மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட மத்திய குழு - நிறைவேறுமா? விவசாயிகளின் கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜனவரி 18 அன்று 22 செ.மீ.அளவிற்கு கனமழை பெய்த காரணத்தினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிப்படைந்தது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்த மத்திய குழுவினரிடம் நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பருவம் தவறிய மழை பொழிவு
மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த வாரம் பருவம் தவறி பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சேதமடைந்தன. இதன் காரணமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் நெல்லின் ஈரப்பதம் அளவான 17 சதவீதம் என்பதை தளர்த்தி 22 சதவீதமாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
மத்திய குழு ஆய்வு
இதனை அடுத்து தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு இந்த கோரிக்கையினை வலியுறுத்தியது. அதன் தொடர்ச்சியாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக கொண்டு வந்து வைக்கப்பட்ட நெல்மணிகளையும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயல்வெளியில் உள்ள பயிர்களையும் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.
மாதிரிகள் சேகரிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் திருவிளையாட்டம், மேமாத்தூர், கீழ்மாத்தூர், ஆத்துக்குடி, சேமங்கலம், வள்ளுவக்குடி, கொண்டல், இளந்தோப்பு, மணல்மேடு ஆகிய பகுதிகளில் உள்ள வயலில் சாய்ந்த நெற்பயிர்கள் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உணவு மற்றும் விநியோகம் துறை உதவி இயக்குனர் பிரீத்தி, தொழில்நுட்ப அலுவலர் அபிஷேக் பாண்டே, மேலாளர் இந்திய உணவுகள் கழகம் கிரிஷ், முதுநிலை மேலாளர் (தரக்கட்டுப்பாடு )செந்தில் உள்ளிட்ட மத்திய குழுவினர் ஆய்வினைத் தொடங்கி, நெல்லின் ஈரப்பதத்தை ஆய்வு செய்து, அதன் மாதிரிகளை சேகரித்து சென்றனர்.
விவசாயிகள் கோரிக்கை
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தன்னிறைவு பசுமை கிராமங்கள் இயக்க தேசிய அமைப்பாளர் ஆறுபாதி ப.கல்யாணம் கூறுகையில், நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக தளர்த்தி கொள்முதல் செய்வதோடு மட்டும் அல்லாமல், தரம் திரிபுகளான நெல்லின் நிறம் மற்றும் முளைத்த நெல்கள் ஆகியவற்றையும் கருத்தில் கொள்ளாமல் கொள்முதல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளேன். மேலும் 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதத்துக்கு இடைப்பட்ட சதவிகிதத்தில் உள்ள நெல்லுக்கு விவசாயிகளிடமிருந்து எந்த தொகையும் பிடித்தம் செய்யக் கூடாது என அவர் கோரிக்கை விடுத்தார். மேலும் மாநில அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்று தர வேண்டுமென மாநில அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நன்றி கூறிய ஆட்சியர்
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜனவரி 18 அன்று 22 செ.மீ.அளவிற்கு கனமழை பெய்த காரணத்தினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிப்படைந்தது. அதனால் நெல்லும் ஈரப்பதம் அதிகமாக இருந்தது. நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளினால் தர முடியாத சூழ்நிலை இருந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, இன்று இந்த மத்திய குழுவானது ஆய்வு செய்துள்ளனர். இவர்கள் அனைத்து தாலுக்காவிலும் ஆய்வு செய்து, நெல்லில் எந்த அளவிற்கு ஈரப்பதம் உள்ளது என்பதை கண்டறிந்துள்ளனர். ஆய்விற்கு எடுத்துள்ளனர். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதத்திற்கு மேல் 22 சதவீதம் வரை அனுமதிக்க வேண்டும் என அரசிற்கு பரிந்துரை செய்ய உள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அரசிற்கும், விவசாயிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மேலாளர் (தரக்கட்டுப்பாடு) செந்தில்குமார் நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் மோகன், வேளாண் துறை இணை இயக்குநர் சேகர், மாவட்ட வழங்கல் அலுவலர் அர்ச்சனா ஆகியோர் உடன் இருந்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

