கும்பகோணம் மாசிமக பெருவிழா-சக்கரபாணி சுவாமி, ராஜகோபாலசுவாமி, ஆதிவராக பெருமாள் கோயில்களில் கொடியேற்றம்
முக்கிய விழாவான வரும் 12 ஆம் தேதி ஒலைச்சப்பர வீதி உலாவும், 17 ஆம் தேதி திருத்தேரோட்டமும், 19ஆம் தேதி புஷ்பபல்லத்தில் வீதி உலாவும் நடைபெறுகின்றது
கும்பகோணத்தில் உள்ள சக்கரபாணி கோயில் வைணவக்கோயில் ஆகும். காவிரியாற்றுக்குச் சற்று தெற்கில் உள்ள இக்கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமாள் சக்கர வடிவமான தாமரைப்பூவில், அறுகோண எந்திரத்தில், எட்டு ஆயுதங்களை எட்டுத் திருக்கரங்களிலும் ஏந்திக் காட்சி தருகிறார். சூரியன் பூசித்ததால் இத்தலம் பாஸ்கர சேத்திரம் என்றழைக்கப்படுகிது. சக்கரபாணி சுவாமி தனிக்கோயில் கொண்டு வீற்றிருப்பது இத்தலத்தில் மட்டுமே வேறு எங்கும் இல்லை. ஒரு சமயம் திருக்குடந்தையில் தங்கித் தவம் செய்த தேவர்களும் முனிவர்களும், அசுரர்களால் துன்புறுத்தப்பெற்றார்கள். அவர்களைக் காக்கவேண்டி காவிரியில் இருந்த சுதர்சன சக்கரத்தினைக் கொண்டு திருமால், அசுரர்களை வீழ்த்தித் தேவர்களையும், முனிவர்களையும் காப்பாற்றினார். சக்கரத்தினைக் கரத்தில் கொண்டு விளங்குவதால் சக்கரபாணி என்று பெயர் பெற்றார். இந்திய துணை கட்டணத்தில் சக்கரராஜனுக்கு என்று அமைந்த ஒரே திருக்கோயிலாகும். இந்த திருத்தலத்தில் சூரியதேவனின் ஆணவத்தினை அடக்க விஷ்ணு சக்கர ரூபம் கொண்டுள்ளார். வைணவ திருத்தலங்களில் சூர்ய ஸ்தலம்.
ஒளியிழந்த சூரியன் தன்னொளி தனக்கு மீளவும் கிடைக்க ஸ்ரீசக்கரத்தையே சரணடைந்து பிரார்த்திக்க வைகாசி மாத பௌர்ணமி திதியில் ஸ்ரீசக்கரத்திலிருந்து ஸ்ரீசக்கரபாணி சுவாமி மூன்று கண்களுடனும், எட்டு கைகளுடனும் அக்னி மயமான கேசத்துடனும் அருட்காட்சி தந்து ஆதவனின் ஒளியை மீளவும் தந்துஅருள் செய்தார். தன் பெயரில் பாஸ்கர சேத்திரம் என இத்தலம் அமையப்பெறவேண்டும் என வரம் பெற்ற சூரியன் ஸ்ரீசக்கரபாணி சுவாமிக்கு கோயில் நிர்மாணித்து பாஸ்கர சேத்திரம் என்னும் இத்திருத்தலத்தை வழிபாடு செய்தான். இக்கோயிலில் மூலவராக சக்கரபாணி சுவாமி எட்டு கைகளுடன், தாயார் விஜயவல்லி எனவும் சுதர்சனவல்லி ஆகியோர் உள்ளனர்.
வராகத்தின் (பன்றி) முகத்தோடு விளங்குவதால் வராகப்பெருமாள் என்ற பெயர் பெற்றார். வைகுண்டத்தில் திருமாலை தருசிக்க தேவர்கள் வந்தபோது ஜயன், விஜயன் என்ற துவாரபாலகர்கள் திருமாலை தரிசிக்க அனுமதிக்கவில்லை. வாயிலில் அமர்ந்து தியானித்து திருமாலை வேண்டினர். திருமாலும் காட்சி தந்து அருளினார். தங்களுக்கு தடையாக இருந்த துவாரபாலகர்களுக்கு பூமியில் அரக்கர்களாக பிறக்க சாபமிட்டனர். அதிர்ந்து போன துவாரபாலகர்கள் திருமாலை வேண்டி சாபம் கொடுத்தது கொடுத்ததுதான். பூலோகம் செல்லுங்கள், தக்க தருணத்தில் தாமே சாப விமோசனம் அளிப்பதாக கூறி அனுப்பினார். ஹிரண்யட்சன், ஹிரண்யாகசிபு என்ற பெயருடன் பூலோகம் சென்ற அரக்கர்கள், கடும் தவம் செய்து பூமியை பாதாளாத்துக்கு கொண்டு சென்றார்கள். இக்கொடிய செயலைக் கண்ட வானவர்கள் பூமியின் இயக்கம் தடைபடக் கூடாது என்பதற்காக வைகுண்டத்தில் திருமாலை வணங்கி நிகழ்ந்ததைக் கூறிக் காப்பாற்றும்படி வேண்டினர்.
அசுரனால் கவரப்பெற்ற பூமியை வெளிக்கொணர வராக (பன்றி) உருவெடுத்து பாதாளம் புகுந்து அவ்வசுரனுடன் போர் புரிந்தார். ஒரு கொம்பினால் அவனை அழித்துச் சுற்றத்தாரையும் அழித்தார். மற்றொரு கொம்பினால் பூமியைத் தாங்கிக்கொண்டு மேலே வந்து பூமியை முன்போல் நிலைபெறச் செய்தார். பூமியைத் தோண்டி வெளிக்கொணர்ந்து நிலை பெறச்செய்ததைப் புலப்படுத்த பூமிதேவி தமது இடது மடியிலேயே வீற்றிருக்கும் நிலையில் மாசி மாதம் பௌர்ணமியுடன் கூடிய மக நட்சத்திரம் கூடிய மகாமகத்தன்று புண்ணிய தீர்த்தமான வராக குளக்கரையின் மேலே எழுந்தருளினார்.
இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோயில்களில் மாசி மாதம் வரும் மக திருவிழாவின் போது, சக்கரபாணி சுவாமி, ராஜகோபாலசுவாமி, ஆதிவராக பெருமாள் ஆகிய மூன்று கோயில்களிலும் கொடியேற்றம் நடைபெற்றும். அதன் படி மூன்று கோயில்களிலும் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக சக்கரபாணி சுவாமி விஜயவல்லி எனவும் சுதர்சனவல்லி தாயாருக்கும், ராஜகோபாலசுவாமி ருக்மணி, சத்யபாமா, அலமேலுமங்கை, செங்கமலவள்ளி தாயாரோடும், ஆதிவராக பெருமாள் அம்புஜவல்லி தாயாருடன் கொடிமரத்தின் அருகில் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். முக்கிய விழாவான வரும் 12ஆம் தேதி ஒலைச்சப்பர வீதியூலாவும், 17ஆம் தேதி திருத்தேரோட்டமும், 19ஆம் தேதி புஷ்பபல்லத்தில் வீதியூலாவும் நடைபெறுகின்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அந்தந்த கோயில் அதிகாரிகள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.