தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
திமுக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்ற தொகுதிகளை கணக்கெடுத்து அங்கு தனது கட்சியினரை களமிறக்க நினைக்கிறது பாஜக

நெருங்கும் தமிழக தேர்தல்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 150 நாட்களுக்கும் குறைவான நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் கட்சியின் வெற்றி வாய்ப்பு, மக்களின் மன நிலை, கூட்டணி கட்சிகளின் செல்வாக்கு, தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் மீது மக்களுக்கு உள்ள மதிப்பீடு, தொகுதி பணி தொடர்பாக ஒவ்வொரு கட்சியும் ஆய்வு நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக மீண்டும் ஆட்சியை தக்க வைக்க களப்பணியை தீவிரப்படுத்தியுள்ளது. 200 தொகுதியை இலக்காக வைத்து தேர்தல் பணியை தொடங்கிவிட்டது. எதிர்கட்சியாக உள்ள அதிமுக பொதுச்செயலாலர் எடப்பாடி பழனிசாமி, முதற்கட்ட பிரச்சாரப் பயனத்தையே நிறைவு செய்து, அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறார்.
தேர்தலை எதிர்கொள்ள பாஜக போட்ட பலே பிளான்
பாஜகவைப் பொறுத்த வரையில், அவர்கள் ஒரு வித்தியாசமான உத்தியை கையிலெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது கடந்த 2021 தேர்தலில் திமுக கூட்டணி வென்ற 159 தொகுதிகளில், அவர்கள் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்ற தொகுதிகளை கணக்கெடுத்து அங்கு தனது கட்சியினரை களமிறக்கி வருகிறது. அதில் மிக முக்கியமானது சென்னையில் உள்ள தியாகராயர் நகர் சட்டமன்ற தொகுதி. காரனம், அங்கு திமுக வேட்பாளர் ஜெ. கருணாநிதி வென்றிருந்தாலும், அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் தி.நகர் சத்தியா என்று அழைக்கப்படும் சத்தியநாராயணனை விட வெறும் 137 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்று வென்றார். எனவே, இந்த தொகுதியை அதிமுகவிடம் இருந்து பாஜக கேட்டு பெற திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே தியாகராய நகர் தொகுதியில் பாஜகவிற்கும் கணிசமான வாக்குகள் உள்ளன. இந்த தொகுதியில் தான் பாஜக மூத்த தலைவர்களாக உள்ள எச்.ராஜா, ஜனா கிருஷ்ணமூர்த்தி போன்றோர் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றுள்ளனர். எனவே 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக உதவியோடு பாஜக வேட்பாளர் போட்டியிட்டால் இந்த தொகுதியில் எளிதாக வெற்றி பெற முடியும் என பாஜக தலைமை கணக்கிட்டுள்ளது.
தி.நகரை குறிவைக்கும் பாஜக
இதனையடுத்து கடந்த முறை துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர்பாபுவிடம் தோல்வி அடைந்த வினோஜ் பி.செல்வம், இந்த முறை தி.நகர் தொகுதிக்கு பல்டி அடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் கடந்த 4 மாதங்களாக தியாகராய நகர் தொகுதியில் முகாமிட்டு, அங்கு போட்டியிட களப்பணியை வினோஜ் செய்து வருகிறார். தி.நகர் தொகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். ஆனால் அதிமுகவின் கோட்டையாக உள்ள தி.நகர் தொகுதியில் பாஜக உள்ளே நுழைய திட்டமிடுவது அதிமுகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அதிலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு அதிமுக கடும் ’டஃப் பைட்’ கொடுத்த தொகுதியாக தி.நகர் தொகுதி உள்ளது.
தி.நகரை பாஜகவிற்கு விட்டுக்கொடுக்குமா அதிமுக
மேலும் எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராகவும், மாவட்டச் செயலாளராகவும் தி.நகர் சத்யா உள்ளார். எனவே அவரது தொகுதியை பறித்து பாஜகவிற்கு அதிமுக கொடுக்குமா.? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரம் 137 வாக்குகளில் மட்டுமே திமுக வென்ற தொகுதி என்பதாலும், SIR மூலம் சில வாக்காளர்கள் அந்தத் தொகுதியின் பட்டியலில் இருந்து நீக்கப்படும் பட்சத்தில், தி.நகரில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக பாஜக தரப்பு எண்ணுகிறது. இந்த விவகாரம் தி.நகர் அதிமுகவினர் மத்தியில் புகைச்சலைக் கிளப்பியுள்ளது. ஒரு வேளை பாஜகவிற்கு தி.நகர் தொகுதி ஒதுக்கினால் அதிமுகவினர் பாஜக வேட்பாளருக்காக பணியாற்றுவார்களா.? அதிமுக வாக்குகள் பாஜகவிற்கு டிரான்ஸ்ஃப்ர் ஆகுமா? என்பதை எல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்






















