நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு 22 ஆண்டுகளாக வராத இழப்பீடு - தூத்துக்குடி விவசாயிகளின் கண்ணீர் கதை
மழைக்காலத்தில் பெய்யக்கூடிய மழை நீர்தேக்கி வைக்க போதிய நீர்நிலைகள் இல்லாததால் மழைநீர் வீணாக கடலில் கலந்தது.
பாசன கண்மாய் அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இருபத்து இரண்டு ஆண்டுகளாகியும் இழப்பீடும் கிடைக்கவில்லை, பாசனத்திற்கு தண்ணீரும் வரவில்லை.
தூத்துக்குடி மாவட்டம் புதூர் வட்டாரம் கீழ்பகுதியில் காடல்குடி அருகே கே.சுப்பையாபுரம் உள்ளது. இக்கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இம்மக்களுக்கு விவசாயம் பிரதான தொழிலாகும். இங்கு மிளகாய், வெங்காயம், மக்கா, வெள்ளைச் சோளம், கம்பு, பருத்தி போன்றவைகள் சாகுபடி செய்யப்படுகிறது. இக்கிராமம் வானம் பார்த்த பூமியாகும். நீண்ட காலப் பயிரான முண்டு வத்தல் அதிகம் பயிரிடப்படுகிறது.
மழைக்காலத்தில் பெய்யக்கூடிய மழை நீர்தேக்கி வைக்க போதிய நீர்நிலைகள் இல்லாததால் மழைநீர் வீணாக கடலில் கலந்தது. இதனை கருத்தில் கொண்டு சுப்பையாபுரம், காடல்குடி, வாதலக்கரை கிராமங்களில் விவசாயிகளின் சுமார் 90 ஏக்கர் நிலங்களை நீர் வள ஆதாரத்துறை கையகப்படுத்தி 2002ம் ஆண்டு புதிய பாசன கண்மாயை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை உருவாக்கியது. புதிய பாசன கண்மாய் மூலம் மானாவாரி நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மிளகாய் செடிக்கு கோடையில் தண்ணீர் பாய்ச்சுவதால் கூடுதல் விளைச்சலை பெறலாம் என விவசாயிகள் மகிழ்சியடைந்தனர்.
புதிய பாசன கண்மாயில் இரண்டு மதகுகள் கட்டப்பட்டு உள்ளன. இதன் மூலம் சுமார் சுமார் 150 ஏக்கர் நிலம் நேரடி பாசனமாகவும், பலநூறு ஏக்கர் மறைமுகமாகவும் பயன்பெறுகின்றன. இந்நிலையில் மதகுககள் தாழ்வான பகுதியிலும், ஆயக்கட்டு நிலங்கள் மேட்டுப் பகுதியாகவும் அமைந்துவிட்டன. இதனால் கண்மாயில் தண்ணீர் முழு கொள்ளளவு எட்டினாலும் சட்டர் திறந்தவுடன் பாசன நிலங்களுக்கு தண்ணீர் பாய்வதில்லை. இதனால் தண்ணீர் தேக்கியும் கால்வாய் வழியாக தண்ணீர் பாய்ச்ச முடியாமல் மோட்டார் மூலம் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தினர். இதில் சுப்பையாபுரம் கிராமத்தை சேர்ந்த சிலர் தண்ணீரை வணிக நோக்கத்திற்கு பயன்படுத்துவதாக புகார் தெரிவித்து விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் போய் விட்டது.
இருப்பினும் அருகாமையிலுள்ள காடல்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்துவிவசாயம் செய்து வருகின்றனர். பழைய மதகுகளை அப்புறப்படுத்தி விட்டு தண்ணீர் சரளமாக நிலங்களுக்கு செல்லும் வகையில் புதிய மதகுகள் கட்ட வேண்டும். தவிர கடந்த டிசம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் பெய்த கனமழைக்கு உபரி நீர் வெளியேறும் மறுகால் தலை அருகே மண் கரையில் பெரிய உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் முழுவதுமாக துளி தண்ணீர் கூட இல்லாமல் வெளியேறி விட்டது. உடைப்பு ஏற்பட்டு சுமார் ஆறு மாதங்களாகியும் உடைப்பு அடைக்கவில்லை. மழைக்காலம் துவங்குவதற்குள் கரை உடைப்பு அடைக்க வேண்டும்.
இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தலைவர் வரதராஜனிடம் கேட்டபோது, தண்ணீர் வரலன்னு அழுவதா?. இல்லை, பாசன கண்மாய் அமைக்க விவசாயிகளிடம் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இருபத்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் உரிய இழப்பீட்டு தொகை வழங்கவில்லை என அழுவதான்னு தெரியல எனக்கூறும் இவர், இங்கு புதிய மதகுகள் கட்டி சட்டர் திறந்தவுடன் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் வகையில் உருவாக்கவும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சமயத்தில் நீர்பிடிப்பு பகுதியில் இருந்து மோட்டார் மூலம் பாய்ச்ச நீர் பாசன விதிகளை திருத்தியமைக்க வேண்டும்" என்கிறார்.