![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Anand Mahindra | `கார் உற்பத்தி எங்களுக்கு வாழ்வியல்!’ - எலான் மஸ்க் ட்வீட்டிற்குப் பதிலளித்த ஆனந்த் மகேந்திரா!
எலான் மஸ்க் கார் உற்பத்தி குறித்து செய்திருந்த ட்வீட் ஒன்றிற்குப் பதிலளித்துள்ள மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா, கார் உற்பத்தி தங்களுக்கு வாழ்வியலாக மாறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
![Anand Mahindra | `கார் உற்பத்தி எங்களுக்கு வாழ்வியல்!’ - எலான் மஸ்க் ட்வீட்டிற்குப் பதிலளித்த ஆனந்த் மகேந்திரா! Anand Mahindra responds to Elon Musk on Twitter saying car production is a way of life for them Anand Mahindra | `கார் உற்பத்தி எங்களுக்கு வாழ்வியல்!’ - எலான் மஸ்க் ட்வீட்டிற்குப் பதிலளித்த ஆனந்த் மகேந்திரா!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/08/0b3cea7a37fd257b850cee29497d33c2_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உற்பத்தி செய்யும் கார்கள் இந்திய மார்க்கெட்டுக்கு உகந்தவையல்ல என ஆனந்த் மகேந்திரா கருத முடியும். எனினும் இந்த இரு தொழிலதிபர்களும் ஒரு வாதத்தில் ஒரே பக்கத்தில் நிற்க முடியும். அது என்னவெனில், கார்களை உற்பத்தி செய்வது கடினமான பணி என்பது தான். கடந்த செப்டம்பர் 7 அன்று, எலான் மஸ்க் கார் உற்பத்தி குறித்து செய்திருந்த ட்வீட் ஒன்றிற்குப் பதிலளித்துள்ள மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா, `கார் உற்பத்தி கடினமானது; அதன் மூலமாக பணம் ஈட்டுவது இன்னும் கடினமானது’ என எலான் மஸ்க் கூறியிருந்ததை ஆதரித்துள்ளார். மேலும் அவர் கடந்த பல பத்தாண்டுகளாக வியர்வை சிந்தி, அடிமைபோல உழைத்ததால் கார் உற்பத்தி தங்களுக்கு வாழ்வியலாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகத்தின் புகழ்பெற்ற எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பதிவு ஒன்றில், ஜேம்ஸ் டைசன் எழுதிய புத்தகம் ஒன்றில், எலக்ட்ரிக் கார் உற்பத்தி செய்ய முயன்று அதில் தோல்வி அடைந்தது குறித்து குறிப்பிட்டிருப்பதைப் பகிர்ந்துள்ளார். அதைப் பகிர்ந்த போது, எலான் மஸ்க், `கார் உற்பத்தி கடினமானது; அதன் மூலமாக பணம் ஈட்டுவது இன்னும் கடினமானது’ என்று கூறியிருந்தார்.
![Anand Mahindra | `கார் உற்பத்தி எங்களுக்கு வாழ்வியல்!’ - எலான் மஸ்க் ட்வீட்டிற்குப் பதிலளித்த ஆனந்த் மகேந்திரா!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/08/b95ebab6c64ada850ee47e19c13c6e6c_original.jpg)
எலான் மஸ்க் சொன்னதை ஆதரித்த ஆனந்த் மகேந்திரா, கார் உற்பத்தியாளர்கள் கடுமையான சவால்களைச் சந்தித்து வருவதைக் கூறும் விதமாக `நீங்கள் சொன்னது சரி, எலான் மஸ்க். நாங்கள் இந்தப் பணியைக் கடந்த பல பத்தாண்டுகளாக செய்து வருகிறோம். இன்னும் அதற்காக வியர்வை சிந்தி, அடிமைபோல உழைக்கிறோம். இது எங்கள் வாழ்வியலாக மாறியிருக்கிறது’ எனப் பதிலளித்துப் பகிர்ந்துள்ளார்.
You said it, @elonmusk And we’ve been doing that for decades now. Still sweating & slaving away at it. It’s our way of life… https://t.co/EGpcyKrRhF
— anand mahindra (@anandmahindra) September 7, 2021
இந்த ட்வீட்டுக்குத் தற்போது 4500க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளதோடு, பலரும் கமெண்ட் செய்துள்ளனர்.
ஆனந்த் மகேந்திராவுக்கு எலான் மஸ்க் இன்னும் பதில் தெரிவிக்கவில்லை என்ற போதும், எலான் மஸ்க் புதிய கார் உற்பத்தி நிறுவனங்கள் கார் பாகங்களை அதிக லாபத்திற்கு விற்பதில் சிரமங்களைச் சந்திப்பதாகக் கூறியுள்ளார்.
![Anand Mahindra | `கார் உற்பத்தி எங்களுக்கு வாழ்வியல்!’ - எலான் மஸ்க் ட்வீட்டிற்குப் பதிலளித்த ஆனந்த் மகேந்திரா!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/08/4be3271eb530bed185c40c5d81498998_original.webp)
``பல ஆண்டுகளாக கார் உற்பத்தியில் ஈடுபடும் பெரிய நிறுவனங்கள் தங்கள் கார்களை லாபம் இல்லாமலோ, மிகக் குறைந்த லாபத்திற்கோ விற்பனை செய்கின்றன. வாரண்டி காலம் முடிவடைந்த பின், பழுதுபார்ப்பதற்கும், பாகங்களை விற்பனை செய்வதில் தான் இந்த நிறுவனங்கள் லாபம் பெறுகின்றன. புதிய கார் நிறுவனங்களுக்கு இப்படியான வாய்ப்பு இல்லை. மேலும், விற்பனை செய்வதற்கும், பழுதுபார்ப்பதற்குமான கட்டமைப்பும் புதியவர்களிடம் இல்லை” எனத் தொடர்ந்து ட்வீட் செய்துள்ளார் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்.
கடந்த வாரம், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மகேந்திரா நிறுவனத்தில் வாகன விற்பனை கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தோடு ஒப்பிடுகையில் 17 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக, அந்நிறுவனம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)