Lalitha Kumari : காளிகாம்பாள், மகாலட்சுமி, மூகாம்பிகை.. லலிதா குமாரி சொல்லும் மூன்று ஆன்மீக சுவாரஸ்யம்..
புதுப்புது அர்த்தங்கள், புலன் விசாரணை, சிகரம் என பல படங்களில் நடித்துள்ளார்.
இயக்குநர் பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய நடிகர்களில் என்றுமே தனித்து நிற்பவர்களில் லலிதா குமாரியும் ஒருவர். அவரது மனதில் உறுதி வேண்டும் படத்தில் அப்பாவிப் பெண் கதாப்பாத்திரத்தில் வரும் லலிதா குமாரியை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அதன் பிறகு புதுப்புது அர்த்தங்கள், புலன் விசாரணை, சிகரம் என பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் பிரகாஷ் ராஜுடன் 1994ல் திருமணம் செய்துகொண்டவர் 2009ல் அந்த உறவை முறித்துக் கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
லலிதா குமாரிக்கு நடிப்பை அடுத்து மிகவும் நெருக்கமானதாக ஆன்மீகத்தைக் குறிப்பிடுகிறார். தன் வீட்டு பூஜை அறை பற்றிக் குறிப்பிடவே அவருக்கு அவ்வளவு தகவல்கள் இருக்கின்றன. ஒருவாரம் கோவில் செல்லவில்லை என்றாலும் அந்த வாரம் முழுக்க ஏதோ போல இருக்கும் எனக் குறிப்பிடும் அவர் மேலதிகத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். ‘காலையில் எழுந்ததும் மகாலட்சுமி, காளிகாம்பாள் , அரைக்காசு அம்மனுக்கு பூஜை செய்வேன். ஐந்து விளக்குகள் வைத்திருக்கிறேன். அதை பிள்ளையார், சிவன், மகாலட்சுமி உட்பட ஐந்து பேருக்கு ஏற்றி வணங்குவேன். எனக்கு ஆன்மீகம் என் வாழ்க்கையில் மிக முக்கியமானது.
ஆன்மீகம் என்றால் கண்மூடித்தனமான நம்பிக்கை இல்லை. ஆனால் அது இல்லாமல் என் வாழ்க்கை இல்லை.என் காளிகாம்பாள் என்னைக் காப்பவர், மூகாம்பிகை எனக்கு வழித்துணை, மகாலட்சுமி எனக்கு எல்லாம் அளிப்பவர். இவர்கள் மூன்று பேருமே எனக்கு மிக முக்கியமானவர்கள். இவர்கள் இல்லாமல் நானில்லை.குறிப்பாக இந்த அம்பாள் எனது பூஜை அறையில் இருப்பவர் மிகவும் ஸ்பெஷல். நான் தஞ்சாவூர் ஓவியம் வரையக் கற்றுக் கொண்டேன். நானே வரைந்த மகாலட்சுமியை என் வீட்டு பூஜை அறையில் மாட்டி வைத்துள்ளேன். இதுதான் என்னுடைய பூஜை அறை’ என்கிறார்.
அண்மையில் கேதார்நாத் சுற்றுப்பயணம் குறித்த வீடியோக்களை தனது யூட்யூபில் பதிவிட்டிருந்தார் லலிதா.