‛8 மாதத்தில் ரூ.1000 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு’ -இந்து சமய அறநிலையத்துறை
அறநிலையத் துறைக்கு சொந்தமான அனைத்து நிலங்களும் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு கோயில்கள் வசம் கொண்டுவரப்படும் எனவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் இருந்து கடந்த 8 மாதங்களில் 1543 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மே மாதம் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் முதல் ஊழல் இல்லாத நிலையைக்கொண்டு வருவோம் என அரசு அறிவித்திருந்தது. குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சராக சேகர் பாபு பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். முதற்கட்டமாக மாநிலத்தில் உள்ள கோயில் நிலங்கள் மற்றும் அதன் சொத்து விவரங்களை பொதுமக்கள் இணையத்தில் பார்க்கும் வகையில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டார். இதேப்போன்று கோயிலுக்குச் சொந்தமான கட்டிடங்களுக்கு முறையாக வாடகை வசூலிப்பது, கோயில்களைச் சீரமைப்பது, புனரமைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார். இதோடு கோயில் நிலங்களில் ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்றுவோம் எனவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்துவந்த நிலையில் தான், தற்போது ஆக்கிரமிப்பு நிலங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் அதன் மதிப்பையும் இந்து சமய அறநிலையத்துறை அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளது.
ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்டதுக்குறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆக்கிரமிப்பு நிலங்களை நவீன ரோவர் உபகரணங்களைப் பயன்படுத்திக் கண்டறிந்து வருவதாகவும், இதுவரை 424 நபர்களிடம் இருந்து நிலம், மனைகள், திருக்குளங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கடந்த 8 மாதங்களில் நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கைகளில் சுமார் 1543 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என தெரிவித்துள்ள அறநிலையத்துறை, இந்து சமய அறநிலையத் துறையின் சொத்துகளை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்கள் தாங்களாகவே வருகை தந்து அந்த நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறநிலையத் துறைக்கு சொந்தமான அனைத்து நிலங்களும் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு கோயில்கள் வசம் கொண்டுவரப்படும் எனவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துவருகிறார்.
மேலும் இறைவனின் சொத்து இறைவனுக்கே என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டு, கோயில் ஆக்கிரமிப்பு நிலங்களை தினசரி மீட்டு வருவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது தான் எங்களின் அடுத்த இலக்கு எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுவரை இத்தனை ஆண்டுகளில் பல கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்த வந்த நிலையில், தற்போது திமுக ஆட்சியில் அனைத்தும் மீட்கப்பட்டுவருவதாகவும் இதற்கு மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.