IPL Final 2024 | WPL - IPL SAME TO SAME ஸ்க்ரிப்ட் இது நம்ம லிஸ்ட்லயே இல்ல!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியின் சூழலும், மகளிர் பிரீமியர் லீகின் இறுதிப்போட்டியின் சூழலும் ஒரே மாதிரியாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக நிறைவுபெற்றது. லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் ஆதிக்கம் செலுத்திய, கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. அதில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் தலைமயிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்நிலையில் தான் இணையத்தில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது. அதன்படி, நடப்பாண்டு ஐபில் மற்றும் மகளிர் பிரீமியர் லீகின் இறுதிப்போட்டியில் பல்வேறு ஒற்றுமைகள் இருப்பது கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டனான மெக் லானிங் தலைமையிலான டெல்லி அணியும், இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணியும் மோதின.இந்தியன் பிரீமியர் லீகின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டனான பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணியும், இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.
டபள்யூபிஎல் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற மெக் லானிங் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதேபோன்று, ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியிலும் டாஸ் வென்ற பேட் கம்மின்ஸும் முதலில் பேட்டிங்கையே தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த டெல்லி மகளிர் அணி 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதேபோன்று, முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியும், 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் டெல்லி அணி நிர்ணயித்த 114 ரன்கள் என்ற இலக்கை, பெங்களூரு அணி எட்டிப்பிடித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதேபோன்று, இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணி நிர்ணயித்த 114 ரன்கள் என்ற இலக்கை, கொல்கத்தா அணி எட்டிப்பிடித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்படி, நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியின் சூழலும், மகளிர் பிரீமியர் லீகின் இறுதிப்போட்டியின் சூழலும், பல்வேறு விதங்களில் ஒத்துப்போவதை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. இதென்ன சேம் டூ சேம் ஒரே ஸ்க்ரிப்டா இருக்கே? எனவும் பிசிசிஐ-யை டேக் செய்து ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.