விதிகளை மீறி விதைகளை விற்பனை செய்தால் உரிமம் ரத்து - விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரிக்கை
சரியான சேமிப்பு முறைகளை கடைபிடிக்காத நிறுவனங்கள் விதை விற்பனை செய்ய தடை விதிப்பதோடு உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
விதைகளை விற்பனை செய்வதில் விதிகளை மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று விற்பனையாளர்களுக்கு விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக விதை ஆய்வு துணை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வடகிழக்கு பருவமழைக்காலத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் பெறப்பட்டுள்ள கூடுதல் மழைப்பொழிவு காரணமாக பெரும்பாலான விவசாயிகள் ரபி பருவத்தில் நெல் சாகுபடி செய்ய உள்ளனர். கூடுதல் விதை தேவையை பூர்த்தி செய்ய வெளி மாநிலங்களில் இருந்து சான்றளிக்கப்பட்ட மற்றும் உண்மை நிலை விதைகள் விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளது.
இவற்றில் ஒரு சில நெல் ரகங்கள் ஒளியுணர்திறன் கொண்ட ரகங்களாக உள்ளன. இத்தகைய ரகங்கள் சூரிய ஒளி பெறப்படும் கால அளவைப்பொறுத்து பூக்கும் தன்மையுடையவையாக உள்ளன. இவற்றை குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே சாகுபடி செய்ய வேண்டும். சாகுபடி பருவம் தவறும்பட்சத்தில் நெற்பயிர் நடவு செய்த உடனே கதிர் வருதல் மற்றும் நீண்டகாலமாக கதிர்வராமல் இருத்தல் ஆகிய பிரச்சினைகள் ஏற்படும்.
இதனை தவிர்க்க கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ரகங்களையோ அல்லது சென்னை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட ரகங்களையோ கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட விதைகளை மரச்சட்டகங்களின் மீது வைத்து ஈரப்பதம் பாதிக்காமல் உரம் மற்றும் பூச்சிமருந்துகளுடன் இல்லாமல் தனியாக இருப்பு வைத்து பராமரிக்க வேண்டும். உரம், பூச்சிமருந்துகளுடன் சேர்த்து இருப்பு வைத்தால் விதைகளின் முளைப்புத்திறன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
சரியான சேமிப்பு முறைகளை கடைபிடிக்காத நிறுவனங்கள் விதை விற்பனை செய்ய தடை விதிப்பதோடு உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் தேவையான விவரங்கள் அடங்கிய கொள்முதல் ரசீது, இருப்புப்பதிவேடு, பதிவுச்சான்று மற்றும் உண்மை நிலை விதைகளுக்கான விதை பரிசோதனை முடிவு நகல் ஆகிய ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளை முறைப்படி பராமரிக்க வேண்டும்.
விதை வாங்கும் விவசாயிகளுக்கு விற்பனைப்பட்டியல், ரசீது உரிய படிவத்தில் பயிர், ரகம், நிலை, குவியல் எண், காலாவதிநாள், உற்பத்தியாளர் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் குறிப்பிட்டு கையொப்பம் பெற்று வழங்க வேண்டும். மேற்கூறப்பட்ட சட்டவிதிகளை மீறுவோர் மீது உரிய சட்டப்பிரிவுகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குனர் சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.