(Source: ECI/ABP News/ABP Majha)
தருமபுரி: வறட்சியால், காய்ந்து கருகி வரும் பப்பாளி தோட்டம்... ஏக்கருக்கு ரூ.1 லட்சம் பாதிப்பு - விவசாயிகள் கவலை
பாலக்கோடு பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சியால், காய்ந்து கருகி வரும் பப்பாளி தோட்டம். ஏக்கருக்கு 1 இலட்சம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை.
தருமபுரி மாவட்டம் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட மாவட்டம். இங்குள்ள விவசாயிகள் நெல், கரும்பு, மஞ்சள், வாழை, மரவள்ளி கிழங்கு மற்றும் தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, உள்ளிட்ட காய்கறிகளும், மல்லி, முல்லை, சம்பங்கி, சாமந்தி, செண்டுமல்லி, கோழி கொண்டை உள்ளிட்ட பூக்களும் சாகுபடி செய்து வருகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் மானாவரி பயிர்களை, பயிர் செய்து வருகின்றனர். இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில், பாலக்கோடு, அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களில் அதிக அளவில் விவசாயிகள் பப்பாளி சாகுபடி செய்துள்ளனர். இந்த பகுதியில் விளையும் பப்பாளிப் பழங்கள் தமிழகம் மட்டுமில்லாது, வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுவது வழக்கம். குறிப்பாக தருமபுரி மாவட்டத்தில் ரெட்லேடி வகை பப்பாளி செடிகள் அதிக அளவில் பரியிடப்படுகிறது. இதில் வைட்டமின் ஏ, பீட்டா புரோட்டின் வைட்டமின் சி, கால்சியம், இரும்பு சத்து ஆகிய சத்துகள் நிறைந்திருப்பதால், கண் பார்வை திறன் அதிகரிப்பு, இருதய நோய்களைத் தடுக்கும் தன்மை பப்பாளிக்கு இருப்பதால், மக்களும் விரும்பி வாங்கும் பழமாக பப்பாளி இருந்து வருகிறது.
அதேப்போல், இந்த ரக பப்பாளி பயிர் சாகுபடி செய்வதற்கு கால நிர்ணயம் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் பயிர் செய்யலாம் என்பதால் ஒரு ஏக்கருக்கு ஆயிரம் செடிகளை நடவு செய்யப்பட்டு 8 மாதங்களில் பப்பாளி பழங்கள் அறுவடைக்கு தயாராகவிடும். ஒரு ஏக்கரில் பப்பாளி சாகுபடியில் செய்தால், வாரம் ஒருமுறை ஒரு டன் வரை பப்பாளிப்பழம் செய்யலாம். அதனால் நல்ல லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தருமபுரி மாவட்டத்தில் ஒரு சில விவசாயிகள் பப்பாளி சாகுபடி செய்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக போதிய மழையின்றி நீர்நிலைகள் வறண்டுவிட்டன. இதனால் விவசாய பயிர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தற்போது பாலக்கோடு பகுதியில் தண்ணீரின்றி பயிர்கள் கருகி வருகிறது. ஆனால் நல்ல தண்ணீர் வசதி இருந்திருந்தால், 3 ஆண்டுகள் நல்ல பலன்கொடுத்திருக்கும். இந்த விவசாயிகளுக்கு சுமார் 10 இலட்சம் ரூபாய் வரை இலாபம் ஈட்டிருக்க முடியும். தற்போது போதிய தண்ணீர் வசதி இல்லாமல் பப்பாளி செடிகள் கருகியுள்ளதால், ஏக்கருக்கு 1 இலட்சம் வரை விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே உரிய ஆய்வு செய்து கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.