திருப்பதி தேவஸ்தான அறங்காவலராக திமுக எம்எல்ஏ நியமனம்!
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர்களாக தமிழ்நாட்டை சேர்ந்த ஐந்து பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆட்சிகாலத்தில் திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகளாக 16 பேர் உறுப்பினர்கள் கொண்ட அறங்காவலர் குழு ஒன்று புதிதாக அமைக்கப்பட்டது.
அதற்குப் பிறகு 2019 ஆம் ஆண்டு ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்றது. அப்போது சந்திரபாபு நாயுடு வால் நியமனம் செய்த அறங்காவலர் குழு உறுப்பினர்கள் தாமாக முன்வந்து ராஜினாமா செய்தனர். இதனையொட்டி பலர் ராஜினாமா செய்து வந்த நிலையில், சந்திரபாபு நாயுடுவால் அமைக்கப்பட்ட அறங்காவலர் குழுவை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கலைத்தார்.
இதனையடுத்து ஜெகன்மோகன் ரெட்டி சுப்பா ரெட்டியை அறங்காவலர் குழு தலைவராக நியமித்து உத்தரவு பிறப்பித்தார். மேலும் அறங்காவலர் குழுவில் புதிதாக 24 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். பின்னர் ஏழுமலையான் திருக்கோயிலை திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு நிர்வகித்து வந்தது. இந்த தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பல்வேறு கோயில்களில் பக்தர்களுக்கு வழங்கப்படும் சேவைகள் பொது மக்களுக்கு பயன் தரக்கூடிய பல திட்டங்கள் போன்றவற்றை இக்குழு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தற்போது புதிய அறங்காவலர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் ஏற்கனவே தலைவராக இருந்த சுப்பா ரெட்டி மீண்டும் இரண்டாவது முறை, தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆந்திர பிரதேச மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தந்தையின் இளைய சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் மதிப்புமிக்க, பல்வேறு சலுகைகளை அளிக்கக்கூடிய அறங்காவலர் குழு உறுப்பினர் பதவியானது நியமிக்கப்படாமல் இருந்தன.
இந்த அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பதவி ஆனது பல அரசியல்வாதிகளுக்கும், தொழில் அதிபர்களுக்கும், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கும் வழங்கப்படுவது வழக்கம். உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், தற்போது 25 பெயர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் சீனிவாசன், எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிற்சங்க பொது செயலாளர் கண்ணையா, உளுந்தூர்பேட்டை அதிமுக முன்னாள் எம்எல்ஏ குமரகுரு மற்றும் ஜி.ஆர்.கிருஷ்ணா நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சிறப்பு அழைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் அறங்காவலர்கள் முடிவில் தலையிட முடியாது. உலக அளவில் பிரசித்தி பெற்றுள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் உறுப்பினர்களாக தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களும் நியமிக்கப்படுவது வழக்கமான ஒன்று. இந்த பொறுப்பானது மிகவும் மரியாதைக்குரிய பொறுப்பாக கருதப்படுகிறது.