அரோகரா... அரோகரா... ஆடிக் கிருத்திகை ஆரோகரா... அழகன் முருகனின் ஆடி வழிபாடு!
கரூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆன்மிக தலங்கள் இன்றும், நாளையும் சிறப்பு பூஜைகள் மட்டுமே நடைபெறும். பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
ஆடிக்கிருத்திகை என்றாலே அழகன் முருகனுக்கு சிறப்பான கொண்டாட்டம். இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் பல்வேறு முருகன் தனி பெருமை வாய்ந்த ஆலயங்கள் உண்டு. அதிலும் குறிப்பாக கரூர் மாவட்டத்தில் வெண்ணமலை ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி, பாலமலை ஸ்ரீ பால சுப்பிரமணியர், புகழிமலை ஸ்ரீ பாலமுருகன், தோகைமலை ஸ்ரீ முருகன் உள்ளிட்ட பகுதிகளில் முருகன் ஆலயம் மிகவும் புகழ்பெற்றதாகும்.
தமிழகத்தில் கொரோனா தொற்று மூன்றாவது அலை பரவி தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு புகழ்பெற்ற ஆலயங்கள் இன்றும், நாளையும் திறக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்பேரில் கரூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆன்மிக தலங்கள் இன்றும், நாளையும் சிறப்பு பூஜைகள் மட்டுமே நடைபெறும். பக்தர்களுக்கு அனுமதி இல்லை. நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள சிறு சிறு கோவில்களில் இன்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு பல்வேறு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறுகிறது.
கரூர் நகர பகுதியில் உள்ள எல்சிபி நகர் பகுதியில் குடி கொண்டு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ பாலமுருகனுக்கு இன்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை முதலே சிறப்பு யாகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பாலமுருகனுக்கு எண்ணெய்க்காப்பு சாற்றி, பஞ்சாமிர்தம், பால், தயிர், நெய், இளநீர் ,அபிஷேகம் பொடி, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடை பெற்ற பிறகு யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தின் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, ஆலயத்தின் சிவாச்சாரியார் அழகன் பாலமுருகனுக்கு வெண்பட்டாடை உடுத்தி, பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரித்த பிறகு சந்தனகாப்பு அலங்காரம் செய்து, வெள்ளி கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் ஸ்வாமி கொலுவிருக்க செய்தனர். அதைத் தொடர்ந்து, சுவாமிக்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆரத்தி மகாதீபாராதனை சிறப்பாக நடைபெற்றது.
அதேபோல், ஆலயத்தில் மூலவரான கணபதிக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அதைத்தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரத்தில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பின்னர், பல்வேறு வண்ண மாலைகள் அணிவிக்கப்பட்டு ஸ்வாமிக்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டு ,நெய்வேதியம் சமர்ப்பிக்கப்பட்டு, கற்பூர தீபாராதனையும் நடத்தப்பட்டது. மற்றும் ஆலயத்தில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களான துர்க்கையம்மன், தட்சிணாமூர்த்தி, பெருமாள், ஆஞ்சநேயர், நவக்கிரக சுவாமிகளுக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று, அதைத்தொடர்ந்து, சுவாமிகளுக்கு மாலை அணிவித்து பட்டாடை உடுத்தி கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது.
ஆலயத்தில் நடைபெற்ற ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் முகக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர். பின்னர் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகி ராகவன் சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்திருந்தார்.
எனினும், தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைப்படி ஆலயங்கள் திறக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தால் பின்வரும் தற்போது வரவிருக்கும் கொரோனா தொற்று மூன்றாவது அலையில் இருந்து மக்களை பாதுகாத்து கொள்ளலாம்.