Hyundai India Penalty: ஹுண்டாய்க்கு ரூ.517.34 கோடி அபராதம் - காரணம் என்ன? குழப்பும் வரிமுறைகள், எகிறும் விலை?
Hyundai India Penalty: ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.517 கோடி அபராதம் விதிக்கப்பட்டது ஏன்? என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

Hyundai India Penalty: அபராதம் தொடர்பான நோட்டீஸை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என, ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹுண்டாய் நிறுவனத்திற்கு அபராதம்:
இந்திய பயணிகள் வாகன சந்தையில் ஹுண்டாய் நிறுவனம் 14 சதவிகித பங்களிப்பை கொண்டு, தவிர்க்க முடியாததாக திகழ்கிறது. இந்நிலையில் தான், தனது சில எஸ்யூவி மாடல்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டு செஸ் தொகையை குறைவாக செலுத்தியதாக கூறி, வரி அதிகாரிகளிடமிருந்து ஹுண்டாய் நிறுவனத்திற்கு ரூ.517.34 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஹுண்டாய்க்கு அபராதம் ஏன்?
தமிழ்நாடு CGST துறை ஆணையர் (மேல்முறையீடுகள்) நிறுவனத்திடமிருந்து வழங்கப்பட்டுள்ள உத்தரவில், “செப்டம்பர் 2017 முதல் மார்ச் 2020 வரையிலான காலகட்டத்தில் சில SUV மாடல்களுக்கு GST இழப்பீட்டு செஸ் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதன்படி, GST இழப்பீட்டு செஸ் தொகையாக 258.67 கோடி ரூபாயும், அபராதமாக 258.67 கோடி ரூபாயையும் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹுண்டாய் நிறுவனம் விளக்கம்:
நோட்டீஸ் தொடர்பாக ஹுண்டாய் இந்தியா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “இந்த விஷயத்தில் தொழில்துறை எதிர்கொள்ளும் பிரச்சினையைத் தீர்க்க மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் (CBIC) வழங்கிய திருத்தம் மற்றும் விளக்கங்கள் நிறுவனத்திற்கு சாதகமாக இருப்பதாக ஹுண்டாய் நிறுவனம் கருதுகிறது. அபராத உத்தரவை மறுபரிசீலனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம், மேலும் பொருத்தமான நடவடிக்கைகள் மூலம் சட்டப்பூர்வ தீர்வைப் பெறுவதற்கான உரிமையைப் பயன்படுத்துவோம்.
இந்த உத்தரவால் நிறுவனத்தின் நிதி, செயல்பாடு அல்லது பிற நடவடிக்கைகளில் எந்த பாதிப்பும் இல்லை. உத்தரவை மறுபரிசீலனை செய்து வருகிறோ. மேல்முறையீடு செய்வதற்கான உரிமையைப் பயன்படுத்துவோம்” என ஹுண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எஸ்யுவிக்கள் மீதான கூடுதல் வரி
ஜிஎஸ்டி இழப்பீட்டு வரி என்பது ஆடம்பர மற்றும் பெரிய வாகனங்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கு விதிக்கப்படும் கூடுதல் வரியாகும். ஜிஎஸ்டி வரி வசூல் முறை தொடங்கியபோது மாநிலங்களுக்கு ஏற்பட்ட பண இழப்பை ஈடுசெய்ய உதவும் நடவடிக்கையாகும். அதன்படி, எஸ்யுவிகள் மற்றும் உயர் ரக மாடல்களை விற்கும் கார் நிறுவனங்களுக்கு, இந்த கூடுதல் வரி விதிக்கப்படும். அந்த வகையில் தான், 2017- 2020 காலகட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம் தங்கள் சில எஸ்யூவிகளுக்கு இந்த வரியில் போதுமான தொகையை செலுத்தவில்லை என்று அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
குழப்பும் விதிகள் - மாறும் ஆட்டோமொபைல் சந்தை:
ஹுண்டாயின் வரி விவகாரம் வெறும் சட்டப்பூர்வ சம்பவமாக தோன்றலாம், ஆனால் சில காரணங்களுக்காக இது முக்கியமானதாகவும் உள்ளது. முதலாவதாக, பல்வேறு வகையான கார்களுக்கு எவ்வாறு வரி விதிக்கப்பட வேண்டும் என்பதைக் கண்டுபிடிப்பது எவ்வளவு குழப்பமானதாக இருக்கும் என்பதை இது காட்டுகிறது. உதாரணமாக, ஒரு காரை SUV என சரியாக வகைப்படுத்துவது தந்திரமானதாக இருக்கலாம், சிறிய வேறுபாடுகள் பெரிய வரிச் செலவுகளுக்கு வழிவகுக்கும்.
இது இந்தியாவின் கார் வரி முறை எவ்வளவு சிக்கலானது என்பதைக் காட்டுகிறது. ஹூண்டாய் விஷயத்தில் என்ன நடக்கிறது என்பது எதிர்காலத்தில் இந்த விஷயங்கள் எவ்வாறு கையாளப்படும் என்பதற்கான வழிகாட்டுதலாக இருக்கும். இது கார் விலைகளையும் பாதிப்பதோடு, புதிய கார்களின் அறிமுகம் ஆகியவற்றிலும் பெரிய மாற்றத்தை கொண்டு வரலாம்.





















