Mahindra Scorpio N: புத்தாண்டில் மஹிந்த்ராவின் சம்பவம் - ஸ்கார்ப்பியோ அப்க்ரேட், என்ன இருக்கு? எப்படி வரும்?
Mahindra Scorpio N Facelift: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 2026ம் ஆண்டின் முதல் பாதியிலேயே மஹிந்த்ராவின், ஸ்கார்ப்பியோ என் ஃபேஸ்லிஃப்ட் கார் மாடல் சந்தைப்படுத்தப்பட உள்ளதாம்.

Mahindra Scorpio N Facelift: மஹிந்த்ராவின் ஸ்கார்ப்பியோ என் ஃபேஸ்லிஃப்ட் கார் மாடலில் என்னென்ன அப்க்ரேட்களை எதிர்பார்க்கலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
மஹிந்த்ரா ஸ்கார்ப்பியோ என் ஃபேஸ்லிஃப்ட்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மஹிந்த்ரா நிறுவனத்தின், ஸ்கார்ப்பியோ என் கார் மாடல் 2022ம் ஆண்டு முதல்முறையாக சந்தைப்படுத்தப்பட்டது. உடனடியாக ஹிட் அடித்த இந்த காருக்கான முன்பதிவு ஆயிரக்கணக்கில் குவிந்தது. இதனால் காத்திருப்பு காலமும் எகிறியது. கடந்த 3 ஆண்டுகளில் கார் மாடல் சில லேசான அப்டேட்களை பெற்றது. அண்மையில் லெவல் 2 ADAS வசதியையும் பெற்றது. இந்நிலையில் தான் ஸ்கார்ப்பியோ என் மாடலானது தனது முதல் மிட்-லைஃப் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டை பெற உள்ளது.
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஸ்கார்ப்பியோ என் கார் மாடலானது, 2026ம் ஆண்டின் முதல் பாதியிலேயே சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முற்றிலும் மறைக்கப்பட்ட வடிவில் அடிக்கடி சாலை சோதனையில் ஈடுபடுவது, விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதை உணர்த்துகிறது.
ஸ்கார்ப்பியோ என் ஃபேஸ்லிஃப்ட் - வெளிப்புற அப்டேட்
சோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின்படி, காரின் ஒட்டுமொத்த தோற்றம் என்பது அப்படியே நீடிக்கிறது. ஷீட் மெட்டல் பணிகளில் பெரிய மாற்றங்கள் இருக்காது. வெளிப்புறத்தில் வழங்கப்பட்டுள்ள பெரும்பாலான அப்டேட்கள் ப்ளாஸ்டிக் உதிரிபாகங்களை சார்ந்தே இருக்கக் கூடும். அதோடு, புதிய எல்இடி முகப்பு விளக்குகள், ஃபாக் லைட்ஸ் மற்றும் டெயில் லேம்ப் ஆகியவையும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோக, இந்த எஸ்யுவி முன்புறத்தில் புதிய க்ரில்லை பெறக்கூடும். அலாய் வீல்களும் எந்த மாற்றமும் காணாமல் இருப்பதை சாலை சோதனையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காட்டுகின்றன. ஆனால், சந்தைப்படுத்தும்போது இதில் புதிய அலாய் வீல்கள் எதிர்பார்க்கப்படுகிறது. தார் ராக்ஸ் அடிப்படையில், ஸ்கார்ப்பியோ என் காரின் டாப் ட்ரிம்களுக்கான வீல் அளவுகள் 19 இன்ச்களாக உயர்த்தப்படலாம்.
ஸ்கார்ப்பியோ என் ஃபேஸ்லிஃப்ட் - உட்புற அப்டேட்
காரின் உட்புறம் குறித்த விவரங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. ஆனால், இந்த எஸ்யுவியில் தார் ராக்ஸில் இருப்பதை போன்ற புதிய 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஃப்ரீ ஸ்டேண்டிங் யூனிட்டாக இருக்கலாம். இதனால், டேஷ்போர்ட் லே-அவுட்டில் சிறிய மாற்றங்கள், குறிப்பாக செண்டர் கன்சோலில் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், உட்புறத்திற்கான தீம் மற்றும் அப்ஹோல்ஸ்ட்ரியில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம். முற்றிலுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்டர் க்ளஸ்டர் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றை மஹிந்த்ரா இந்த காரில் இணைக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். ப்ராண்ட் தரப்பில் அண்மையில் அறிமுகமான கார்களில் இந்த இரண்டு அம்சங்களும் இல்லாத ஒரே மாடலாக ஸ்கார்ப்பியோ என் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்கார்ப்பியோ என் ஃபேஸ்லிஃப்ட் - இன்ஜின் விவரங்கள்
இன்ஜின் அடிப்படையில் இதில் மாற்றம் இருக்க வாய்ப்பு இல்லை. அதன்படி, வழக்கமான 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் மற்றும் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் இன்ஜின்கள், 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் தொடரலாம். ரியர் வீல் ட்ரைவ் வசதியானது ஸ்டேண்டர்டாக வழங்கப்படுகிறது. அதேநேரம், குறிப்பிட்ட டீசல் வேரியண்ட்கள் 4 வீல் ட்ரைவ் ஆப்ஷனை பெறுகின்றன.
ஸ்கார்ப்பியோ என் ஃபேஸ்லிஃப்ட் - விலை
தற்போதைய ஸ்கார்ப்பியோ என் கார் மாடலின் விலையானது ரூ.13.20 லட்சத்தில் தொடங்கி ரூ.24.28 லட்சம் வரை நீள்கிறது. ஆனால், புதிய எடிஷனில் வழங்கப்படும் கூடுதல் அம்சங்கள் மற்றும் அப்க்ரேட் அடிப்படையில், விலை உயர்த்தப்படலாம். உள்ளூர் சந்தையில் ஸ்கார்ப்பியோ என் கார் மாடலானது, டாடா சஃபாரி, மஹிந்த்ரா XUV 700, டொயோட்டா ஃபார்ட்சுனர் ஆகிய கார் மாடல்களுடன் போட்டியிடுகிறது.





















