உங்க ஜாதகத்தில் சிறை செல்லும் பலனா?பரிகாரம் என்ன? தெரிஞ்சிக்கோங்க!
'சிறைக்கு' செல்லும் ஜாதகம் எப்படி இருக்கும்? அது பற்றி ஜோதிடம் என்ன சொல்கிறது என்பதை இங்கே காணலாம்.
அன்பார்ந்த ABP நாடு வாசகர்களே பிறக்கும் அனைவருமே நல்ல செல்வ செழிப்போடு, அருமையான குடும்பத்தை அமைத்துக் கொண்டு, நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும்; ஊருக்கே தெரிந்த நபராய் வாழ வேண்டும். புகழோடு இருக்க வேண்டும் என்று தான் விரும்புவோம், இல்லையா? சிறைக்கு செல்ல வேண்டும், சிறை வாழ்க்கை அனுபவிக்க வேண்டும், கொடுமையான தண்டனைகளை அனுபவிக்க மனது ஒருபோதும் ஒத்துக்கொள்ளாது.
ஒருவர் சிறைக்கு செல்ல வாய்ப்பு இருக்கா?
இப்படியான சூழ்நிலையில் ஒருவர் ஜாதகத்தில் அவர் சிறைப்படுவாரா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள முடியுமா என்றால், நிச்சயமாக முடியும். அதிலும் குறிப்பாக அவர் எத்தனை ஆண்டுகள் சிறையில் இருப்பார் அல்லது குறுகிய காலத்திற்குள் சிறை வாழ்க்கை அனுபவித்து விட்டு வெளியே வருவாரா என்பது போன்ற அனைத்தும் ஜோதிடத்தில் தெரிந்து கொள்ளலாம். அதற்கு முக்கியமாக தேவைப்படுவது துல்லியமான பிறப்பின் நேரம்... இரண்டு மூன்று நிமிடங்களில் பெரிய தசா புத்தியின் மாற்றமே ஏற்பட்டு விடும். அப்படியானால் நான்கு ஐந்து வருடங்கள் தள்ளி பலன்கள் சொல்ல வேண்டி கூட இருக்கலாம். சரி உங்களுடைய சரியான ஜாதகத்தை கொடுத்து விட்டீர்கள் என்றால் எப்படி பார்ப்பது? லக்கினத்திற்கு ஆறாமிடம் ”பந்தன ஸ்தானம்”... பந்தனம் என்றால் பிடித்து வைப்பது..சிறை பிடிப்பது, சிறையில் இருப்பது, ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் மாட்டிக் கொள்வது போன்ற விஷயங்களை குறிக்கும். ஜாதகத்தில் ஒன்றாம் அதிபதி என்று சொல்லக்கூடிய லக்கனாதிபதியும், ஆறாம் அதிபதியும் கூடி எட்டு மற்றும் பனிரெண்டாம் இடங்களில் இருந்தால், அவர் சிறைப்படுவது அல்லது சிறைக்கு ஒப்பான சம்பவங்கள் நடைபெறுவது என் மனம் போன்றவை அமையும்.
ஒரு ஜாதகத்தில் பன்னிரெண்டாம் பாவம் என்பது, அந்த ஜாதகர் எங்கே தங்குகிறார் என்பதை காட்டும். உங்களுடைய ஜாதகத்தில் 12 ஆம் அதிபதி மிக வலுவாக இருந்தால், அவர் தங்கும் இடம் மாடமாளிகை கூட கோபுரமாக இருக்கும். ஆனால் அதுவே ஒரு ஜாதகனுடைய லக்னத்திற்கு பன்னிரெண்டாம் இடம் பிடிக்காத ஒரு வீட்டில் அமர்ந்து விட்டால், அவருக்கு பிடிக்காத ஒரு இடத்தில் சிறைப்பட வேண்டியது இருக்கும்.
ஏற்கனவே நாம் ஆறாம் பாவத்தை பற்றி பார்த்தோம் ஆறாம் பாவம் என்பது பந்தன ஸ்தானம். அந்த இடத்தில் பிடிபட்டவர் அனைவருமே சிறைக்குத்தான் செல்லுவார். சிறை என்பது மறைவான வாழ்க்கை யாருக்கும் தெரியாது அங்கு என்ன நடக்கிறது என்ன செய்கிறார்கள் என்பது யாருக்கும் புரியாது. இப்படியான சூழ்நிலையில் உங்களுக்கு ஒரு குழப்பம் இருக்கலாம். ஆறாம் இடம் என்பது சிறைக்கு செல்வது என்று கூறுகிறோம். எட்டாம் இடம் என்பது மறைவு ஸ்தானம் என்று சொல்லுகிறோம். 12ஆம் இடம் என்பது தங்கி இருப்பது என்று கூறுகிறோம்.
இதை மூன்றையும் ஒன்றாக வைத்துப் பார்த்தால் நிச்சயமாக நீங்கள் பிறந்த ஊரை விட்டு, வேறு ஒரு ஊருக்கோ அல்லது வேறு ஒரு நாட்டுக்கோ செல்வதை தான் காட்டும் ஆறாம் அதிபதி வலுத்திருந்தால் ஆறாம் இடம் வலுத்து இருந்தால் பிறந்த இடத்தை விட்டு வேறு இடத்தில் சென்று வசிப்பார். அவர் காணாமல் போவார். தலைமறைவு ஆவார்.
அப்படி அவர் மற்றவர்களுக்கு தெரியாமல் போகும் இடம் எட்டாமிடம் அவர் தங்குமிடம் 12-ஆம் இடம் ஆறாம் இடம் எட்டாம் இடம் 12-ஆம் இடம் மூவரும் சேர்ந்து ஒரு மனிதனின் வாழ்க்கையில் அவர் எங்கே இருக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றன.
சிறைக்கு செல்வதை நம்மால் தடுக்க முடியுமா?
விதி நிச்சயமாக வலிமை உடையது. எவ்வளவு பரிகாரம் செய்தாலும் அதை மாற்றவோ, வேறுவிதமாக நடப்பதற்கு நம்மை தயார் செய்யவோ முடியவே முடியாது. என்ன தசாபுத்தி நடக்கிறதோ, அதற்கு ஏற்றார் போல் தான் அனைத்துமே நம் வாழ்க்கையில் நடைபெறும்.
உதாரணத்துக்கு... ஒருவர் மகர லக்னத்தில் பிறந்திருக்கிறார் அவருக்கு ஏழாம் இடத்தில் குரு உச்சமாக இருக்கிறது. லக்கனத்தில் செவ்வாய் உச்சமாக இருக்கிறது. இப்படியான சூழ்நிலையில் அவர் 12 ஆம் அதிபதி ஏழாம் வீட்டில் உச்சம் பெறுவது, அவர் அயல்நாட்டில் சென்று வசித்து இருக்கிறார். மனைவியுடன் வாழும் போது ஒரு சிறிய கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவியினால் அவர் சிறைக்கு செல்கிறார் அதாவது 12 ஆம் அதிபதி ஏழாம் பாவத்தில் உச்சம் பெறுகிறது ஏழாம் பாவத்தின் மூலமாக வெளி உலகத்திற்கு தெரிய வருகிறது.
அப்படி என்றால் இவருக்கு பிடிக்காத ஒரு சம்பவம் நடைபெறுவதற்கான காரணம், மகர லக்னத்தில் செவ்வாய் உச்சம்1 செவ்வாய் என்பது கல் என்று வைத்துக் கொண்டால் குரு என்பது காற்று கல் நகராது காற்று நகர்ந்து கொண்டே இருக்கும் பிடிக்காதவருக்கு பிடிக்காத சம்பவங்கள் உச்சம் பெறும்போது அவை அவருக்கு சிறை அனுபவத்தை கொடுக்கின்றன ஆனால் அவர் நான்கு வருடத்திலேயே நிரபராதி என்று நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டு அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார் என்பது தனிக்கதை இருந்தாலும் இந்த 12 ஆம் வீடு என்பது அந்த மனிதர் சிறைக்கு செல்வதையும் பின் விடுதலையாவதையும் காட்டுகிறது அல்லவா.
இப்படியாக ஜாதகங்களில் சிறை அனுபவம் இருக்கிறது என்றால் அதை அவர் அனுபவித்து தான் ஆக வேண்டுமே தவிர பரிகார மூலமாக குறைப்பது என்பது முடியாத காரியம். ஆனால் ஒரு நல்ல ஜோதிடர் நிச்சயமாக உங்களுக்கு வழிகாட்டினால் தவறு நடப்பவற்றிலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது.உங்கள் வாழ்க்கையில் சிறை என்ற ஒன்று இல்லாமலேயே இருக்கட்டும் இறைவன் உங்களுக்கு துணை இருக்கட்டும்!