மேலும் அறிய
திருவாரூர் : தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர விழா.. பக்தியுடன் குவிந்த பக்தர்கள்
தியாகராஜசுவாமி பாத தரிசன =நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று பாத தரிசனம் செய்தனர். வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே இந்த தியாகராஜர் பாத தரிசனம் என்பது நடைபெறுகிறது.

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் வரிசை
திருவாரூர் தியாகராஜர் கோவில் மிகவும் தொன்மை வாய்ந்த, கட்டப்பட்ட காலம் எதுவென்று அறியமுடியாத அளவிற்கு பழமையான கோயிலாகும்.சைவ சமயத்தின் தலைமை பீடம் ஆகும்,சர்வ தோஷ பரிகார தலமாகவும் பஞ்ச பூத தலங்களில் பிருத்வி எனப்படுகிற பூமிக்குரிய தலமாகவும் இந்த கோவில் விளங்குகிறது.
மேலும் பன்னிரு திருமுறைகளில் பாடல் பெற்ற தலமாகவும்,சமய குரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற தலமாகவும் இந்த திருவாரூர் தியாகராஜர் கோவில் அமைந்துள்ளது. சப்தவிடங்கர் தலங்களுள் முதன்மையான தலமாகவும் இந்த கோவில் விளங்குகிறது. திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. இது திருவிழா பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்து வருவதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. இந்த பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் கடந்த மார்ச் 15-ஆம் தேதி நடைபெற்றது.

இந்த தேரோட்டம் ஆனது ஏழாம் நூற்றாண்டில் நடைபெற்றதற்கான வரலாற்றுக் குறிப்புகள் இன்றளவும் உள்ளன. மேலும் இந்த தேர்த் திருவிழாவை காண்பதற்கு திருநாவுக்கரசர் திருஞான சம்பந்தர் ஆகியோர் வந்து தங்கியிருந்ததாக வரலாற்றுக்குறிப்புகள் எடுத்துரைக்கின்றன. குறிப்பாக தஞ்சை அரண்மனை சரஸ்வதி மஹாலில் உள்ள மராட்டிய மன்னர் காலத்து ஆவணம் ஒன்றில், திருவாரூர் தியாகராஜ சுவாமி பங்குனி ரதோஸ்தவம், மாசி மாதம் 8 ஆம் தேதி முதல் சித்திரை இரண்டாம் தேதி வரையிலும் 55 நாள் உத்சவ விவரங்கள் என 1843 இல் நடைபெற்ற பங்குனி உத்ஸவ விழா பற்றி தெரிவிக்கிறது.திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர விழா கடந்த மாதம்; 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி பூதம், யானை என பல்வேறு வாகனங்களில் சந்திரசேகரர்-தருனேந்தசேகரி அம்பாளுடன் வீதியுலா நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழச்சியாக ஆழித்தேரோட்ட விழா கடந்த 15-ம் தேதி நடைபெற்றது.

இதனையடுத்து தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சபாபதி மண்டபத்தில் எழுந்தருளிய தியாகராஜர் சுவாமிமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று காலை நறபதஞ்சலி வியாக்ரபாத மகரிஷிகளுக்கு தியாகராஜசுவாமி பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று பாத தரிசனம் செய்தனர். பாத தரிசனம் கண்டால் பாவங்கள் நீங்கி புண்ணியம் பெறலாம் என்பது ஐதீகம். வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே இந்த தியாகராஜர் பாத தரிசனம் என்பது நடைபெறுகிறது.
எனவே இதனை காண பக்தர்கள் பெருமளவு வருகை தருவது வழக்கம். அந்தவகையில் திருவாரூர் புகழ்பெற்ற ஆழித்தேரோட்டம் முடிவடைந்து நடைபெறும் இந்த பாதை தரிசனத்தில் பெருமளவு பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கவிதா தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். திருவாரூரில் தியாகராஜர் கோவில் பாதசரினம் அருளும் நிகழ்ச்சியை காண நீண்ட வரிசையில் இன்று பொதுமக்கள் கண்டு களித்தனர்.
மேலும் படிக்கவும்





















