தூத்துக்குடி : கரை அரிப்பு இருக்கும் இடத்தை விட்டுட்டு, தடுப்பு சுவர் கட்டும் அதிகாரிகள்- புலம்பும் விவசாயிகள்
கரை மற்றும் சாலை அரிக்கப்பட்ட இடத்தில் இந்த தடுப்பு சுவரை கட்டாமல், அதனை தாண்டி வேறு இடத்தில் தடுப்பு சுவர் கட்டப்பட்டு வருவதால் நீர் கசிவு ஏற்படுவதாக கூறுகின்றனர் விவசாயிகள்.
தூத்துக்குடி அருகே வாய்க்காலில் நீர் கசிவை தடுக்க சுவர் கட்டியதில் குளறுபடி நடந்துள்ளதால், விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் தேங்கி பயிர்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பெய்த பெருமழை காரணமாக, கோரம்பள்ளம் குளத்தின் கரையிலும், உப்பாற்று ஓடை மற்றும் பாசன வாய்க்கால் கரைகளிலும் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது.
மேலும், பல சாலைகள் அரிக்கப்பட்டு, சுற்றுவட்டார கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. இந்த உடைப்புகள் காரணமாகவே தூத்துக்குடி மாநகரம் வெள்ளத்தில் மூழ்கி பல நாட்கள் தத்தளித்தது.
இதனை தொடர்ந்து மணல் போட்டு கரை உடைப்புகள் அடைக்கப்பட்டு, சாலைகளும் சரி செய்யப்பட்டன. அதன் பிறகு குளம் மற்றும் வாய்க்காலில் உள்ள தண்ணீர், கரை அடைப்புக்காக புதியதாக போடப்பட்ட மணல் வழியாக கசிந்து விவசாய நிலங்களுக்குள் பெருகி, பயிர்கள் பாதிக்கப்பட்டு வந்தன.
இதையடுத்து குளம் மற்றும் வாய்க்காலில் உள்ள தண்ணீர் மறுபக்கத்துக்கு ஊடுருவி செல்லாமல் இருப்பதற்காக, அப்பகுதிகளில் தடுப்பு சுவர் கட்ட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. அந்த வகையில், வெள்ளத்தால் அரித்து, துண்டிக்கப்பட்ட அத்திமரப்பட்டி - புதுக்கோட்டை சாலையில் உள்ள பிரதான வாய்க்காலில் தடுப்பு சுவர் கட்டப்பட்டு வருகிறது.
ஆனால், கரை மற்றும் சாலை அரிக்கப்பட்ட இடத்தில் இந்த தடுப்பு சுவரை கட்டாமல், அதனை தாண்டி வேறு இடத்தில் தடுப்பு சுவர் கட்டப்பட்டு வருவதால் நீர் கசிவு ஏற்படுவதாக கூறுகின்றனர் விவசாயிகள்.
இது குறித்து முத்தையாபுரம், முள்ளகாடு, அத்திமரப்பட்டி விவசாயிகள் சங்க தலைவர் ராஜேந்திரபூபதியிடம் கேட்டபோது, தற்போது கோரம்பள்ளம் குளத்தில் இருந்து அத்திமரப்பட்டி செல்லும் பிரதான வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், தடுப்பு சுவர் கட்டப்படாத பகுதியில், நீர் கசிவு ஏற்பட்டு, வாழை தோட்டத்துக்குள் தண்ணீர் பெருகி வருகிறது.தேங்கிய தண்ணீரை கடந்த ஒரு வார காலமாக ஆயில் இன்ஜின் வைத்து உறிஞ்சி எடுத்து வெளியேற்றியும் தொடர்ந்து தண்ணீர் ஊடுருவி கொண்டே இருக்கிறது. மேலும், தண்ணீர் கசிவு அதிகமாக இருப்பதால், வாய்க்காலில் தண்ணீர் அளவு குறைந்து தொலைவில் உள்ள விவசாய பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதில் தாமதம் ஏற்படுகிறது.
இதனால் இப்பகுதியில் விவசாயம் செய்யும் விவசாயிகள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளோம். கரை மற்றும் சாலை அரிக்கப்பட்ட இடத்தில் தடுப்பு சுவர் கட்டாமல், வேறு இடத்தில் கட்டுவற்கு காரணம், அதனை சரியாக அளவெடுக்காத அதிகாரிகளா அல்லது அளவீடுகளை மீறி பணி செய்யும் ஒப்பந்தக்காரர்களா என தெரியவில்லை.
விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் கசிவதை உடனடியாக தடுத்து நிறுத்தி பயிர்களை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். கரை மற்றும் சாலையில் அரிக்கப்பட்ட இடத்திலேயே தடுப்பு சுவர் கட்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்.