அரசு அறிவித்துள்ளதை விட கூடுதலாக பயிர்கள் பாதிப்படைந்துள்ளன - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
அரசு அறிவித்துள்ளதை விட கூடுதலாக பயிர்கள் பாதிப்படைந்துள்ளது - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று சீர்காழியில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.சீனிவாசன் தலைமை நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, முன்னாள் எம்.எல்.ஏவும், விவசாயிகள் சங்க மாநில நிர்வாக குழு உறுப்பினருமான கே.உலகநாதன், மாவட்ட விவசாய சங்கச் செயலாளர் வீரராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பின்னர் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், வேளாண் பாதுகாப்பு மண்டலத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்த்ததற்கு தமிழக முதல்வருக்கு நன்றி. அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களையும் சேர்க்க வேண்டும் என்று கோரியிருந்தோம். அது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும். தற்போது பெய்த மழையில் மாவட்டத்தில் 3 வட்டாரங்களில் 2,838 ஹெக்டேர் பயிர் பாதிப்பு, 150 வீடுகள் பாதிப்பு, 39 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக என அரசு சொல்லியிருக்கிறது. ஆனால், இன்னும் கூடுதல் பாதிப்பு உள்ளது. மழையால் மட்டும் அல்ல, மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்பட்டாலும், மயிலாடுதுறை மாவட்டத்துக்கு முழுமையாக தண்ணீர் வந்து சேராதாதலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகிறது. கடந்த 2022-23 -ல் தமிழக முதல்வர் இப்பகுதிகளை பார்வையிட்டு உரிய உதவிகள் செய்யப்படும் என்று அறிவித்தார். ஆனால், குறைந்தபட்ச நிவாரணத்தை அறிவித்து, பின்னர் பேரிடர் பாதிப்பின் அடிப்படையில் காப்பீட்டு இழப்பீடு கிடைக்கும் என்று சொன்னார். நிகழாண்டு காப்பீட்டு திட்டத்தை அறிவிக்கும்போது ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் மிகப்பெரிய துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான காப்பீட்டு திட்டமா? கம்பெனிகளுக்கு லாபம் அளிக்கும் திட்டமா? என்ற கேள்வி எழுகிறது. ஆகவே காப்பீட்டு திட்டத்தைச் சொல்லி அரசு தட்டிக் கழிக்க கூடாது. எனவே பாதிப்புகள் குறித்து உரிய வகையில் கணக்கிட்டு, உரிய உதவிகளை செய்ய வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் நிறுவனத்துக்காக அரசு நிலம் கையகப்படுத்துதலைக் கண்டித்து போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். 20 விவசாயிகள் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். 7 விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் மீது குண்டர் தடுப்பச் சட்டத்தை ஏவுவதற்கு என்ன அவசியம் ஏற்பட்டது? விவசாயிகள் தங்கள் நிலம், மண் பறிபோகும்போது அதற்கு எதிரக குரல் எழுப்புகிறார்கள். அவர்களுக்கு உதவியாக அரசு இருப்பதற்கு பதிலாக, தனது அதிகாரத்தை பயன்படுத்தி, விவசாயிகளை நிர்ப்பந்தப்படுத்தி வெளியேற்றுவது என்பது என்ன முறை?
நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தபோதே, அதனை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எதிர்த்தது. அந்த சட்டப்படி எவ்வித கேள்வியுமின்றி 100 ஏக்கருக்கும் மேல் நிலங்களை எடுக்கலாம் என்ற திட்டத்தை எதிர்த்துக் கொண்டிருக்கும் வேளையில், மனிதாபிமானமற்ற முறையில் விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு இயந்திரங்களை நம்பி, இந்த அரசு பழிச்சொல்லுக்கு ஆளாகக் கூடாது என முதல்வரை கேட்டுக் கொள்கிறோம். முதல்வர் உடனடியாக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து, விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று பரிசீலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காப்பீட்டுத் திட்டத்துக்கான பிரீமியம் செலுத்துவதற்கான தேதியை இந்த மாத இறுதி வரை நீட்டிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கான நிவாரண உதவிகளை முறையாக அறிவித்து தமிழக அரசு வழங்க வேண்டும் என்றார்.