தொடர்ந்து நிலவும் அதிருப்தி... கடந்தாண்டை விட வெகுவாக குறைந்தது: என்ன தெரியுங்களா?
இழப்பீடு கிடைக்காததால், விழிப்புணர்வு பெற்ற விவசாயிகளும் காப்பீடு திட்டத்தில் சேருவதைத் தவிர்த்தனர். ரூ. 36 லட்சம் மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டதால், பெரும்பாலான விவசாயிகள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
தஞ்சாவூர்: தொடர்ந்து ஏற்பட்ட அதிருப்தியால் நடப்பாண்டில் பயிர் காப்பீடு பதிவு குறைந்து விட்டது. கடந்தாண்டை விட இந்தாண்டு பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் அதிகம் பேர் விரும்பவே இல்லை என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.
விழிப்புணர்வு விவசாயிகளிடையே குறைவாகவே இருந்து வருகிறது
நெற் பயிர் காப்பீடு குறித்து விழிப்புணர்வு விவசாயிகளிடையே குறைவாகவே இருந்து வருகிறது. பேரிடரால் பயிர்கள் பாதிக்கப்படும்போது இழப்பீடு கிடைக்காததால், விழிப்புணர்வு பெற்ற விவசாயிகளும் காப்பீடு திட்டத்தில் சேருவதைத் தவிர்த்தனர். இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் 2020 ஆம் ஆண்டில் பெய்த தொடர் மழை காரணமாக ஏராளமான பரப்பில் சம்பா, தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டன.
இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் பலத்த மழையால் பாதிக்கப்பட்ட 1.17 லட்சம் விவசாயிகளுக்கு 2021ம் ஆண்டில் ஏறத்தாழ ரூ. 467 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் அதிகபட்ச இழப்பீடு கிடைத்தது அதுவே முதல் முறை. இது விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. மேலும் தங்களின் பயிர் சாகுபடியில் ஏற்படும் நஷ்டத்தை சமாளிக்க உதவுகிறது என்று விழிப்புணர்வும் பெற்றனர்.
பிரிமிய தொகையாக ரூ. 17.94 கோடி செலுத்தப்பட்டது.
இப்படி பயிர் காப்பீடு கிடைத்ததால் ஏற்பட்ட நம்பிக்கை மற்றும் விழிப்புணர்வு காரணமாக தஞ்சை மாவட்டத்தில் 2021ம் ஆண்டு சம்பா, தாளடி பருவத்தின்போது 3.50 லட்சம் ஏக்கருக்கு 1.33 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்தனர். இதற்கு பிரிமிய தொகையாக ரூ. 17.94 கோடி செலுத்தப்பட்டது. பல விவசாயிகள் தங்களுக்கு தெரிந்தவர்கள், தங்களின் நண்பர்கள் போன்றவர்களுக்கும் பயிர்காப்பீடு குறித்து தெரிவித்து அவர்களையும் காப்பீடு செய்ய வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான விவசாயிகள் பெரும் ஏமாற்றமடைந்தனர்
இந்நிலையில்தான் அந்தாண்டு பெருமழையால் ஏராளமான ஏக்கரில் சம்பா, தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டன. ஆனால், 7 கிராமங்களுக்கு ரூ. 36 லட்சம் மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டதால், பெரும்பாலான விவசாயிகள் பெரும் ஏமாற்றமடைந்தனர். இதுதான் கொடுப்பது போல் கொடுத்து கெடுப்பதா என்று விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்தனர்.
இதேபோல, 2022 ஆம் ஆண்டு சம்பா, தாளடி பருவத்தின்போது 3.03 லட்சம் ஏக்கருக்கு 1.11 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்தனர்.
ஆனால், தொடர் மழையால் ஏராளமான பரப்பளவில் சம்பா, தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டாலும், 4 கிராமங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 365 விவசாயிகளுக்கு மட்டுமே ரூ. 1.13 கோடி இழப்பீடு கிடைத்தது. இதனால், 2023ம் ஆண்டு சம்பா, தாளடி பருவத்தின்போது பயிர் காப்பீடு பதிவு குறைந்து, 2.43 லட்சம் ஏக்கருக்கு மட்டுமே பயிர் காப்பீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு தொடர் மழை, காவிரியில் நீர் வரத்து இல்லாதது, ஜனவரி, பிப்ரவரியில் மழை பெய்யாதது போன்ற காரணங்களால் சம்பா, தாளடி ஏராளமான பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், ரூ. 43.11 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.
ஏராளமான விவசாயிகளுக்கு அதிருப்திதான் நிலவுகிறது
இது, முந்தைய இரு ஆண்டுகளை விட கூடுதலாக இழப்பீடு கிடைத்தாலும், பாதிக்கப்பட்ட ஏராளமான விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை என்ற அதிருப்திதான் நிலவுகிறது. இந்நிலையில், நடப்பாண்டு சம்பா, தாளடிக்கு ஏக்கருக்கு ரூ. 548 பிரிமிய தொகை ஆகும். இதை கடந்த 15ம் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மாவட்டத்தில் ஏறத்தாழ 2.85 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி விதைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், 1.77 லட்சம் ஏக்கருக்கு 58 ஆயிரத்து 255 விவசாயிகள் மட்டுமே பயிர் காப்பீடு செய்துள்ளனர். இதற்கு தொடர்ந்து பயிர்கள் பாதிக்கப்பட்டும் இழப்பீடு கிடைக்காததால் ஏற்பட்ட அதிருப்திதான் என்று விபரமறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
60 சதவீதத்துக்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது
பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத விவசாயிகளைச் சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 60 சதவீதத்துக்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது என வேளாண் துறையினர் தெரிவித்தனர். ஆனால், இழப்பீடு கிடைக்காததால் நிலவும் அதிருப்தி காரணமாக சில ஆண்டுகளாக பயிர் காப்பீடு பதிவு குறைந்து வருகிறது என்பதுதான் உண்மை.
இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாக பேரிடரால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளானபோதும், பெரும்பாலானோருக்கு இழப்பீடு கிடைக்கவில்லை. பயிர் பாதிப்பு கணக்கீடு செய்வதிலும், அறிவிப்பிலும் முரண்பாடு உள்ளது. இழப்பீடு கிடைக்காது என்ற அவநம்பிக்கை காரணமாக விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கு விரும்பவில்லை. பத்து ஏக்கர் வைத்துள்ள விவசாயிகள் ரூ. 5 ஆயிரத்து 480 பிரிமியம் செலுத்த வேண்டும். இதுவே 15, 20 ஏக்கர் வைத்துள்ள விவசாயிகளுக்கு பிரியமிய தொகை அதிகரிக்கிறது. இவ்வளவு பெரிய தொகையைச் செலுத்தினாலும் பாதிக்கப்படும்போது இழப்பீடு கிடைக்காதபோது, ஏற்படும் ஏமாற்றமும் பெரும் வேதனைக்கு உள்ளாக்குகிறது.
கடந்த சில ஆண்டுகளாக பயிர் காப்பீடு பதிவில் பின்னடைவு
இதனால், கடந்த சில ஆண்டுகளாக பயிர் காப்பீடு பதிவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பயிர் காப்பீடு நிறுவனங்கள்தான் லாபம் சம்பாதிக்கின்றன. பாதிக்கப்படும் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனர். அதனால் பயிர் காப்பீடு செய்தாலும் ஒன்று கிடைக்க போவதில்லை என்று காப்பீடு செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. கடந்த 3 ஆண்டுகளாகவே பாதிப்பை சந்தித்தாலும் பயிர் காப்பீட்டு தொகை கிடைக்காதது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.