Kumbam Rasi: கும்ப ராசிக்காரர்களே! யோகத்தையும், அதிர்ஷ்டத்தையும் தரப்போகும் 5 கிரகங்களின் பெயர்ச்சி!
கும்ப ராசியினருக்கு 5 கிரகங்களின் பெயர்ச்சி அவர்கள் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது என்பதை கீழே காணலாம்.
அன்பார்ந்த ABP நாடு வாசகர்களே, டிசம்பர் மாதத்தில் 5 கிரகங்கள் பெயர்ச்சியாக இருக்கின்றன. உங்கள் ராசிக்கு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பார்க்கலாம்.
புதன் பெயர்ச்சி :
டிசம்பர் 13 ஆம் தேதி புதன் பகவான் உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீடான விருச்சிகத்தில் இருந்து லாப ஸ்தானமான தனுசுக்கு பெயர்ச்சி ஆகிறார். கும்ப ராசிக்கு ஐந்தாம் அதிபதியும் எட்டாம் அதிபதியும் ஆன புதன் பகவான் உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் வரும் பொழுது, பிள்ளைகளால் ஆதாயம் நீண்ட நாட்களாக புத்திர பாக்கியத்திற்காக ஏங்கி இருந்த தம்பதியருக்கு குழந்தை பேறு உண்டாகும்.
பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று கூடுதல், காதல் விவகாரங்களில் வெற்றியடைதல், இரு வீட்டார் சம்மதத்துடன் காதல் ஜோடிகளின் திருமணம், எண்ணங்கள் ஈடேறும் அற்புதமான மாதமாக அமையப்போகிறது. வாழ்க்கையில் இதுவரை எந்த ஒரு பிடிப்பும் இல்லாதிருந்த சிலருக்கு முக்கியமான பதவிகள் உங்களைத் தேடி வரப்போகிறது. புதன் பகவான் மூல நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் பொழுது மறைமுகமாக எதிரிகள் இருந்தாலும் அவர்கள் உங்கள் கண்முன்னே வந்து நின்று தோல்வியை தழுவுவார்கள். வம்பு வழக்குகளில் கண்ணை மூடிக்கொண்டு வெற்றி அடைவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பல காரியங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும்.
சூரியன் பெயர்ச்சி :
டிசம்பர் மாதம் 16ஆம் தேதி சூரிய பகவான் உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீடான விருச்சகத்தில் இருந்து உங்களுடைய ராசிக்கு 11 ஆம் வீடான தனுசு ராசிக்குள் நுழைகிறார். உங்களுக்கு ஏழாம் அதிபதி சூரிய பகவான் 11 ஆம் வீட்டில் அமரும் பொழுது ஏற்கனவே புதன் பயிற்சியில் சொல்லப்பட்டது போல நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தவர்களுக்கு ஜாதகத்தில் திருமண தோஷம் உள்ளவர்களுக்கு, அதேபோல் எத்தனையோ வரன்கள் பார்த்து விட்டோம் ஆனால் திருமணம் கைகூடி வரவில்லை என்று திருமணத்திற்காக காத்திருந்த கும்ப ராசி நேயர்களுக்கு ஒரு பொன்னான காலகட்டம் என்று கூறவேண்டும்.
வாழ்க்கைத் துணை பார்த்தாகிவிட்டது, நாள் குறித்தாகிவிட்டது, நிச்சய தாம்பூலத்துடன் நிற்கிறது, திருமண வரை செல்ல மாட்டேன் என்று சுபகாரியங்கள் அடம் பிடிக்கும் சமயத்தில், இந்த சூரியனின் லாப ஸ்தான பெயர்ச்சி உங்களுக்கு அனைத்து விதமான செல்வங்களையும் திருமண பந்தங்களையும் ஒன்றிணைத்து தரும். சூரிய பகவான் மூல நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் பொழுது உங்களுக்கு வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். அதேபோல கும்ப ராசிக்கு மிக, மிக யோகாதிபதியான சுக்கிர பகவானின் நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் பொழுது பணம் கட்டு கட்டாக வங்கியில் சேமிப்பாக உயரும்.
சூரிய பகவான் தன்னுடைய சொந்த நட்சத்திரத்தில் உத்திராடத்தில் பிரவேசிக்கும் பொழுது. வாழ்க்கைத் துணையின் பிணிகள் எல்லாம் நீங்கி உடல் ஆரோக்கிய மடையும். அதேபோல தம்பதியர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வம்பு வழக்குகள் கோர்த்து கேஸ் என்று நடந்து கொண்டிருப்பவர்களுக்கு தீர்ப்புகள் சாதகமாக வரும்.
சுக்கிரன் பெயர்ச்சி :
சுக்கிர பகவான் டிசம்பர் 25ஆம் தேதி துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். உங்களுக்கு தொழில் ஸ்தானமான விருச்சகத்தில் சுக்கிரன் நுழையும் பொழுது அவர் யோகாதி பதியாக இருப்பதால் தொழில் விஷயமாக உங்களுக்கு நல்ல பலன்களை வாரி வழங்கப் போகிறார். குறிப்பாக ஏற்கனவே உத்தியோகம் பார்த்து கொண்டு இருக்கிறேன். ஆனால் பெரிய அளவுக்கு வருமானம் இல்லை என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. இந்த காலகட்டத்தில் புதிய வேலை வாய்ப்புகள், ஏற்கனவே ஒரு வேலையில் இருக்கும் போது மற்றொரு வேலைக்கான கதவுகள் திறக்கப்படுதல் போன்ற அற்புதமான பலன்கள் உங்களுக்கு நடைபெற போகிறது.
தொழில் ரீதியாக மட்டுமல்ல வீடு, மனை போன்றவை பத்திரப்பதிவாகும் புதிய இடம் வாங்குவதற்கான மிகப்பெரிய யோகம் உண்டாகும். வீட்டையே நீங்கள் அலுவலகமாக மாற்றி வீட்டில் இருந்தபடியே பல லட்சங்களை சம்பாதிக்கும் யோகம் உண்டாகப் போகிறது. தொழில் செய்யும் இடமாக உங்கள் வீட்டையோ அல்லது வீடு சார்ந்த பக்கத்து பகுதிகளையும் நீங்கள் தேர்ந்தெடுக்க கூடும். நீண்ட நாட்களாக தூரதேச பிரயாணம் மேற்கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்த உங்களுக்கு வேலை நிமித்தமாகவோ அல்லது சுற்றுலா நிமித்தமாகவோ தூர தேச பிரயாணத்தை மேற்கொள்ள போகிறீர்கள்.
செவ்வாய் பெயர்ச்சி :
செவ்வாய் பகவான் உங்களுக்கு மூன்றாம் அதிபதியும், பத்தாம் அதிபதியும் ஆகி விருச்சிக ராசியிலிருந்து டிசம்பர் 27ஆம் தேதி உங்களுடைய லாபஸ்தனமான தனுசு ராசிக்குள் பிரவேசிக்கிறார். கும்ப ராசிக்கு லாப ஸ்தானத்தில் ஏற்கனவே புதன் பகவானும், சூரிய பகவானும், சஞ்சாரம் செய்து கொண்டிருக்க செவ்வாய் பகவானும் இணைய உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் மேல் அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது.
செவ்வாய் நிலம் வீடு காரகத்துவமாகி அரசு சார்ந்த துறைகளையும் குறிப்பார். தனுசு ராசி குருபகவான் உடைய இல்லமாக இருப்பதால் அது லாவாதிபதியின் வீடாக இருப்பதால், நிச்சயமாக தொழில் ரீதியாக அரசு அரசு சார்ந்த உத்தியோகங்கள், ஆசிரியர் பணி ஆசிரியர் போட்டி தேர்வுகள் அரசு தேர்வுகள் என்று அனைத்திலும் வெற்றி பெறப் போகிறீர்கள் செவ்வாய் மூல நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் பொழுது உங்களுக்கு தடைபட்ட பத்திரப்பதிவாவதில் தாமதமான வீடு இடம் நிலம் சம்பந்தமான வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். செவ்வாய் பூராட நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் பொழுது, ஆசிரியர் பணி, ஆசிரியர் தேர்வு, போட்டிகளில் வெற்றி போன்றவை சாதகமாக முடியும். அதேபோல செவ்வாய் பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் பொழுது தாமதமான திருமணம் கைகூடி வரும். கும்ப ராசி பெண்களுக்கு நல்ல மணமகன் அமைவார்கள்.
புதன் வக்கிர பெயர்ச்சி :
புதன் பகவான் வக்கிரம் பெற்று விருச்சகத்திற்குள் டிசம்பர் 28ஆம் தேதி நுழைகிறார். உங்களுக்கு ஐந்தாம் அதிபதி பத்தாம் ஸ்தானத்தில் நுழைவதால் உங்களுடைய எண்ணங்களுக்கு உத்தியோகத்தில் மிகப்பெரிய வரவேற்பு உண்டு. உங்களுடைய ஐடியாக்களை மேல் அதிகாரிகள் மதிப்பார்கள். அதன் மூலமாக உங்களுக்கு பணவரவு ஆதாயம் உண்டு. மொத்தத்தில் இந்த டிசம்பர் மாதம் உங்களுக்கு மிகப்பெரிய யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரப் போகிறது.