BYD Electric car: ஒருமுறை சார்ஜ் செய்தால் 700 கி.மீ. போலாம்.. விரைவில் வருகிறது பிஒய்டி நிறுவனத்தின் புதிய கார்
பிஒய்டி நிறுவனத்தின் புதிய மின்சார சொகுசு கார் விரைவில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
சீனாவை சேர்ந்த பிஒய்டி நிறுவனம் உலகிலேயே மின்சார கார்களை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது. அந்நிறுவனத்தின் இரண்டு கார் மாடல்கள் ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் உள்ளது. அதில் BYD ஆட்டோ 3 எனும் கார் மாடல் ரூ.33.99 லட்சத்திற்கும், BYD E6 எனும் கார் மாடல் ரூ.29.2 லட்சத்திற்கும் விற்பனையாகிறது. இந்நிலையில், புதிய கார் மாடல் ஒன்றை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த பிஒய்டி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
புதிய கார் அறிமுகம்:
பிஒய்டி நிறுவனத்தின் புதிய சீல் செடான் எலெக்ட்ரிக் கார் 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்படுகிறது. 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வு ஜனவரி 13 ஆம் தேதி துவங்கி ஜனவரி 18 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஏற்கனவே பல்வேறு சர்வதேச சந்தைகளில் பிஒய்டி சீல் செடான் மாடல் கார் விற்பனை செய்யப்படுகிறது. அண்மையில் மலேசியாவிலும் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் ஓஷன் எக்ஸ் கான்செப்ட்-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார் ஸ்கேட்போர்டு பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது.
பேட்டரி திறன்:
புதிய பிஒய்டி சீல் மாடலில் 61.4 கிலோவாட் ஹவர் மற்றும் 82.5 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் சிறிய பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 550 கிலோமீட்டர்களும், பெரிய பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 700 கிலோமீட்டர் தூரத்திற்கு மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை சிங்கில் மற்றும் டூயல் மோட்டார் வடிவில் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.
வாகனத்தின் திறன்:
ஜீரோவிலிருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 3.8 விநாடிகளில் எட்டும் திறன் கொண்ட இந்த காரை, அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செலுத்த முடியும். இதன் பேட்டரியை வெறும் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே 300 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை சர்வதேச சந்தையில் தற்போது, ரூ.25.75 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.35.21 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய செடான் காரின் அறிமுகம் மற்றும் விலை தொடர்பான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
வடிவமைப்பு:
பிஒய்டி சீல் மாடல் 4.80 மீட்டர் நீளம், 1.87 மீட்டர் அகலம், 1.46 மீட்டர் உயரம் மற்றும் 2.92 மீட்டர் வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் செடான் மாடல் வெளிப்புறத்தில் முன்புற டிப்பிங் பேனட், கூர்மையான முகப்பு விளக்கு கிளஸ்டர், கூப் போன்ற ரூஃப்லைன், அகலமான ஏர் இண்டேக், பூமராங் வடிவ எல்.ஈ.டி டிஆர்எல்கள், ஃபுல் விட்த் எல்.ஈ.டி லைட் பார், பக்கவாட்டுகளில் கேரக்டர் லைன், ஸ்போர்ட் அலாய் வீல்கள், ஸ்மார்ட் டோர் ஹேண்டில்கள், ஷார்ட் ஒவர்ஹேங் மற்றும் பிரமாண்ட பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளது.