Bihar SIR-EC Vs SC: பீகார் வாக்காளர் பட்டியலில் மீண்டும் சர்ச்சை; தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
பீகார் இறுதி வாக்காளர் பட்டியலை சமீபத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதிலும், நீக்கப்பட்ட 3.6 லட்சம் வாக்காளர்கள் குறித்து சர்ச்சை எழுந்த நிலையில், உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

பீகார் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. அதில் 21 லட்சத்திற்கும் மேலான புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்ட நிலையில், 3.6 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இது சர்ச்சையான நிலையில், தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவு என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
இறுதி வாக்காளர்கள் பட்டியலில் நீக்கப்பட்ட 3.6 லட்சம் வாக்காளர்கள்
பீகாரில் நவம்பர் மாதம் 6, 11 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் நிலையில், 14-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னதாக, இதை முன்னிட்டு அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், வாக்காளர் எண்ணிக்கை 7 கோடியே 89 லட்சத்திலிருந்து, 7 கோடியே 24 லட்சமாக குறைந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில், வாக்காளர்களின் எண்ணிக்கை 7 கோடியே 42 லட்சமாக உயர்ந்தது.
வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து இதில் 21 லட்சத்து 53 ஆயிரம் வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்ட நிலையில், 3 லட்சத்து 66 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர். இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
இந்த சூழலில், ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகள் நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரிடம், நீதிமன்ற உத்தரவு, தேர்தல் பணியில் வெளிப்படைத் தன்மைக்கு வழிவகுத்துள்ளதாக நீதிபதிகள் கூறினர்.
மேலும், வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அதில், இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்களை நீக்குவது சரி, ஆனால், வேறு பாயருடைய பெயரை நீக்குவதாக இருந்தாலும, 21-ம் விதியை கடைபிடிக்குமாறு ஏற்கனவே நீதிமன்றம் கூறியதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
அதோடு, நீக்கப்பட்டவர்களின் விவரங்களை தேர்தல் ஆணைய அலுவலகங்களில் வைக்குமாறு தெரிவித்திருந்ததாகவும், தற்போது இறுதிப் பட்டிபலில், வரைவு வாக்காளர் பட்டியலைவிட அதிக வாக்காளர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அவர்கள் ஏற்கனவே நீக்கப்பட்டவர்களா, அல்லது புதிய வாக்காளர்களா என்ற குழப்பம் தீர்க்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து பதிலளித்த தேர்தல் ஆணைய வழக்கறிஞர், இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட பெரும்பாலான பெயர்கள், புதிய வாக்காளர்களுடையவை என தெரிவித்தார். மேலும், சில பழைய வாக்காளர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டதாகவும், நீக்கப்பட்ட வாக்காளர்கள் குறித்து இதுவரை புகாரோ, மேல் முறையீடோ வரவில்லை என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, நீக்கப்பட்ட 3 லட்சத்து 66 ஆயிரம் வாக்காளர்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் என்ன தரவுகள் உள்ளனவோ, அவற்றை வரும் 9-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், 9-ம் தேதி விசாரணை நடைபெறும் என்றும், எல்லோரிடமும் வரைவுப் பட்டியலும், இறுதிப் பட்டியலும் உள்ளதால், அவற்றை ஒப்பிட்டு ஆய்வு செய்து, தேவையான தரவுகளை சமர்ப்பிக்க முடியம் என்றும் தெரிவித்த நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.





















