதிக இருக்கைகள் மற்றும் கதவுகளுடன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காரின் வெளிப்புற வடிவமைப்பும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் உட்புறத்தில் அதிகப்படியான இடவசதி உடன் பல பிரீமியம் அம்சங்களைப் பெறும் என எதிபார்க்கப்படுகிறது. சன்ரூஃப், பின்புற கேமரா மற்றும் புதிய இருக்கைகளுடன் லக்கேஜ் இடமும் மேம்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்ஜின் விலை விவரங்கள்:
மஹிந்திரா தார் 5-கதவின் சஸ்பென்ஷன் அமைப்பு மாற்றப்பட்டாலும், ஏற்கனவே உள்ள இன்ஜின் மிகவும் சக்திவாய்ந்தது என்பதால், புதிய மாடலிலும் அது தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் இந்த காரின் விலை 15 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஸ்கார்பியோ N, தார் 3-டோர் மற்றும் XUV700 போன்ற பல கார்களுக்கான ஆர்டர்களை பூர்த்தி செய்வதில் உள்ள பற்றாக்குறையை பூர்த்தி செய்வதில் மஹிந்திரா நிறுவனம் கவனம் செலுத்தி வருவதால், இந்த ஆண்டும் அந்த நிறுவனம் தரப்பில் இருந்து புதிய வெளியீடுகள் எதுவும் அதிகம் இருக்காது என கூறப்படுகிறது.