அறுவடை செய்த நெல்லுடன் காத்திருக்கும் விவசாயிகள் - மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் வேதனை
மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் விவசாயிகள் பல நாட்களாக காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
காவிரி கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து போதிய தண்ணீர் திறக்கப்படாதது, பயிர்களுக்கு தேவையான நேரத்தில் மழை இன்றி அறுவடை செய்யும் சமயத்தில் மழைப்பொழிவு, நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வரும் சூழல் என பல்வேறு மின்னல்களுக்கு இடையே இம் மாவட்ட விவசாயிகள் தங்களின் வாழ்வாதார காக்க விவசாயத்தை நம்பி செய்து வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்தாண்டு மயிலாடுதுறை , தரங்கம்பாடி, சீர்காழி, குத்தாலம் ஆகிய மூன்று தாலுக்காகளில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்தனர்.
அதில் அறுவடை சமயத்தில் பெய்த கனமழை காரணமாக சுமார் 50,000 ஏக்கர் பரப்பளவில் நெல்மணிகள் மழை நீரில் மூழ்கி சேதமானது. இவற்றுக்கு கணக்கெடுப்பு நடைபெற்ற நிலையில் அதற்கான நிவாரணம் அறிவிக்கப்படவில்லை. இந்த சூழலில் அறுவடை தொடங்கிய உடனே மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் நூற்றுக்கும் அதிகமான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இந்த ஆண்டு விவசாயிகள் கடந்த 20 நாட்களுக்கு மேலாக அறுவடையில் ஈடுபட்டு வரும் நிலையில் மாவட்டத்தில் தேவையான அளவு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல் உள்ளதால் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளுடன் நாள் கணக்கில் காத்துக் கிடக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி 22 -ம் தேதி காலகஸ்திநாதபுரத்தில் ஒரு அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மாவட்டத்தில் முதல் கட்டமாக 60 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்றும், தேவைக்கேற்ப படிப்படியாக கொள்முதல் நிலையங்கள் அதிகப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் சீர்காழி பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் இதுநாள் வரை திறக்கப்படாததால் அறுவடை செய்த நெல்மூட்டைகளுடன் கடந்த 15 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் காத்திருக்கும் அவலநிலை தள்ளப்பட்டுள்ளனர். சீர்காழி, கொள்ளிடம் வட்டாரத்திற்கு உட்பட்ட வைத்தீஸ்வரன்கோயில், திருவெண்காடு, எடகுடிவடபாதி, திட்டை, செம்மங்குடி, கடவாசல், ஆர்ப்பாக்கம், அத்தியூர் உள்ளிட்ட 100 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் மேட்டூர் பாசன தண்ணீர் கடைமடைக்கு திறந்துவிடாத நிலையில் பம்புசெட், மழைநீரை நம்பி சாகுபடி செய்திருந்தனர்.
கடந்த சில வாரத்திற்கு முன்பு பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து பாதிப்பு ஏற்பட்டது. நெல்வயலில் தேங்கிய மழைநீர் வடியாமல் மோட்டார் வைத்து அதனை இரைக்கும் பணியையும் கூடுதல் செலவு செய்து விவசாயிகள் மேற்கொண்டனர். இதனிடையே கனமழையால் பாதிக்கப்பட்டது போக எஞ்சிய சம்பா நெற் பயிர்களை கடந்த 15 தினங்களுக்கு மேலாக சீர்காழி, கொள்ளிடம் வட்டாரத்தில் விவசாயிகள் அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். அறுவடை செய்யப்பட்ட நெல்மூட்டைகளை அந்தந்த பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்று அடுக்கிவைத்து விவசாயிகள் இரவு, பகலாக காத்திருந்து நெல்மூட்டைகளை பாதுகாத்து வருகின்றனர்.
இதுவரை நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாத நிலையில் விவசாயிகள் நெல் மூட்டைகளை பனி, வெயில் ஆகியவற்றால் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறு விவசாயிகள் பொருளாதார நெருக்கடியால் கடனுக்கு நெல்லை வியாபாரிகளிடம் விற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சில விவசாயிகளிடம் போதிய அளவு தார்பாய், சாக்குபைகள், படுதா இல்லாததால் அறுவடை செய்யும் பணியை தள்ளி வைத்துள்ளது. மேலும் சில விவசாயிகள் அறுவடை செய்த நெல்மணிகளை வீட்டில் கொட்டிவைத்துள்ளனர். இதனால் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்து நெல்மூட்டைகளை கொள்முதல் செய்திடவேண்டும் என விவசாயிகள் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.