மயிலாடுதுறை: சிறப்பாக நடைபெற்ற வைத்தியநாத சுவாமி கோவில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா..!
வைத்தீஸ்வரன்கோவில் வைத்தியநாத சுவாமி கோவில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா கொரோனா ஊரடங்கு உத்தரவால் பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நவ கிரகங்களில், செவ்வாய் பகவான், செல்வ முத்துக்குமார சுவாமி, சித்த மருத்துவத்தின் மூலவரான தன்வந்திரி சித்தர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இதுபோன்று இங்கு வரும் பக்தர்களின் நோய்களைப் போக்கும் ஐதீகம் கொண்ட மூலவர் வைத்தியநாத சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு நோய் தீர்த்து வருகிறார்.
இந்தகோவிலில் அமைந்துள்ள தீர்த்த குளத்தில் நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டு கோவிலில் வழங்கப்படும் பிரசாதமான திருச்சாந்துருண்டையை உட்கொண்டால் வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவில் 23 ஆண்டுகளுக்கும் பின்னர் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடைபெற்றன வந்தன. 48-ஆம் நாள் நாளான இன்று மண்டல பூஜை பூர்த்தி விழா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் இரண்டு கால யாகசாலை பூஜைகள் மற்றும் கோவிலில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் விநாயகர், சண்டிகேஸ்வரர், செவ்வாய் பகவான், சுவாமி அம்பாள் மற்றும் செல்வ முத்துக்குமார சுவாமியை எழுந்தருளச் செய்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அப்போது சுவாமி அம்பாளுக்கு 1008 கலச அபிஷேகமும், செல்வமுத்துக்குமார சுவாமிக்கு 1008 சங்காபிஷேகமும் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
முன்னதாக ருத்ர வேத பாராயணம், ஜபம் திருமுறைகளை பாராயணம் ஆகியவை ஓதப்பட்டன. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது யாக பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகளை 50 க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். தமிழ்நாடு அரசின் கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி இந்த பூஜைகள் பக்தர்கள் இன்றி எளிமையாக நடத்தப்பட்டன. அதனால் சிவாச்சாரியார்கள், திருமடம் மற்றும் கோவில் சிப்பந்திகள் உள்ளிட்டவர்கள் மட்டும் சொற்ப எண்ணிக்கையில் அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள், பக்தர்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பிரசித்தி பெற்ற வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு பக்தர்கள் யாரையும் அனுமதிக்காத நிலையில், 48 நாட்களுக்கு பின்னர் நடைபெறும் மண்டலாபிஷேக பூர்த்தி விழாவில் கலந்துகொண்டு வைத்தியநாத சுவாமி அருளைப்பெறலாம் என எண்ணிய பக்தர்களுக்கு கோவிலுக்குள் அனுமதி இல்லாத காரணத்தால் வருந்தினாலும், சமூக விலகலை மதித்து வருகின்றனர்