கள் இறக்க அனுமதி கிடைத்தால் சாராயத்தை ஒழித்து விடலாம் - ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை
கள் இறக்க அனுமதி கிடைத்தால் கள்ளச்சாராயம் மட்டுமல்ல நல்ல சாராயத்தையும் ஒழித்து விடலாம்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வேளாண்மை இணை இயக்குனர் (பொ)சாந்தி ராணி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மனோரஞ்சிதம், பொதுப்பணித்துறை கோரம்பள்ளம் மற்றும் கீழ் தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் வசந்தி, மேல்தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் மதன சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் துவங்குவதற்கு முன்பாக கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் அதன் தலைவர் பாக்கியாத்து சாலிகா, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் மண்வளத்தை பாதுகாப்பது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினார். மேலும் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அழைப்பாளராக கலந்து கொண்ட சென்னை வேளாண் பொறியியல் துறை பொறியாளர் பிரிட்டோராஜ் பேசும்போது, மண்வளத்தை பாதுகாக்க வரப்பை உயரமாக அமைக்க வேண்டும். களைக்கொல்லிகள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும், முடிந்த அளவுக்கு இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதற்கான எளிமைப்படுத்தப்பட்டுள்ள வழிமுறைகள் குறித்து விளக்கி பேசினார்.
பயிர் காப்பீட்டுத் தொகை
விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பேசிய பெரும்பாலான விவசாயிகள், 2023- 2024 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகை அனைத்து விவசாயிகளுக்கும் அனைத்து பயிர்களுக்கும் முழுமையாக விரைவாக வழங்க வேண்டும் பல்வேறு விவசாயிகள் இந்த பிரச்சினையை எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த வேளாண்மை துறை மற்றும் காப்பீட்டு நிறுவன அதிகாரிகள், 2023-2024 ஆம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் அறிவிக்க செய்யப்பட்ட அனைத்து பயிர்களிலும் பயிறு அறுவடை பரிசோதனைகள் முடிக்கப்பட்டு மகசூல் விவரங்கள் தேசிய பயிர் காப்பீட்டு வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து பயிர்களுக்கும் இழப்பீட்டுத் தொகை இப்கோ- டோக்கியோ நிறுவனத்தால் விரைவில் விடுவிக்கப்படும். அடுத்த மாத விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு முன்பாக காப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
கள் இறக்க அனுமதி-விவசாயிகள் கோரிக்கை
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் பனை மரத்திலிருந்து கிடைக்கும் இயற்கை உணவை இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என கள் பெயரை குறிப்பிடாமல் கோரிக்கை விடுத்தார். இதற்கு ஆட்சியில் உள்ளிட்ட அதிகாரிகள் என்ன உணவு என விளக்கம் கேட்டபோது, விவசாயிகள் கள்ளிறக்க அனுமதிக்க வேண்டும் என மொத்தமாக குரல் எழுப்பினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கிறிஸ்டண்டைன் ராஜசேகர் பேசும் போது, கள் இறக்க அனுமதி கிடைத்தால் கள்ளச்சாராயம் மட்டுமல்ல நல்ல சாராயத்தையும் ஒழித்து விடலாம் என்றார். அப்போது குறிப்பிட்டு பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், அரசின் கொள்கை முடிவு தொடர்பான விவகாரங்களை இங்கே பேச வேண்டாம், மனுவாக எழுதிக் கொடுங்கள் நாங்கள் அரசு கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் என்றார்.
தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணியை சேர்ந்த விவசாயிகள், தமிழ் விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி தலைமையில் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.அதில் பொட்டலூரணி பகுதியில் விவசாயிகளையும் விவசாயத்தையும் விவசாய சூழலையும் பாதுகாக்க இப்பகுதியில் மூன்று கழிவு மீன் ஆலைகளுக்கு கொடுக்கப்பட்ட உரிமை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.