தொடங்கியது கரூர் ஸ்ரீ மாரியம்மன் திருவிழா.. வரம் தேடி புறப்படும் பக்தர் படை..
கரு உருவான கருவூரில் வெளி மாவட்டங்களில் இருந்தும் வேண்டுதல் நிறைவேற்ற, கரூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் வருகை.
கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கரூரில் பிரசித்தி பெற்ற தலமாக மாரியம்மன் கோவில் விளங்குகிறது. அம்மனின் சக்தி மீது பக்தர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு எல்லையே இல்லாமல் உள்ளது. அந்த வகையில் வேண்டும் வரம் தரும் அம்மனாகவே கரூர் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் திருவிழா தொடங்கி வைகாசி மாதத்தில் முடிவடையும். இதையொட்டி கோவில் முன்பு கம்பம் நடப்பட்டு அதற்கு புனிதநீர் ஊற்றி வழிபாடு செய்வதும் விழாவின் இறுதியில் அந்த கம்பத்தை பக்தர்கள் வெள்ளத்தில் ஊர்வலமாக எடுத்துச்சென்று பசுபதிபாளையம் அமராவதி ஆற்றில் விடும் நிகழ்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின்போது மாவட்டம் முழுவதும் இருந்தும், பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருவது உண்டு .
கம்பம் இருக்கும் இடத்தை கனவில் வந்து அம்மன் அசரிரீயாக அறிவுறுத்திய பிறகு அங்கு சென்று மூன்று கிளையுடைய வேப்பமரத்திலிருந்து கம்பத்தை எடுத்து வருவது இந்த கோவிலின் தொன்று தொட்டு நடக்கும் ஐதீகமாக கருதப்படுகிறது. அதன் அடிப்படையில் நேற்று காலை கோவிலுக்கு கம்பம் கொண்டு வந்து தரும் நிகழ்ச்சி கரூர் அருகே உள்ள பாலமாபுரத்தில் இருந்து தொடங்கியது.. பரம்பரை பரம்பரையாக கம்பம் எடுத்து வரும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் 3 கிளைகள் உடைய வேப்பமரத்தை எடுத்து பாலமாபுரத்தில் உள்ள திடலில் வைத்து அந்த கம்பத்திற்கு புனிதநீர் ஊற்றி பூச்சூடி, கோவிலை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது கம்பத்திற்கு வரவேற்பு கொடுக்கும் விதமாக மேளதாளங்கள் முழங்கப்பட்டன.
மேலும் பக்தர்கள் பலர் வழி நெடுகிலும் நின்று பூக்களைத் தூவி கம்பத்திற்கு வரவேற்பு அளித்தனர். பக்தர்களும் புனிதநீர் குடங்களுடன் கோவிலை நோக்கி சென்றனர். பசுபதிபாளையம் 5 ரோடு உள்ளிட்ட பகுதியில் பக்தர்கள் திரண்டு நின்று கம்பத்தை வணங்கினர். பின்னர் மாரியம்மன் கோவிலை அடைந்ததும் கம்பத்திற்கு சிறப்பு செய்யப்பட்டது. அப்போது பக்தர்கள் அருள்வந்து சாமியாடியதை காண முடிந்தது. பின்னர் கம்பம் கோவிலினுள் வைக்கப்பட்டு , மாலையில் ஆற்றுக்கு கொண்டு சென்று பூஜை செய்து நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இதற்கிடையே அம்மன் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. புனிதநீரை பக்தர்கள் கம்பத்தின் மீது ஊற்றி வழிபட்டனர். பின்னர் கம்பு, கேழ்வரகு, கூழ், நீர், மோர் ஆகியவை வழிநெடுகிலும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
அதன் பின்னர் மாலையில் கம்பமானது பசுபதிபாளையம் அமராவதி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு அலங்கரிக்கப்பட்டது. அப்போது வேப்பிலைகள், பூக்கள் உள்ளிட்டவற்றை கம்பத்திற்கு கட்டி பூஜை செய்து தீபாராதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து மாலை சுமார் 6.30 மணியளவில் ஆற்றிலிருந்து கோவிலுக்கு கம்பம் புறப்பட்டது. இதனை காண பொதுமக்கள் பலர் ஆற்றுப்பாலத்தின் மேல் பகுதியில் திரண்டு இருந்தனர். மேலும் அந்த பகுதி முழுவதும் மக்கள் வெள்ளம் அலை கடலென திரண்டிருந்த படி இருந்தது. மேளதாளங்கள் முழங்க கம்பம் பக்தர்கள் கூட்டத்தில் ஆடி அசைந்து வந்தது பக்தர்கள் மல்லிகைப்பூ உள்ளிட்டவற்றையும் தாம்பூலத் தட்டில் வாழைப்பழம் தேங்காய் ஆகியவற்றை எடுத்து வந்து வழிபாடு செய்தனர். இந்த அம்மனின் கண்ணெதிரே கம்பம் நடப்பட்டு திருவிழா தொடங்கியது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து சென்றனர். கம்பம் நடும் நிகழ்ச்சியை ஒட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.