மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
கலர்ஃபுல்லாக மாறிய காஞ்சி காமாட்சி அம்மன் கோவில்..! ஒரு டன் மலர்களால் அலங்காரம், வசந்த உற்சவம் கோலாகலம்..!
பச்சை பட்டு உடுத்தி,மலர்கள், பழங்களால், அலங்கரித்து வைக்கப்பட்ட வசந்த மண்டபத்தில் காமாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
உலக பிரசித்தி பெற்ற சக்தி ஸ்தலமாக விளங்கும் காஞ்சி காமாட்சியம்மன் ஆலயத்தில் கோடை வசந்த விழா உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கோடைக்காலத்தில் அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் நடைபெற்ற கோடை வசந்த விழா உற்சவத்தையொட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, பச்சை பட்டு உடுத்தி, செண்பகப் பூ, மனோரஞ்சித பூ, மல்லிகை பூ ,மலர் மாலைகள் அணிவித்து, நான்கு ராஜ வீதிகளில் உலா வந்தார்.
பின்னர் வண்ண வண்ண மலர்களாலும் ,மா, பலா,வாழை, அண்ணாச்சி, ஆப்பிள் உள்ளிட்ட பல்வேறு பழ வகைகளாலும், இளநீர், பனை நுங்கு குலைகளாளும், வாழைமரம், செங்கரும்பு கட்டுகளாலும் வண்ண வண்ண மின் விளக்குகள் எரிய அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வசந்த மண்டபத்தில் லக்ஷ்மி,சரஸ்வதி, தேவியர்களுடன் காஞ்சி காமாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய காமாட்சி அம்மனுக்கு,வேத பாராயண கோஷ்டியினர் வேதம் பாடிட, மோளதாளங்கள் இசைக்க, வானவேடிக்கை நடைபெற, கோவில் அர்ச்சகர்கள் ஆயிரம் கிலோ மலர்களால் புஷ்ப அர்ச்சனை செய்து சிறப்பு தீபாராதனை நடத்தினார்கள். கோடை வசந்த விழா உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காமாட்சி அம்மனை தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வரலாறு
காமகோடி பீடம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் முக்கிய இடம் வகிக்கிறது. ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் பூரண பிம்ப ஸ்வரூபிணியாகத் திகழ்வது, அருள்மிகு அன்னை காஞ்சி காமாட்சியின் மூல விக்கிரகம் ஒன்றுதான். அன்னை காமாட்சி கலைமகளையும் (சரஸ்வதி), திருமகளையும் (லட்சுமி) தன் இரு கண்களாகக் கொண்டவள்.
காம என்றால் அன்பு, கருணை. அட்ச என்றால் கண். எனவே, காமாட்சி என்றால் கருணையும், அன்பும் நிறைந்த கண்களையுடையவள் என்றும் பொருள் உண்டு. இத்தகு பெருமைகளைத் தன்னகத்தே கொண்ட காஞ்சி மாநகரத்தில் அன்னை காமாட்சி தேவி எழுந்தருளிய சம்பவம் ஒரு ஆற்றல்மிக்க வரலாறாக விரிகின்றது.
காஞ்சிபுரத் திருத்தலத்திலுள்ள எல்லா சிவாலயங்களுக்கும் காமாட்சி அம்பாளே மூலவர் அம்பாளாக விளங்குகிறாள். இதனால் காஞ்சிபுரத்தில் உள்ள சிவாலயங்களில், அம்பாளுக்குத் தனி சந்நிதிகள் இருப்பதில்லை. அம்பாளின் உற்சவ மூர்த்திகள் மட்டுமே எல்லா சிவாலயங்களிலும் காட்சியளிக்கின்றனர். மூல மூர்த்தியான காமகோடி காமாட்சியின் இடது பக்கத்தில் வட திசை நோக்கியவாறு அரூப லட்சுமியாகிய அஞ்சன காமாட்சி காட்சியளிக்கின்றாள். இது அன்னையின் சூட்சும வடிவமாகும். இந்த அன்னைக்கு வடிவம் கிடையாது.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion