2 ஆண்டுக்கு பின் கோலாகலமாக தொடங்கிய நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம் - விண்ணை முட்டிய பக்தர்களின் கோஷம்..!
தமிழகத்தின் 3வது பெரிய தேர் என்ற பெருமையும், முழுவதும் பக்தர்களால் கையால் இழுக்கப்படும் சிறப்புகளையும் கொண்டது நெல்லையப்பர் கோவில் தேர்.
தென் மாவட்டங்களில் மிகவும் சிறப்புமிக்க நெல்லையப்பர் - காந்திமதியம்பாள் கோயில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த கோயிலாகும். நெல்லையப்பர் கோயில் பல்வேறு காலகட்டத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இங்கு சுவாமி, அம்பாளுக்கு என தனித்தனி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில் சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் என 5 தேர்கள் உள்ளன. சுவாமித்தேர் தமிழகத்தின் 3 வது பெரிய தேராகும்.
தேரின் எடை 450 டன், அகலம் 28 அடி, நீளம் 28 அடி, உயரம் அலங்கார தட்டுகளை சேர்த்து சுமார் 70 அடியாக அமைந்துள்ளது. சுவாமி தேரோட்டம் 1504 லும், 13ம் நூற்றாண்டில் சுப்பிரமணியர் தேரோட்டம் நடந்ததாகவும் கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. சுவாமி தேருக்கு இரும்பிலான அச்சானி 1800ம் ஆண்டு லண்டனிலிருந்த கொண்டுவரப்பட்டு அமைக்கப்பட்டது. இதனை தற்போதும் தேரின் அடிப்பகுதியில் காணலாம். சுவாமி தேரை சுற்றிலும் சிவபுராணம், விஷ்ணுபுராணங்களை விளக்கும் வகையில் சிலைகள் அமையப்பெற்றுள்ளன. இப்படி பல்வேறு சிறப்புகள் அமையப்பெற்ற சுவாமி நெல்லையப்பா் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றம் இந்தாண்டு கடந்த 3 ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் ரதவீதி உலா நடைபெற்றது.
திருவிழாவின் சிகர நிகழ்வான 516 வது ஆனித்தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலையில் காலையில் சுவாமி, அம்பாள் திருத்தேர் எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது. தொடா்ந்து விநாயகர், சுப்பிரமணியர் தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்பட்டன. தொடா்ந்து காலை 9.00 மணிக்கு மாவட்ட ஆட்சியா் மற்றும் முக்கிய பிரமுகா்கள் சுவாமி தோ் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. பக்தா்களின் ஹரஹரமகாதேவா, ஓம் நமச்சிவாய என விண்ணை முட்டும் பக்தர்களின் கோஷத்துடன் தோ் 4 ரதவீதிகளில் வலம் வந்தது. அதனை தொடர்ந்து அம்பாள் தேரும் நிறைவாக சண்டிகேஸ்வரா் தேரும் பக்தா்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. திருவாரூர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்கள் புல்டோசர் மூலமே தள்ளப்பட்டு இழுக்கப்படுகின்றன. ஆனால் நெல்லையப்பர் கோயில் தேர் தொடர்ந்து 516 வது ஆண்டாக பக்தர்கள் மூலம் மட்டுமே இழுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தினால் தேரோட்டம் நடைபெறவில்லை. சமூக ஒற்றுமையை வலியுறுத்தவே ஆண்டு தோறும் கோயில்களில் தேரோட்டம் நடத்தப்படுகிறது. விழா ஏற்பாடுகளை இணை ஆணையா், கோயி்ல் செயல் அலுவலா் மற்றும் நிா்வாக அதிகாாிகள் ஏற்பாடு செய்திருந்தனா்.
தேரோட்டத்திற்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக டவுண் 4 ரத வீதிகளிலும் 40க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் துப்பாக்கி ஏந்திய போலிசார் , சீருடை அணியாத காவலர்கள், ஊர்காவல்படையினர், என 1500 போலிசார் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வசதி என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தேரோட்டத்தை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருகை தரும் நிலையில் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்தும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்