கை கொடுக்கும் நம்பிக்கையில் களை எடுப்பு: தஞ்சை விவசாயிகள் மும்முரம் எதற்காக?
நடப்பு ஆண்டு பருத்திக்கு உரிய விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் திருக்கருகாவூர், தேவராயன்பேட்டை, பண்டாரவாடை உட்பட பகுதிகளில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருக்கருகாவூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பருத்தி பயிரில் களை எடுக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். நெல்லுக்கு மாற்றுப்பயிராக பருத்தி சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் வெகுவாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பொதுவாக, பருத்தி பரந்த அளவிலான மண்ணில் நன்றாக செழித்து வளரும். குறிப்பாக, நடுத்தர முதல் கனமான மண் வரை நன்கு வளரும். பருத்தி சாகுபடிக்கு கருப்பு பருத்தி மண் மிகவும் ஏற்ற மண்வகையாகும். மேலும், இது 5.5 முதல் 8.5 வரையிலான கார அமில அளவை பொறுத்துக்கொள்ளும் தன்மையுடையது.
பருத்தி பயிர் வெப்பமான மற்றும் ஈரப்பதமான சுற்றுச்சூழலில் நன்றாக வளரும். 21 முதல் 27˚C வரையிலான வெப்பநிலை மற்றும் 500 முதல் 700 மி.மீ வரையிலான ஆண்டு மழைப்பொழிவு பருத்தியின் உகந்த வளர்ச்சிக்கு ஏற்றது.
மண்ணின் வகையைப் பொறுத்து, வயலை 15 முதல் 20 செ.மீ ஆழம் வரை வளைப்பலகைக் கலப்பையின் மூலம் நன்கு உழுது, பின்னர் இரண்டு அல்லது மூன்று முறை நன்கு பலுகுகள் கொண்டு உழ வேண்டும். வயலில் குச்சிகளை விடக்கூடாது. விதைப்புக்கு முன் நீர்ப்பாசனம் செய்வது, பயிர் சிறப்பாக அமைய மிகவும் அவசியம்.
விதையை கந்தக அமிலத்துடன் 100 மில்லி/கிலோ விதைக்கு என்ற விகிதத்தில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். பிசிறு பருத்தி நார்கள் எரிக்கப்பட்டு, அதன் பஞ்சு இழைகள் நீக்கப்பட்ட விதையை தண்ணீரில் நன்கு கழுவி நிழலில் உலர்த்த வேண்டும். பருத்தி பயிர் தண்ணீர் தேங்குவதற்கு அதிக உணர்திறன் கொண்டது. நீர்ப்பாசனத்திற்கான மிக முக்கியமான நிலைகள் சதுர நிலை, பூக்கும் நிலை மற்றும் காய் வளர்ச்சி நிலை. பொதுவாக, காரீஃப் மற்றும் ராபி பருவங்களில் 2-3 மற்றும் 6-7 நீர்ப்பாசன முறைகள் சிறந்த பருத்தி பயிர் வளர்ச்சிக்கு மற்றும் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். தேவையற்ற உரங்கள் வீணாவதைத் தவிர்க்கவும் மற்றும் லாபத்தை அதிகரிக்கவும், மண் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் உரங்களை வழங்க வேண்டும். பருத்தி பயிர் சாகுபடியில் நல்ல லாபம் கிடைப்பதால் நெல் பயிருக்கு மாற்றாக பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா திருக்கருகாவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கோடை பயிராக பருத்தி பயிர் செய்யப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கோடையில் நெல், உளுந்து பயிருக்கு மாற்றாக பருத்தி அதிகளவில் சாகுபடி செய்து வந்தனர். பருத்தி குவிண்டாலுக்கு ரூ.11 ஆயிரம் வரை விலை போனது. பருத்தி சாகுபடியில் அதிக லாபம் கிடைத்து வந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக பருத்திக்கு சரியான விலை கிடைக்கவில்லை. பருத்தி குவிண்டாலுக்கு அதிகப்படியான விலை ரூ.7 ஆயிரத்தை தாண்டவில்லை. இதனால் பருத்தி சாகுபடி விவசாயிகள் பெரிய அளவில் லாபத்தை எட்டவில்லை. இருப்பினும் பருத்தி சாகுபடி பல்வேறு காலக்கட்டத்தில் விவசாயிகளுக்கு லாபத்தை கொடுத்துள்ளது. முறையான பராமரிப்பு இருந்தால் நன்கு லாபம் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் தற்போதும் பருத்தி சாகுபடியை மேற்கொண்டுள்ளனர்.
நடப்பு ஆண்டு பருத்திக்கு உரிய விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் திருக்கருகாவூர், தேவராயன்பேட்டை, பண்டாரவாடை, திருவையாத்துக்குடி, பொன்மான்மேய்ந்தநல்லூர், நாகலூர், கரம்பத்தூர், இடையிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கோடை பயிராக பருத்தியை சாகுபடி செய்துள்ளனர். இந்த பகுதியில் தற்போது பருத்தி பயிரில் களை எடுக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பருத்தி செடிக்கு களை கொத்தி, உரமிட்டு நீர் பாய்ச்சும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையிலும் விவசாயிகள் களை எடுக்கும் பணியை மும்முரமாக மேற்கொண்டுள்ளனர்.





















