திடீர் மாற்றம்... உப்பு தன்மையுடன் தண்ணீர்: சாகுபடி பயிர்கள் கருகியதால் விவசாயிகள் கண்ணீர்
மேட்டூர் அணையின் பாசன நீர் குறித்த காலத்தில் கிடைக்காத நிலையிலும், ஆழ்துளைக் கிணறு மற்றும் பம்செட் வசதி கொண்ட விவசாயிகள் நம்பிக்கையோடு குறுவை சாகுபடிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே தென்பெரம்பூர், பனவெளி, வெள்ளாம்பெரம்பூர் பகுதியில் திடீரென்று பம்ப்செட்டில் உப்புத் தன்மையுடன் கூடிய தண்ணீர் வந்ததால் குறுவை பயிர்கள் கருகின. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் தென்பெரம்பூர், பனவெளி மற்றும் வெள்ளாம்பெரம்பூர் உட்பட சுற்றுப்பகுதி கிராமங்களில் பம்செட் பாசனம் மூலம் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிடியில் நிலத்தடி நீர் திடீரென காரத் தன்மை கொண்ட உப்பு நீராக மாறியதால் பயிர்கள் கருகி சேதமடைந்து வருகின்றன. இதனால் முதலீடு செய்த தொகையை இழந்து விவசாயிகள் கடும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் விவசாய உற்பத்தியில் குறுவை சாகுபடி முக்கியப் பங்கு வகிக்கிறது. நடப்பு பருவத்தில், மேட்டூர் அணையின் பாசன நீர் குறித்த காலத்தில் கிடைக்காத நிலையிலும், ஆழ்துளைக் கிணறு மற்றும் பம்செட் வசதி கொண்ட விவசாயிகள் நம்பிக்கையோடு குறுவை சாகுபடிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தென்பரம்பூர், பனவெளி, வெள்ளாம்பெரம்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பம்ப்செட்டு மூலம் தண்ணீர் பாய்ச்சி நாற்று விட்டு குறுவை சாகுபடியை மேற்கொண்டுள்ளனர். உரம் மேலாண்மை, களை எடுத்தல் போன்ற பராமரிப்புப் பணிகளைச் செய்து பயிர்களை நல்ல முறையில் வளர்த்து வந்தனர்.
பயிர்கள் நன்கு வளர்ந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக நிலத்தடி நீரில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து பாய்ச்சப்படும் தண்ணீர் அதிகப்படியான கார உப்புத்தன்மை கொண்டதாக மாறியுள்ளது.
இந்த நீரைப் பாய்ச்சிய வயல்களில் உள்ள நெற்பயிர்கள் வேர் அழுகி, இலைகள் மஞ்சள் நிறமாக மாறி கருகத் தொடங்கியுள்ளன. உப்பு நீர் தேங்குவதால் நிலத்தின் மண் வளமும் பாதிக்கப்பட்டு, பயிர் வளர்ச்சி முற்றிலுமாக முடங்கியுள்ளது. விவசாயிகள் கடன் வாங்கி ஏக்கருக்கு ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை உழவுப் பணி, நாற்று நடுதல், உரம் மற்றும் கூலி ஆட்களுக்காகச் செலவிட்டுள்ளனர்.
"பயிர்கள் விளையும் நேரத்தில் இப்படி உவர்தன்மை கொண்ட உப்பு நீரால் கருகி நாசமாவது எங்களது வாழ்வாதாரத்தை முற்றிலும் சீர்குலைத்துள்ளது. போட்ட முதலீட்டைக் கூட எடுக்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. என்று பாதிக்கப்பட்ட பகுதி விவசாயிகள் கண்ணீருடன் தெரிவித்தனர்.
வேளாண்மைத் துறை மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகள் தென்பெரம்பூர், உட்பட கிராமங்களுக்கு நேரில் வந்து கள ஆய்வு செய்ய வேண்டும். நிலத்தடி நீர் திடீரென உப்பு நீராக மாறியதற்கான காரணத்தைக் கண்டறிந்து, மண்ணை சீரமைக்க உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். சாகுபடி பயிர்கள் இழப்பால் தவிக்கும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் ஏக்கருக்குத் தகுந்த நிவாரணத் தொகை வழங்க வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் சாகுபடியை மேற்கொண்ட விவசாயிகள் தற்போதைய இந்த நிலையால் பொருளாதாரத்தில் வெகுவாக பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை செலவு செய்து தற்போது பயிர்கள் கருகிவிட்ட நிலையால் பெரும் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். இதற்கு தகுந்த நிவாரணத்தை அரசு வழங்குமா என்பதுதான் தற்போது விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ள முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















