EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
EV New Electric Cars Launched in 2025: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நடப்பாண்டில் அறிமுகமான மின்சார கார் மாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

EV New Electric Cars Launched in 2025: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நடப்பாண்டில் அறிமுகமான மின்சார கார் மாடல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
2025ல் அறிமுகமான மின்சார எஸ்யுவிக்கள்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த சில ஆண்டுகளாகவே, எஸ்யுவி கார்களின் ஆதிக்கம் என்பது தொடர்ந்து வருகிறது. அதே பாணியில் மின்சார கார்களின் பயனபாடும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக உள்நாட்டு கார் உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமின்றி, டெஸ்லா போன்ற வெளிநாட்டு ப்ராண்டுகளும் இந்திய சந்தையில் மின்சார கார்களை நடப்பாண்டில் அறிமுகப்படுத்தின. அந்த வகையில் நடப்பாண்டில் முற்றிலும் புதியதாக சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அறிமுகமான, மின்சார எஸ்யுவிக்கள் மட்டும் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.
புதிய மின்சார எஸ்யுவிக்கள்:
1. மஹிந்த்ரா XEV 9S
நடப்பாண்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மின்சார கார்களில் ஒன்று மஹிந்த்ராவின் XEV 9S மாடலாகும். இந்த முற்றிலும் புதிய மின்சார காரானது, இன்ஜின் அடிப்படையிலான XUV700 கார் மாடலுக்கு நிகரானதாகும். 7 பேர் அமரும் வகையிலான இடவசதியை கொண்டுள்ளது. அதேநேரம், க்ளோஸ்ட்-ஆஃப் க்ரில் மற்றும் ஏரோடைனமிகலி டிசைண்ட் அலாய் வீல்கள் என மின்சார எடிஷனுக்கான தனித்துவமான டச்சையும் கொண்டுள்ளது. மேலும் 3 ஸ்க்ரீன் செட்-அப், வெண்டிலேடட் முன் மற்றும் பின்புற இருக்கை, டூயல் ஜோன் க்ளைமேட் கண்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும் 540 டிகிரி கேமரா, 6 ஏர் பேக்குகள், லெவல் 2 ADAS, குழந்தைகளுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கைகள் ஆகியவற்றையும் பெற்றுள்ளது.
59KWh, 70kWh மற்றும் 79kWh என மூன்று பேட்டரி பேக் ஆப்ஷன்களை கொண்டு அதிகபட்சமாக 679 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஒரே ஒரு ரியர் வீல் கான்ஃபிகரேஷனில் மட்டுமே இந்த கார் கிடைக்கிறது. இதன் அறிமுககால விலை 29 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2. டாடா ஹாரியர்
மின்சார சந்தையில் நிகழ்ந்த மிகப்பெரிய அறிமுகமாக டாடா ஹாரியரின் மின்சார எடிஷன் கருதப்படுகிறது. ப்ராண்டின் மின்சார கார் போர்ட்ஃபோலியோவில் ஆல்-வீல் ட்ரைவ் அம்சம் கொண்ட ஒரே கார் இதுவாகும். 3 வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரானது, 1.5 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் ட்ரைவர்ஸ் டிஸ்பிளே, டூயல் ஜோன் க்ளைமேட் கண்ட்ரோல், லெவல் 2 ADAS மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகிய தொழில்நுட்ப அம்சங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 65kWh மற்றும் 75kWh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை கொண்டு, அதிகபட்சமாக 627 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது. இதன் விலை ரூ.21.49 லட்சத்தில் தொடங்கி ரூ.30.23 லட்சம் வரை நீள்கிறது.
3 &4. வின்ஃபாஸ்ட் VF6 & VF7
இந்திய சந்தைக்கான வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் முதல் இரண்டு மாடல்களாக, முற்றிலும் புதிய மின்சார கார்களான VF6 மற்றும் VF7 ஆகியவை சந்தைப்படுத்தப்பட்டன. இந்த இரண்டு 5 சீட்டர் கார்களும் பெரும்பாலும் உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஒரே மாதிரியாக காட்சியளிக்கின்றன. பல அம்சங்களும் ஒரே மாதிரியாக உள்ளன. அதன்படி பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே, டூயல் ஜோன் க்ளைமேட் கண்ட்ரோல், 7 ஏர் பேக்குகள், லெவல் 2 ADAS மற்றும் 360 டிகிரி கேமரா ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. முதல் மாடலானது 59.6kWh பேட்டரி பேக்கை கொண்டு 468 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிப்பதாக கூறப்படுகிறது. இதன் விலை 16.49 லட்சம் முதல் 18.29 லட்சம் வரை நீள்கிறது. அதேநேரம், இரண்டாவது மாடலானது ஒற்றை மற்றும் இரட்டை மோட்டார் ஆப்ஷன்களுடன் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. அதிகபட்சமாக 532 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 20.89 லட்சத்தில் தொடங்கி 25.49 லட்சம் வரை நீள்கிறது.
5. டெஸ்லா மாடல் Y
நீண்ட கால நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நடப்பாண்டில் ஒரு வழியாக டெஸ்லா கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. முற்றிலும் கட்டமைக்கப்பட்ட வடிவில் ப்ராண்டின் முதல் காராக இந்தியாவில் மாடல் ஒய் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 15.4-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், 9-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், 360-டிகிரி கேமரா மற்றும் டெஸ்லாவின் முழு ADAS சூட் ஆகியவற்றுடன் வருகிறது.
64kWh மற்றும் 84.2kWh பேட்டரி பேக்குகளை கொண்டு மாடல் Y இந்தியாவில் ரியர் வீல் ட்ரைவ் அம்சத்தில் வழங்கப்படுகிறது மற்றும் 661 கிமீ ரேஞ்ச் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 59.89 லட்சம் முதல் 67.89 லட்சம் வரை நீள்கிறது.





















