76 ஆண்டுகளுக்கு பின், இருக்கன்துறை பெரியநாயகி-கைலாசநாதர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்.. ஆனந்தக் கண்ணீரில் மக்கள்..
கைலாசநாதரே 4 வேதங்களாகி இத்திருத்தலத்தில் அருள்புரிவதால் அனைத்து நன்மைகளையும் பெறுவர் என்பதற்கு இத்தலம் உகந்த இடமாக விளங்குவதாக கூறப்படுகிறது..
![76 ஆண்டுகளுக்கு பின், இருக்கன்துறை பெரியநாயகி-கைலாசநாதர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்.. ஆனந்தக் கண்ணீரில் மக்கள்.. Irukanthurai Periyanayagi Kailasanathar Temple Kumbabishekam Auspicious Renovation after 76 years people in tears of joy 76 ஆண்டுகளுக்கு பின், இருக்கன்துறை பெரியநாயகி-கைலாசநாதர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்.. ஆனந்தக் கண்ணீரில் மக்கள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/18/7fbbe78d3759db7728d2de20806991d3_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நெல்லை மாவட்டம் பழவூர் அருகே இருக்கன்துறையில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த பெரியநாயகி அம்பாள் உடனுறை கைலாசநாதர் கோவில். இக்கோவிலில் 76 வருடங்களுக்கு முன்பு கும்பாபிஷேகமானது நடைபெற்று உள்ளது. குறிப்பாக சிவபெருமான்- பார்வதி திருமணத்தை கைலையில் இருந்து வந்து சிறப்பித்த ரிக். யஜூர், சாம, அதர்வண வேதங்களை கவுரவப்படுத்த கைலாசநாதர் வந்து அமர்ந்து 4 சிவலிங்க ரூபமாக காட்சி தந்துள்ளார் என நம்பப்படுகிறது. முதல் வேதமாகிய ரிக்கின் பெயரைத் தாங்கி இத்தலத்தில் காட்சி தருவதால் அவருக்கு இருக்கன் என்ற பெயர் ஏற்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. மேலும் இத்தலம் 7ம் நூற்றாண்டுக்கு முன்பாகவே சிறந்த துறைமுகமாக விளங்கியதால் இருக்கன்துறை என பெயர் பெற்றது. இருக்கனை முதன்மையாக கொண்ட சதுர்வேத லிங்கங்களை கவுசிக முனிவர் பிரதிஷ்டை செய்துள்ளார் என நம்பப்படுகிறது. அதிலிருந்து இத்திருத்தலம் ராமாயண காலத்தை சேர்ந்தது என்பதை அறிய முடிகிறது. வரலாற்று நோக்கில் இத்தலம் சிறந்த துறைமுக நகரம் என்பதற்கு ஆதாரமாக சுவாமி சன்னதியின் இடதுபுற நிலைகாலில் 8 மற்றும் 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டு காணப்படுகிறது.
இத்தலத்தில் இறைவனை வணங்குபவர்களுக்கு திருமணம், கல்வி, வீரம், விவேகம், நோயற்ற வாழ்வு, செல்வம் மற்றும் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கைகளில் ஒன்றாக உள்ளது. அதே போல விஜயாபதியில் உள்ள விஸ்வாமித்திரரை வழிபட வரும் பக்தர்கள் விசுவாமித்திரரால் பிரதிஷ்டை செய்த இருக்கன்துறை சிவனை வழிபட்டு சென்றால் தான் விஸ்வாமித்திரரை வழிபட்டதற்கான முழு பலன்கள் கிடைக்கும் என்பதும் அம்மக்களின் நம்பிக்கையாக உள்ளது. அதே போல கைலாசநாதரே 4 வேதங்களாகி இத்திருத்தலத்தில் அருள் புரிவதால் இறைவனை வணங்கி உபநயனம், பூணூல் புதுப்பித்தல் மற்றும் 60, 80வது திருமணம் நடத்துபவர்கள் அனைத்து நன்மைகளையும் பெறுவர் என்பதற்கும் இத்தலம் உகந்த இடமாக விளங்குவதாக கூறப்படுகிறது.
ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமை வாய்ந்த இக்கோயிலில் 1946ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்ததுள்ளது. அதன் பின்னர் கடந்த 76 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பெரியநாயகி அம்பாள் உடனுறை கைலாசநாதர் மற்றும் சகல பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நேற்று நடத்தப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள், விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், சுவாமிக்கு காப்பு கட்டுதல், யாத்ரா தானம், மகா அபிஷேகம், விசேச அலங்காரம், அலங்கார தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற இருக்கிறது. 76 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இக்கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 76 ஆண்டுகள் கடந்து நடக்கும் விழாவால் மக்கள் உணர்ச்சி பிரவாகத்தில் ஆனந்தக் கண்ணீர் சிந்தினர்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சபாநாயகர் அப்பாவு, நெல்லை எம்பி ஞானதிரவியம் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பாஸ்கர், இருக்கன் துறை வக்கீல் ஐயப்பன், செட்டிகுளம் லிங்கம், ஜெகன், செந்தில், பஞ். தலைவர் இந்திரா முருகேசன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயா, பழவூர் இசக்கியப்பன், மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)