எமனாக மாறிய ஏர்பேக் - 7 வயது சிறுவன் பலி, கார் பயணத்தில் இப்படியொரு ஆபத்தா? பெற்றோர் உஷார்
Car Air Bags: சென்னையில் கார் விபத்தில் முன் இருக்கையின் ஏர் பேக் மோதி 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Car Air Bags: காரில் பயணிக்கும் போது கவனிக்காமல் செய்யும் சிறு தவறுகள் கூட, உயிரை பறிக்கும் என்பதற்கு திருப்போர் சம்பவம் உதாரணமாக மாறியுள்ளது.
சீட் பேக் மோதி சிறுவன் பலி:
செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த வீரமுத்து, தனது மனைவி மற்றும் 7 வயது மகன் கவின் உள்பட 5 பேருடன் வாடகை காரில் சென்னை நோக்கி பயணித்து கொண்டிருந்தார். அப்போது முன்னே சென்ற கார் திடீரென இடதுபுறம் திரும்பியதால், வீரமுத்து சென்ற வாடகை கார் அதன் மீது மோதியுள்ளது. இதனால் காரின் முன்புற ஏர்பேக் அதிவேகமாக வெடித்து வெளியே வந்து, முன் இருக்கையில் தந்தையின் மடியில் அமர்ந்திருந்த சிறுவன் கவின் முகத்தில் பலமாக மோதியுள்ளது. அந்த அதிச்சியில் மயக்கமடைந்த சிறுவன், அவ்வழியாக வந்தவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டு திருப்போரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். உயிரை காப்பதற்காக பொருத்தப்படும் ஏர்-பேக்கே, ஒரு 7 வயது சிறுவனின் உயிரை பறித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏர் பேக்கின் வடிவமைப்பு:
சாலை விபத்துகளால் அதிக உயிரிழப்பு ஏற்படும் நாடுகளின் பட்டியலில், இந்தியா தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. இதனை தவிர்க்கும் நோக்கில், அனைத்து கார்களிலும் விபத்துகளின் போது உயிரை காக்க உதவும் வகையில் 6 ஏர் பேக்குகள் இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கார்களில் உள்ள ஏர்பேக் சிஸ்டம் என்பது பெரியவர்களை காக்கும் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது குறிப்பிட்ட வரம்பிலான குழந்தைகளுக்கு நேரடியாக பாதுகாப்பை வழங்காது என்பதால், பூஸ்டர் சீட்களை பயன்படுத்த வேண்டியது அவசியமாகும்.
குழந்தைகளுக்கான முன் இருக்கை விதிகள்:
இந்தியாவில் 4 அடி 5 அங்குலத்திற்கு குறைவான 14 வயது வரையிலான குழந்தைகள், காரின் முன் இருக்கையில் அமர்வது என்பது சட்டப்படி அனுமதிக்கப்படாததாகும். சிறுவர்கள் 14 வயதை எட்டியிருந்தாலும் கூட, குறிப்பிட்ட உயரத்தை அடையாவிட்டால் முன் இருக்கையை தவிர்ப்பது நல்லது. பெரியவர்களுக்கு என வடிவமைக்கப்பட்ட சீட் பெல்ட்கள் தோள்பட்டைக்கு முழுமையாக பொருந்தும் அளவிற்கு வளர்ந்த பிறகே சிறுவர்கள் முன் இருக்கையில் அமர வேண்டும். காரணம் முன்புற இருக்கைகள் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானதாகும். அதன்படி பார்த்தால் வயதை காட்டிலும் மேற்குறிப்பிடப்பட்ட வயது என்பது இங்கு மிகவும் முக்கியமாகும்.
ஏர்பேக்கின் வேகம், தாக்கம்:
முன் இருக்கை ஏர்பேக்குகள் மிதமான முதல் கடுமையான முன்பக்க மோதல்களில் போது, பயணிகளின் உயிரை காக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அடைக்கப்பட்ட பகுதியிலிருந்து வெளிப்படும் ஏர்பேக் மீது மோதுவது என்பது, மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் (சீட் பெல்ட் அணிந்திருந்தால்) சென்று ஒரு சுவற்றின் மீது மோதுவதற்கு சமமாகும். சீட் பெல்ட் அணியாதவர்களுக்கு இது 22.5 கிலோ மீட்டர் வேகத்திற்கான தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் சீட் பெல்ட்கள் ஆரம்ப உந்தத்தைக் குறைக்கின்றன. அதோடு, விபத்துகளின் போது அதிகபட்சமாக மணிக்கு 321 கிலோ மீட்டர் வேகத்தில், அடைக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேறி ஏர் பேக்குகள் பெரிதாகின்றன. அதாவது ஏர் பேக் வெளியே வந்து பெரிதாகி பயணிகளின் முகத்தின் மீது மோதி உயிரை காப்பது என்பது, வெறும் 20 முதல் 50 மில்லி விநாடிகளில் நடந்து முடிந்து விடுகிறது.
குழந்தைகளுக்கு ஆபத்தான ஏர் பேக்குகள்:
பெரியவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஏர்பேக்குகள் அதிகப்படியான சக்தியுடன் செயல்படுகின்றன. இந்த சக்தி குழந்தையின் சிறிய மற்றும் பலவீனமான உடலுக்கு மிதமிஞ்சியதாகும். எனவே குழந்தைகள் அதனை எதிர்கொண்டால் கடுமையான மூளை காயம் அல்லது மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது. பயணியின் முகத்தை நோக்கிய ஏர்பேக்கின் விசை, கார் இருக்கையை நோக்கி அதிவேகத்தில் உந்தி தள்ளக்கூடும். இதனால் குழந்தைகளின் தலையில் பலத்த காயம் ஏற்படலாம், மூச்சு திணறல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே காரில் பயணிக்கும்போது, முடிந்தவரை குழந்தைகளை பின்புற இருக்கையில் அமரச் செய்வது மிகவும் பாதுகாப்பானதாகும்.





















