Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: ”கோட்” படப்பிடிப்பின் போது ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தியதாக, தெலுங்கு திரைப்பட இயக்குனர் மீது தமிழ் நடிகை திவ்யபாரதி குற்றம்சாட்டியுள்ளார்.

Divyabharathi: இயக்குனரின் ஆபாசமான பேச்சுகளுக்கு சக நடிகர் சுதீர் அதிருப்தியை கூட வெளிப்படுத்தவில்லை என திவ்யபாரதி வேதனை தெரிவித்துள்ளார்.
திவ்யபாரதி குற்றச்சாட்டு:
தெலுங்கு திரைப்படமான 'GOAT' படப்பிடிப்பின் போது பெண்களை வெறுக்கும் விதமாக நடந்து கொண்டதாக, இயக்குனர் நரேஷ் குப்பிலியை நடிகை திவ்யபாரதி கடுமையாக சாடியுள்ளார். தனது அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்ட அவர், இயக்குனர் தன்னை இழிவுபடுத்தும் வார்த்தையைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டினார். சக நடிகர் சுடிகாலி சுதீர் இந்த விவகாரத்தில் ஏன் தலையிடவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது பதிவு இப்போது திரைப்படத் துறையில் பெண்களுக்கான மரியாதை மற்றும் பணியிட கலாச்சாரம் குறித்த புதிய விவாதங்களை தூண்டியுள்ளது.
பிரச்னை என்ன?
இயக்குனர் நரேஷின் பதிவு என திவ்யபாரதி ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவரை இயக்குனர் ”சிலகா” அடைமொழியை குறிப்பிட்டு அடையாளப்படுத்தியுள்ளார். அந்த வார்த்தைக்கு பறவை என பொருள் இருந்தாலும், தெலுங்கில் பெண்களை மரியாதைக்குறைவாக அழைக்க பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. அதோடு, திவ்யபாரதி இரண்டாம் நிலை நடிகையாக மட்டுமே பொருந்துவார் என்றும் இயக்குனர் குறிப்பிட்டுள்ளார். இது தனக்கு நகைச்சுசையாக தெரியவில்லை என்று, பாலின பிரச்னையாகவே தெரிகிறது என்றும் நடிகை சாடியுள்ளார். மேலும், “இது ஒரு ஒற்றை சம்பவம் அல்ல. இந்த இயக்குனர் படப்பிடிப்பு தளத்திலும் இதே பாணியில் தான் நடந்து கொண்டார். மீண்டும் மீண்டும் பெண்களை அவமதித்தார். ஆனாலும், அந்த படத்தில் என்னுடன் சேர்ந்து நடித்த சுடிகாலி சுதீர் அமைதியாக இருப்பதைப் பார்த்து எனக்கு மிகவும் ஏமாற்றம் அளித்தது” என திவ்யபாரதி குறிப்பிட்டுள்ளார்
ஆதரவும், எதிர்ப்பும்...
திவ்யபாரதியின் குற்றச்சாட்டுகளுக்கு ஒருபுறம் ஆதரவும், மறுபுறம் எதிர்ப்பும் எழுந்துள்ளது. இயக்குனர் இயல்பாகவும், நகைச்சுவையாகவும் பேசியதாகவே தெரிகிறது என சிலர் தெரிவிக்கின்றனர். அதேநேரம், உங்களது நகைச்சுவை மற்றொருவருக்கு அசவுகரியமாக இருந்தால் அதனை நிறுத்திக் கொள்வதே பண்பு என மற்றொரு தரப்பின தெரிவித்து வருகின்றனர். விமர்சனங்களுக்கு பதிலடி தந்த திவ்யபாரதி, “தமிழ் சினிமாவில் ஒரே குழு, நடிகர்கள் மற்றும் குழுவினருடன் நான் பலமுறை மோதல்கள் இல்லாமல் பணியாற்றியுள்ளேன். இந்த ஒரு இயக்குனர் மட்டுமே எல்லை மீறி அவமரியாதையான கருத்துக்களை வெளியிட்டார். அவர் அதை பகிரங்கப்படுத்தத் தேர்ந்தெடுத்தார். அதற்கு பதிலளிக்க எனக்கு முழு உரிமையும் உள்ளது” என மற்றொரு பதிவையும் வெளியிட்டுள்ளார். அதேநேரம், இயக்குனர் நரேஷ் தரப்பில் இருந்து இந்த குற்றச்சாட்டுக்கு தற்போது வரை எந்த விளக்கமும் வெளியாகவில்லை.
திவ்யபாரதி திரைப்பயணம்:
கோவையை சேர்ந்த திவ்யபாரதி மாடலாக சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்ததை தொடர்ந்து, தமிழ் திரையுலகில் பேச்சுலர் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகினார். தொடர்ந்து மகாராஜா மற்றும் கிங்ஸ்டன் படத்திலும் நடித்து இருந்தார். இதைதொடர்ந்து, தமிழில் மதில் மேல் காதல் மற்றும் தெலுங்கில் G.O.A.T ஆகிய படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதுபோக, லிங்கம் எனும் வெப் சீரிஸிலும் திவ்யபாரதி பணியாற்றி வருகிறார்.





















