தமிழ்நாடு அரசு வழங்கும் 30 லட்சம் ரூபாய் மானியம் - அருமையான வாய்ப்பு! எதற்கு தெரியுமா..?
மயிலாடுதுறை மாவட்டத்தில் அரிசி தவிட்டில் இருந்து எண்ணெய் பிழிந்தெடுக்கம் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு அரசு வழங்கும் ரூ.30 லட்சம் மானியத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரிசி உற்பத்தியை ஊக்குவிப்பதுடன், அதன் உபபொருட்களை மதிப்புக்கூட்டிப் பயன்படுத்தும் விதமாக, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் இயங்கும் NMEO - எண்ணெய் வித்துக்கள் திட்டம் மூலம் அரிசி தவிட்டு எண்ணெய் (Rice Bran Oil) பிழிந்தெடுக்கும் ஆலை அமைப்பவர்களுக்குத் தமிழக அரசு ரூபாய் 30 இலட்சம் வரை மானியம் வழங்குகிறது. இத்திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் விவசாயிகளுக்கும், தொழில்முனைவோருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
திட்டத்தின் பின்னணி: உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியை பெருக்குதல்
இந்த மானியம் வழங்கும் திட்டம், மத்திய அரசின் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் – எண்ணெய் வித்துக்கள் (NMEO – National Mission on Edible Oil – Oil Seed) திட்டத்தின் ஒரு பகுதியாகும். சமையல் எண்ணெய்க்காகப் பிற நாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். தமிழ்நாட்டில் நெல் சாகுபடிக்குப் பெயர் பெற்ற மயிலாடுதுறை மாவட்டத்தில், அரிசி ஆலைகளில் இருந்து வெளியேறும் தவிடு (Rice Bran), மிக அதிக ஊட்டச்சத்துகள் கொண்ட சமையல் எண்ணெய்க்கான மூலப்பொருளாகும். இந்தத் தவிட்டைப் பயன்படுத்தி எண்ணெய் தயாரிக்கும் ஆலைகளை அமைக்க அரசு மானியம் வழங்குவதன் மூலம், அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் அதிக லாபம் ஈட்ட முடியும்.
மானியம் எவ்வளவு? யாருக்குத் தகுதி?
தமிழ்நாடு அரசு, அரிசி தவிட்டிலிருந்து எண்ணெய் பிழிந்தெடுக்கும் ஆலைகள் (Rice Brand Oil unit) அமைப்பதற்குத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் இயந்திரங்களை வாங்குவதற்காக ரூ. 30 இலட்சம் வரை மானியமாக வழங்குகிறது.
மானியத்திற்குத் தகுதியுடையோர்:
இத்திட்டத்தின் கீழ் மானியம் பெற பின்வருபவர்கள் தகுதியுடையவர்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
* தனிநபர்
*உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPOs)
* கூட்டுறவு நிறுவனங்கள்
மானியம் பெற இயலாத இனங்கள்
திட்ட மதிப்பீட்டில் ஒரு சில செலவினங்களுக்கு மானியம் வழங்க இயலாது எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது:
* நிலம் வாங்க
* கட்டிடம் கட்ட
புதிய இயந்திரங்களை வாங்குதல், நவீன தொழில் நுட்பங்களைக் கையாளுதல் போன்ற ஆலை அமைப்பதற்கான நேரடிச் செலவினங்களுக்கு மட்டுமே இந்த மானியம் பொருந்தும்.
மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள்
மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், வெளியிட்டுள்ள அறிக்கையில், "மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் சாகுபடி பிரதானமாக உள்ளது. அரிசி தவிடு இன்று வரை குறைந்த விலைக்கு விற்பனையாவது அல்லது வீணடிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்த NMEO திட்டத்தின் மூலம் ஆலைகளை அமைப்பதன் வழி, நமது மாவட்டத்தின் வேளாண் உபபொருளுக்கு மதிப்பு கூட்டுவதுடன், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, மாநில அரசின் ரூ. 30 இலட்சம் மானியத்தைப் பெற்று, அரிசி தவிட்டு எண்ணெய் ஆலைகளை அமைத்து, பொருளாதார ரீதியாகப் பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தொடர்பு விவரங்கள்
இத்திட்டம் தொடர்பான முழு விவரங்களையும் பெறவும், மானியத்தைப் பெறுவதற்கான வழிகாட்டுதல்களைப் பெறவும், ஆர்வமுள்ள தனிநபர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் பின்வரும் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
*அலுவலகம்: வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் துணை இயக்குநர் அலுவலகம்.
*அமைவிடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 5-வது தளம்.
வளர்ந்து வரும் சமையல் எண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்யவும், கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அரசு வழங்கும் இந்தச் சலுகையை மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.





















