BMW iX3 EV: என்னடா 400, 500-ன்னு.. 800 கிமீ ரேஞ்சை அள்ளி வீசிய பிஎம்டபள்யு - மின்சார காரின் அம்சங்களும், விலையும்
BMW iX3 EV: சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையில் BMW நிறுவனத்தின் புதிய iX3 மின்சார கார் மாடல் 800 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

BMW iX3 EV: சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையில் BMW நிறுவனத்தின் புதிய iX3 மின்சார கார் மாடல் குறித்த முழு விவரங்களையும் இந்த தொகுப்பில் அறியலாம்.
BMW iX3 மின்சார கார் - பேட்டரி, ரேஞ்ச்
பிஎம்டபள்யூ நிறுவனம் தனது முற்றிலும் மின்சாரமயமான, iX3 கார் மாடலின் இரண்டாவது தலைமுறை எடிஷனை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இரட்டை மோட்டார்களுடன் கூடிய 108.7 KWh சிலிண்டரிகல் செல் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அதிகபட்சமாக 469hp மற்றும் 645 Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது. இதன் மூலம் பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 4.9 விநாடிகளில் எட்டும் என கூறப்படுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 210 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என்றும், ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 805 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க முடியும் என்றும் பிஎம்டபள்யூ நிறுவனம் அறிவித்துள்ளது.
400 KW DC சார்ஜிங் மூலம் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே, 372 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 முதல் 80 சதவிகித சார்ஜிங்கை எட்ட வெறும் 21 நிமிடங்களே போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BMW iX3 மின்சார கார் - வடிவமைப்பு விவரங்கள்
பிஎம்டபள்யூவின் புதிய iX3 காரானது, இரட்டை வழிகளில் செயல்படும் தன்மையை கொண்டுள்ளது. அதாவது வெஹைகிள் டூ லோட், வெஹைகிள் டூ ஹோம் மற்றும் சில நேரங்களில் வெஹைகிள் டூ லோட் அம்சங்களையும் பெற்றுள்ளது. அளவீடு அடிப்படையில் 4 ஆயிரத்து 782 மில்லி மீட்டர் நீளம், ஆயிரத்து 895 மில்லி மீட்டர் அகலம் மற்றும் ஆயிரத்து 635 மில்லி மீட்டர் உயரத்தையும் கொண்டுள்ளது. அதேநேரம், காற்றின் இழுவை விளைவை குறைக்க வாகனத்தின் ஏரோடைனமிக்ஸ் 0.24 அளவிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. 520 லிட்டர் பூட் கெபாசிட்டியை, பின்புற இருக்கையை மடிப்பதன் மூலம் ஆயிரத்து 750 லிட்டர் வரை விரிவுபடுத்திக் கொள்ளலாம்.
BMW iX3 மின்சார கார் - வெளிப்புற அம்சங்கள்
iX3 மாடலானது கூர்மையான முன்புறத்துடன் வெர்டிகலி இல்லுமினேடட் கிட்னி க்ரில்களை, 1960களில் இருந்த நியூ க்ளாசே மாடல்களை போன்று கொண்டுள்ளது. மெலிதான மற்றும் இறகு வடிவிலான முகப்பு விளக்கு ஃப்ரேம்கள் மாடர்ன் டே கலாச்சாரத்திற்கு ஏற்றதாக உள்ளது. பக்கவாட்டு அமைப்பானது தூய்மையான மேற்பரப்பை கொண்டுள்ளது. ஃப்ளஷ் கதவு கைப்பிடிகள், ஸ்கொயர்ட் பாடி கலர் வீல் ஆர்சஸ் ஆகியவ்ற்றை பெற்றுள்ளது. பின்புறத்தில் ஸ்ப்லிட் டெயில் லைட் நீட்டிக்கப்பட்டுள்ளது.
BMW iX3 மின்சார கார் - உட்புற அம்சங்கள்
EV பேக்கேஜிங்கிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கேபினானது, காற்றோட்டமாகவும் விசாலமாகவும் வழங்கப்பட்டுள்ளது. ஸ்லிம்லைன் இருக்கைகள், வ்ரேப்ரவுண்ட் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல், மற்றும் பனோரமிக் கூரை இடம்பெற்றுள்ளது. Econeer துணிகள், கடல் பிளாஸ்டிக்குகள் மற்றும் இரண்டாம் நிலை அலுமினிய கூறுகள் உள்ளிட்ட மறுசுழற்சி செய்யும் தன்மையை கொண்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, புதிய BMW பனோரமிக் ஐடிரைவ் அமைப்பானது அதிக கவனம் ஈர்க்கிறது.
இது முழு அகல விண்ட்ஸ்கிரீன் ப்ரொஜெக்ஷன், 3D ஹெட்-அப் டிஸ்ப்ளே மற்றும் புதிய OS X ஆல் இயக்கப்படும் ஃப்ரீ-கட் சென்ட்ரல் டச்ஸ்கிரீன் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. வைப்பர்கள், கண்ணாடிகள் மற்றும் அபாயக் கட்டுப்பாடுகள் போன்ற அத்தியாவசிய பயன்பாடுகளுக்கு பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளன. மற்ற அனைத்து அம்சங்களும் டச், வாய்ஸ் அல்லது மல்டிஃபங்க்ஷன் ஸ்டீயரிங் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. சமீபத்திய தனிப்பட்ட உதவியாளர் மற்றும் டிஜிட்டல் சாவியுடன், ஓவர்-தி-ஏர் அப்டேட்கள் மற்றும் செயலி இண்டெக்ரேஷனும் வழங்கப்பட்டுள்ளன. சஸ்பென்ஷன் ஹார்ட்வேர் ஆனது ஐந்து-இணைப்பு பின்புற அமைப்பைக் கொண்ட iLink முன் வடிவவியலைக் கொண்டுள்ளது, இது அதிர்வெண் சார்ந்த டம்ப்பர்களால் ஆதரிக்கப்படுகிறது.
உற்பத்தியும்.. சர்வதேச சந்தை அறிமுகம்..
iX3 மாடலின் உற்பத்தி இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஹங்கேரியில் உள்ள BMW இன் புதிய டெப்ரெசென் ஆலையில் தொடங்க உள்ளது. ஐரோப்பிய விற்பனை 2026 வசந்த காலத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. 2026 கோடையில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதோடு, அதே காலகட்டத்தில் BMW இன் ஷென்யாங் தளத்தில் சீனாவிற்கான எடிஷன் உற்பத்தி செய்யப்பட உள்ளது. BMW இன் இந்திய போர்ட்ஃபோலியோவில் பல வாகனங்களுக்கான தேவை அதிகளவில் இருப்பதை கருத்தில் கொண்டு, iX3 விரைவில் இந்திய சந்தையிலும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு சந்தையில் இதன் விலை சுமார் ஒரு கோடி ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.





















